Wednesday, November 28, 2012

rukmiNidevi-part-2


Thu, 9 Oct 2003
மஹா ஜனங்களுக்கு வந்தனம்,
எனது பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டில் அனைவரும் வேண்டாம் என்றபோதும்
பிடிவாதமாக ஓவியப் பள்ளியில் போய் சேர்ந்தேன். ஓவியர் ஸ்ரீநிவாசுலுவிடம்
அதற்காக உரிய பயிற்சி எடுத்துக்கொண்டேன். அவர்தான் என் தந்தையிடம்
சொல்லி இதற்கு உடன்படவைத்தார். பின் நாளில் நான் படித்த பெசன்ட் பள்ளியிலேயே என் ஆசிரியர் ஸ்ரீநிவாசுலுவின் இடத்தில் எனக்கு வேலை கிடைத்தது. என் ஆசிரியர்கள் பலருடன் நானும் வேலை செய்தது ஒரு நூதனமான அனுபவம். ருக்மிணி தேவி நவீன ஓவியத்தை ஒப்புக்கொண்டது இல்லை. என்னை வேலைக்கு எடுத்துக் கொண்ட சமயம் சொன்னார், "நாகராஜன் நீ ஸ்ரீநிவாசுலுவின் சீடன் என்றுதான் உனக்கு இந்த வேலை கொடுக்கிறேன். உன் நவீன ஓவியத்தை நான் வெறுக்க வில்லை. ஆனால், எனக்கு அது வேண்டாம். ஸ்ரீநிவாசுலுவின் இடத்தை நீ நிரப்ப வேண்டும்” அதற்குப் பழுதில்லாமல் நான்அங்கு ஏழு ஆண்டுகள் பணி செய்தேன். அவர் அவ்வப் போது பள்ளிக்கு வருகை தருவார். காலை இறை வணக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வார். ஓவியக் கூடத்துக்கும் வருவார். மாணாக்கர்களின் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடுவார். என் நவீன ஓவியங்களை பற்றி ஏதும் சொல்ல மாட்டார். அவைகளை படைக்க எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருந்தது.
ஒரு சமயம் நான் ராஜஸ்தான் பாணி ஓவியம் ஒன்றை பெரிதுபடுத்தி (8க்கு 5ந்து அடிகள்) எண்ணெய் வண்ணத்தில் தீட்டிக் கொண்டிருந்தேன். அது முடியும் தருவாயில் அவர் அதைக் காண நேர்ந்தது. "இந்த ஓவியம் யாருக்குப்போய்
அடையுமோ அவரைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன்" என்று சொன்னதை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் திறமையை அவர் ஒப்புக்கொண்டதாகவே பூரித்துப் போனேன்.

    காளிதாசனின் "ஸாகுந்தலம்" அவரால் நாட்டிய நாடகமாக்கப்பட்டது. அது நடனமும் பாத்திரங்கள் வசனம் பேசுவதும் இணைத்து உருவாக்கப்பட்டது. வட மொழியில் அமைந்தது. அதில் வரும் மீனவன் (சகுந்தலையின் மோதிரத்தை விழுங்கிய மீனைப் பிடிப்பவன்) வேடத்தை நான் நடிக்க அவர் தேர்ந்தெடுத்தார். தினமும் பிற்பகல் ஒத்திகைக்குச் செல்வேன். அப்போது அவர் கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருக்கும் திறமையை முழுவதுமாகப் பயன் படுத்தும் திறமையை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. திரும்பத் திரும்பச் செய்து பழகி, மெருகு ஏற்றும் வழியை அவர்களுக்கு அவர் பயில் வித்தார். இரண்டாந்தரமான, ஏனோ தானோ என்பது போன்ற படைப்புக்களை அவர் எப்போதுமே ஏற்றுக்கொண்டது இல்லை. அவ்விதக் கலைஞர்களை உரிய தருணத்தில் இழுத்தும் பிடிப்பார். அவர் பேசாமல் இருந்தாலே பெரிய புகழ்ச்சியாக மற்றவர் நினைத்தனர்.  மேடை அமைப்பு, ஒளி அமைப்பு, உடை யலங்காரம், பக்கவாத்தியம், ஒப்பனை என்று சகல துறைகளிலும் முழுமையான முடிவுகள் கொண்டவராக இருந்தார்.
    அரங்கத்தில் பின்புறம் அமையும் திரை தொங்கல் வெகு நேர்த்தியாகவும் ஓவியரின் திறமையை முழுவதும் உள்ளடக்கியதாகவும், இருந்ததில் அவருடைய பங்கு வெகு முக்கியம். ஸ்ரீநிவாசுலுவிடம் முதலில் காட்சியை விளக்கி சிறிய அளவில் ஓவியம் தீட்டச் செய்து ஒரு சரியான வடிவம் கிடைத்தபின் அதைப் பெரிய அளவில் துணியில் தீட்டும் வேலை தொடங்கும். அதில் என் பங்கும் கணிசமாக இருந்தது. தான் நினைத்தவிதத்தில் அவை உருக்கொள்ளும் விதத்தில் பலமுறை வந்து பார்ப்பார்.  மேம்படுத்தல், செழுமைப் படுத்துதல் போன்ற விஷயங்கள் அவ்வப்போது அவரால் பின்பற்றப்படும். கொல்கத்தா, சாந்தினி கேதன் ஆகிய இடங்களில் தமது நடன நிகழ்ச்சிகளை அளிக்க கலாக்ஷேத்திரக் கலைஞர்களுடன் எனக்கும் செல்ல வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் என்னிடம் முறையாக நடனம் பயிலும்படி யோசனை கூறினார். வேலையில் இருந்தபடி பகுதி நேரத்தில் பயில்விக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் நான் இசையவில்லை. என்வழி ஓவியம் சார்ந்ததுதான் என்பதில் நான் முடிவாக இருந்தேன்.

    அவருக்குப் பின் கலாக்ஷேத்திரம் அவருடைய பயில்விக்கும் முறை, நாட்டிய நாடகங்கள்,  ஆகியவற்றை ஒரு அருங்காட்சியகம் போல் பேணிக் காத்து வருகிறது. அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் இன்று பலரும் நாட்டியத் துறையில் மிகப் பிரபலமாக உள்ளனர். ஆனால் அவருடன் அதை உருவாக்கியவர்களில் பலர் இன்று மறைந்துவிட்டனர் அல்லது தம்மை அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டனர். எனவே கலாக்ஷேத்திரத்தின் எதிர்காலம் ஒருகேள்விக் குறிதான்.

No comments: