Saturday, October 29, 2011

woman at work-1957-water colour on paper

Posted by Picasa

Menaka-Viswamitra-1962-pen and ink 0n paper

Posted by Picasa

crossing the river Ganges-pen and ink on paper 1962

Posted by Picasa

முதல் சந்திப்பு

Posted by Picasa
பெசன்ட் பிரம்மஞான உயர்நிலைப்பள்ளி
(Besant Theosophical High School)

இரண்டு ஆண்டுப் பணிக்குப் பின் ரிஷிவேலி பள்ளியிலிருந்து எனது தந்தை சென்னைக்கு 1945 இல் வந்தார். சென்னையில் அடையாறு ஆற்றின் தெற்குப் பகுதியிலிருக்கும் பிரம்மஞான சங்கத்திற்குச் (Theosophical Society) சொந்தமான வளாகத்தில் அப்போது ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களால் நிறுவனம் செய்யப் பட்டிருந்த ‘கலாக்ஷேத்திரா' என்னும் நுண்கலைப் பள்ளியின் அங்கமாக இயங்கிய பெசன்ட் தியொசாஃபிகல் உயர்நிலைப் பள்ளியில் அவர் வரலாறு, பூகோளம் கற்பிக்க ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது எனக்கு வயது ஆறு.

பெசன்ட் உயர்நிலைப் பள்ளி இருந்த நிலப்பகுதி ஆர்காட்டு நவாபுக்குச் சொந்தமானது. அவரிடமிருந்து பெசன்ட் அம்மையார் 17 ஏக்கர் நிலப்பரப்பை பிரம்ம ஞானசங்கத்திற்காக வாங்கி ‘தாமோதர் தோட்டம்' (Damodhar Garden) என்று பெயரிட்டார். பெசன்ட் அம்மையார் தமது இறுதி நாட்களில் விரும்பிய விதமாக Dr.அருண்டேல் அவர்களால் ‘பெசன்ட் மெமொரியல் பள்ளி' (Besant Memorial School)1934 ஜூன் 27 அன்று தோற்றம் கொண்டது. அப்போது அவர் பிரம்மஞான சங்கத்தின் தலைவராக (President) இயங்கிவந்தார். 1944 இல் Dr.அருண்டேல் காலமானார். சில ஆண்டுகளில் பள்ளி ‘பெசன்ட் தியோசாஃபிகல் உயர்நிலைப் பள்ளி, என்று பெயர் மாற்றம் கொண்டது. பள்ளி வளாகத்தின் நடுவில் கம்பீரமாகத் தோற்றந்தரும் 150 ஆண்டுகள் பழமையான மாளிகை அனைவரையும் ஈர்த்தது. பள்ளி வளாகத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீடு “ப” வடிவத்தில் இருந்தது. ‘ட' வடிவில் இரண்டாகத் தடுத்து இரண்டு குடும்பங்கள் வசிக்கும் விதமாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. முன்புறம் மூங்கில் தட்டியாலான மறைப்பு உண்டு. உள்ளே கடப்பாக் கல் பதிக்கப்பட்ட தரை. மேற்கூரை, விட்டங்கள் அமைத்து நாட்டு ஓடு வேய்ந்தது. தனி அறை ஏதுமில்லாத பழைய வீடு அது. வீட்டின் முன் பெரிய திறந்த வெளி. உட்கார, இளைப்பாற கடப்பாக் கல் பதித்த மேடையிலிருந்து மூன்று படிகள் இறங்கினால் நிலம் வரும். குளிக்க, மலம் கழிக்க வீட்டுக்கு வெளியே வந்து சுற்றிக்கொண்டுதான் போக வேண்டும். பெரிய பெரிய மாமரங்கள் கொண்ட வனம் போன்ற இடமது. பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் குளிக்கும் இடமும் அருகில்தான் இருக்கும். பெரிய கிணற்றிலிருந்து மேலே தொட்டியில் தண்ணீர் ஏற்ற மோட்டர் வசதி உண்டு. இரவுகள் -குறிப்பாக மழை நாட்களில்- மிகவும் அச்சுறுத்தும். பழைய வீடானதால் மழைநீர் உள்ளே ஆங்காங்கே தாரையாகக் கொட்டும். படுக்கையை சுருட்டிக்கொண்டு தூங்காமல் கழித்த நாட்கள் பலஉண்டு. அப்போ தெல்லாம் மின்விசிறி பயன்பாடு அரிதான ஒன்று. தங்கை உமாவும் நானும் உடல் முழுவதும் சிரங்கு வந்து மிகுந்த சிரமப் பட்ட நாட்கள் அந்த வீட்டில்தான். மற்றொரு பகுதியில் மிருதங்க வித்வான் விட்டல் ஐயர் குடும்பம் வசித்தது. இருவர் வீட்டிலும் நிறைய குழந்தைகள். பின்நாட்களில் நாடக உலகில் புகழ்க்கொடி நாட்டிய ‘கூத்த பிரான்' (என்.வி.நடராஜன்) விட்டல் ஐயரின் மூத்த மகன். அஇந்த வீட்டில் நாங்கள் ஒரு வருடம் இருந்தோம் என்பதாக நினைவு.

அங்கிருந்து பள்ளி வளாகத்தின் வேரொரு பகுதியிலிருந்த வீட்டிற்குக் குடிப் போனோம். இங்கு வசித்தது அதிகம் போனால் நான்கு வருடங்கள்தான் இருக்கும். ஆனால் சொல்ல ஏராளமான செய்திகள் உள்ளன. அது ஒரு தனிக் கட்டிடம். வீட்டின் பின்புறம் (மேற்கில்) பிரம்மஞான சங்கத்தின் வயல்வெளி. அந்த வீட்டிற்கு வாயிற்படிகள் ஆறோ, ஏழோ இருக்கும். வீட்டிலிருந்து படி “ப” வடிவத்தில் அகலமாகிக் கொண்டே வந்து நிலத்தை அடையும்போது நிலத்தில் பரவி முடியும். வீட்டின் கிழக்குப் பக்கம் மற்றும் தெற்குப் பக்கம் என்று இரண்டு குடும்பம் வசிக்கக்கூடிய வீடு அது. தெற்குப்புறம் வீட்டிலிருந்து (நாங்கள் வசித்த பகுதி) தோராயமாக இருபது அடிகள் தள்ளிக் கிணறும், அதனருகில் இரண்டு குளியல் அறைகளும் உண்டு. வடக்கில் மலம் கழிக்க இரண்டு கூரையில்லா சுவர்த் தடுப்புகள்; ஆனால் கதவற்றவை. ஆள் வந்துதான் சுத்தம் செய்ய வேண்டும். வராத நாட்களில் அந்தப் பக்கம் போக முடியாதபடிக்கு நாற்றம் நம்மைத் துரத்தும். சுற்றிலும் பெயர் தெரியாத செடிகளும் புதருமாக மண்டிக் கிடக்கும். கிணற்றையொட்டி ஒரு பலாவும், மாமரமும் உண்டு. வீட்டிலிருந்து நடந்து கிழக்கு நோக்கி தோராயமாக 50 அடிகள் போனால் நம்மைப் பள்ளி செல்லும் பாதையில் கொண்டு சேர்க்கும். பாதையின் இடப்புறம் திறந்தவெளி வலப்புறம் பெரிய பள்ளம் மழைகாலத்தில் அதில் நீர் ததும்பி வழியும். சாலையெல்லாம் செம்மண் கல் கலவையில் அமைந்தது. மழைக்காலத்தில் சேறாகி நடப்பதே கடினமாகி விடும். பாதை குண்டும் குழியுமாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை அதை சீரமைப்பது நிகழும். இருபுறமுமிருந்த பெரிய தூங்குமூஞ்சி மரங்களால் அங்கு எப்போதும் நிழலுக்குப் பஞ்ச மில்லை. பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் முள்வேலிதான். சுவர் இருக்கவில்லை. அங்கு கள்ளிச் செடி வளர்ந்திருக்கும். கோடைகாலத்தில் அதன் மலர் பெரிய அளவில் தாமரை போன்ற தோற்றத்தில் வேலியை மறைத்துக் கொண்டு தென்படும். ஆனால் அவை மணமற்றவை

இப்போது பரபரப்பாக உள்ள வசந்தசாலை ஆளரவமற்று இருந்த காலம் ஒன்று உண்டு. இப்போது இருக்கும் அஞ்சலகத்தின் எதிர்புறம்தான் அன்று காவல் நிலையம் இருந்தது. இரவில் காவல் நிலையத்தின் அரிகேன் விளக்குதான் அப்பகுதிக்கு வெளிச்சந்தரும். கரும்பாம்புபோல நீண்ட அத்தார்சாலையின் இருபுறமும் பெரிய பெரிய தூங்குமூஞ்சி மரங்கள் வரிசையாகப் பகலில் நிழல் கொடுக்கும்; இரவில் இருளை அதிகரிக்கும். கோடை காலத்தில் அவற்றின் பிங்க் நிற மலர்கள் சாலையை மறைத்தபடி பாவாடை விரித்திருக்கும். விரைவிலேயே மரத்திலிருந்து காய்கள் (கரும்பழுப்பு நிறத்தில் பெரிய பீன்ஸ் அளவில் அவை இருக்கும்) பழுத்து சாலையெங்கும் விழுந்த வண்ணம் இருக்கும். ஆடு, மாடுகள் சாலையை அடைத்துக் கொண்டு அவற்றை ஆவலுடன் உண்ணும். சாலையின் தெற்கில் பிரம்மஞான சங்கத்திற்குச் சொந்தமான வயல் வெளியும் வடக்கில் அவ்வை இல்லத்தின் பள்ளியும், விடுதியும், அதையடுத்து அதன் நிறுவனர் முத்துலக்ஷ்மி ரெட்டி, அவர் மகன் கிருஷ்ணமூர்த்தி (புற்றுநோய் மருத்துவ நிபுணர்) வசித்த இல்லமும், இன்னும் சில செல்வந்தர்களின் மாளிகைகளுமிருக்கும். வசந்தசாலையில் எதிரெதிராக வரும் இருவர் தொலைவிலேயே ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளலாம். வசந்த சாலையிலிருந்து பள்ளிக்கு வரத் தெற்கு வடக்காக ஒரு வழி உண்டு. அதுதான் நுழைவாயில். பெரிய கதவுகள் கொண்டது அவ்வழி. மாலையில் பூட்டினால் திரும்பக் காலையில்தான் திறப்பார்கள். அதனை ஒட்டி ஒரு சாலை பள்ளியைச் சுற்றிக் கொண்டு தாமோதரபுரம் கிராமம், வண்ணாந்துறை வழியாகத் திருவான்மியூர் செல்லும். இந்த சாலையும் பிரம்மஞான சங்கத்தின் நிலப் பகுதியைப் பிரித்தபடிதான் போயிற்று. அச்சாலை அனேகமாக இரவில் விளக்கு இல்லாமலேயே இருக்கும். எதிர்ப்புறம் ஊரூர் கிராமம் செல்லும் வழியில் இருந்த பெட்டிக்கடையின் விளக்கு வெளிச்சம்தான் சிறிது ஒளிதரும். அடர்ந்த மரங்கள் நம்மை அச்சுறுத்தும். எப்போதோ யாரோ ஒருவன் அங்கு தூக்கு மாட்டிக் கொண்டு இறந்த செய்தி தப்பாமல் நினைவுக்கு வந்துவிடும். நான் நன்கு வளர்ந்த பின்பும் அவ்வச்சம் என்னை விட்டு அகன்றதில்லை.

அந்த வீட்டினருகில் சாலையை ஒட்டி ஒரு பெரிய குளமிருந்தது. படிகள் ஏதும் அதற்கு இருக்கவில்லை. அதில் எப்போதும் ததும்பி நிற்கும் நீரில் தாமரை அல்லது அல்லிக் கொடி படர்ந்திருக்கும். தென்னை, பலா, மா என்று எங்கும் மரங்கள், இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வகைப் பூக்கள், புதர்கள், முட்செடிகள் என்று எப்போதும் இனம் புரியாத மகிழ்ச்சி, பயம் இரண்டையும் ஒருசேரத் தந்த வருடங்கள் அவை. வீட்டின் முன்புறம் ஒரு மனோரஞ்சித மரம் நிலத்தில் படர்ந்து இருக்கும். பூவின் மணம் (அதை நெடியென்றும் சொல்லலாம்) இரவிலும் பகலிலும் போவோர் வருவோரை அலைக்கழிக்கும். அந்த மணத்துக்கு நாகப்பாம்பு வரும் என்று சொல்வார்கள். நாங்கள் எப்போதும் அதனருகில் தயக்கமும் பயமுமாகத்தான் போவோம். ஓரிரு முறை அதன் கிளைகளில் பாம்பின் உரிந்த சட்டை காற்றிலாடியபடி தொங்கிக் கொண்டிருந்தையும் பார்த்திருக்கிறேன்.

இந்தியா விடுதலை பெற்றது, ராமையா அண்ணன் திருமணம், உலகை உலுக்கிய காந்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி, டைபாயிடு ஜுரம் காரணமாக நான் இரண்டு மாதங்களுக்கு மேல் படுக்கையில் கிடந்தது, ராஜு அண்ணனின் உபநயன விழாவை ஒட்டி, குடும்பமே தாராபுரம் சென்று வந்தது எல்லாம் இங்கு வசித்த போதுதான் நிகழ்ந்தன. எங்களில்லம் அப்போதெல்லாம் காங்கிரஸ் இயக்கத்தைப் போற்றுவதாக இருந்தது. 1947 நள்ளிரவில் எங்கும் தேசியக் கொடியைத் தோரணமாகக் கட்டிக் கொடி வணக்கம் செய்து, பாடல்கள் பாடி, இனிப்புகள் உண்டு கொண்டாடியது பசுமையான நிகழ்வுகளில் ஒன்று. என் அண்ணன் ராமசாமி தமது திருமணம் முடிந்து திருப்பதி போயிருந்தபோதுதான் காந்தி சுடப்பட்ட சோகம் நேர்ந்தது. பெரும் அவதிக்கும் தொல்லைகளுக்கும் ஆளான பின்பே அவர்களால் சென்னை திரும்ப முடிந்தது என்பதாகச் சொல்வார்கள்.

சம்பு அத்தை மகன் ரத்தினம் (பின்னாளில் K.V.R. என்று நவீன நாடக, இலக்கிய உலகில் அறியப்பட்டவன்) ஒரு வருடம் இஇங்குதான் எங்கள் வீட்டில் தங்கிப் படித்தான். எங்கள் பள்ளியில் ஆண்டு விழா டிசம்பர், ஜனவரிகளில் நடக்கும். அதையொட்டிப் பல விதமான விளையாட்டுப் போட்டிகளும். இரண்டு நாட்கள் இருக்கும். அத் தினங்களில் பள்ளியின் அனைத்து மாணவ மாணவிகளும் ஆசிரிய ஆசிரியைகளும் கண்டிப்பாக விளையாட்டு மைதானத்தில் இருந்தாக வேண்டும். அங்கு தான் வருகைப் பதிவும் நடக்கும். நிகழ்ச்சியில் ஒரு போட்டி. பானைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். மாணவரின் கண்களைக் கட்டி அவர்கள் கையில் ஒரு மூங்கில் கழியையும் கொடுப்பார்கள். சுமார் 50 அடிகள் இடைவெளியைக் கடந்துபோய் அவர்கள் அந்தப் பானையை அடித்து உடைக்க வேண்டும். உடன் ஆசிரியர் ஒருவர் அவர்களை வழி நடத்திச் செல்வார் வாயால் வழி சொல்லியபடி. ரத்தினம் அதில் கலந்து கொண்டான். பானையை உடைப்பதற்கு பதிலாக உடன்வந்த ஆசிரியரின் தலையில் அடித்துக் காயப் படுத்திவிட்டான். அவர் மயங்கி விழுந்து விட்டார். முதல் உதவி, மருத்துவ உதவி என்று ஏகக் களேபரமாகி விட்டது திடல். அந்த வருடத்துடன் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது.

மாலை நேரத்தில் விளையாடச் சென்றால் இருட்டுவதற்கு முன்பாகவே வீடு திரும்பவேண்டும் என்பது வீட்டில் கடுமையாக பின்பற்றப்பட்ட நடைமுறை. ஒரு சமயம் ரத்தினமும் நானும் மாலையில் விளையாடிவிட்டு நேரம் கடந்து இருட்டியபின் வீடு திரும்பியதும், அதற்கு தண்டனையாக வெகுநேரம் இருட்டில் வெளியே அழுதபடியே இருக்க நேர்ந்ததும் நினைவிலிருந்து அழிக்கமுடியாத அனுபவம். வேரொருசமயம், அப்பா வீட்டில் கொடுக்கச் சொல்லிக் என்னிடம் கொடுத்த மிட்டாய்களை ‘லீல்லீபுட்' கதைகேட்டு அந்த உலகம் பற்றின கற்பனையில் முழுவதுமாகத் தின்றுவிட்டு அப்பாவிடம் உதை வாங்கினேன், ஒரு நாள் பிற்பகல் சாப்பிட்டபின், கழுவாத தட்டை எடுத்துக்கொண்டு பள்ளி நோக்கிச் சென்றபோது எதிரே வந்த ஆசிரியர் தடுத்து நிறுத்தியதும் வெட்கிவீடு திரும்பினேன். இன்னமும் குடும்பத்தினர் ஒன்றுகூடும்போது அது பற்றிச் சொல்லி கேலி செய்வார்கள். என்னை ‘இரட்டைமண்டை' என்று சொல்லி பெரிய அண்ணன் பின்மண்டையில் தட்டிக் கொண்டேயிருப்பார். அனைத்தையும் மறந்துவிடும் என்னை அனைவரின் முன்பும் அசிங்கமாகக் கிண்டல் செய்வார். எங்கள் வீட்டில் ஒரு பிரம்புக் கூடை உண்டு. அழுக்குத் துணிகளை அதில்தான் போட்டு வைப்பார்கள். அதனுள் அமர்ந்தவாறு கற்பனை உலகில் பயணிப்பது எனக்கு மிகுந்த விருப்பமான பொழுது போக்கு.

திருவாவடுதுரை திரு.T.N.ராஜரத்தினம்பிள்ளை கலாக்ஷேத்திராவுக்கு வந்து வருடாந்திர இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இந்த வீட்டின் கிழக்குப் பார்த்த பகுதியில்தான் அவரது குழு தங்கியது. அவரது இசை நிகழ்ச்சி நான்கு தவில்களுடன் நடந்தது. அவர்களில் ஒருவர் இளம்வயதுக்காரர். தனது சிறப்பான வாசிப்பால் பெரும் கைதட்டலைப் பெற்றார். அவ்விடத்தின் இயற்கைச்சூழல் அவருக்கு அளித்த மன மகிழ்ச்சியில் மறுநாளும் அவர் நாயனம் இசைக்க விருப்பம் தெரிவிக்கவே மாமரங்களுக்கிடையில் திறந்தவெளியில் காலை நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ரசிகர்களை நாதத்தால் அவர் குளிப்பாட்டியதும் நிகழ்ந்தது.

ராஜு அண்ணன் அப்பாவிடம் கடுமையாக அடி வாங்கியது இப்போதும் பயமும் கலவரமும் கலந்த நினைவாக உள்ளது. அவன் 10 வது (10th form) படித்துக் கொண்டிருந்த வருடம். அரை ஆண்டுத் தேர்வில் தனது நண்பனுக்கு உதவினான். எப்படித் தெரியுமா? தேர்வு முடிந்தபின் மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண்கள் கொடுக்க வேண்டி விடைத்தாள்கள் என் தந்தையின் பொறுப்பில் வந்தன. நண்பன் வேறு ஒரு தாளில் வினாக்களுக்கு விடை எழுதி கொடுக்க அதை மாற்றி வைத்து விட்டான் என் அண்ணன். இது என் தந்தைக்குத் தெரிந்து விட்டது. தலைமை ஆசிரியர், இன்னும் பலர் சொன்ன போதும் அவர் அவனை மன்னிக்க வில்லை, மிகக் கடுமையாக அடித்து தண்டித்து விட்டார். அவர் மிகவும் முன்கோபி. ஆனால் மிகவும் நேர்மையான குணம் உடையவர். அதுதான் நான் அவரை அவ்வாறான கோபத்துடன் பார்த்தது. பின்னாட்களில் அவர் அடித்து தண்டிப்பதை விட்டு விட்டார்.

குளத்தினருகில் இருந்த அந்தச் சிறிய கூரைவீட்டில் ஒற்றை ஆள் யாரேனும் அவ்வப்போது வசித்தனர். ஆனால் இப்போது ஒருவரும் நினைவுக்கு வரவில்லை. பின்புறம் வயல் வெளியில் இஇருந்த பெரிய கிணற்றில் ஆட்கள் ஏற்றம் இஇரைத்துத் தண்ணீர் பாய்ச்சுவது என் மனம் விட்டு அகலாத இளம்வயதுக் காட்சிகளிலொன்று. நிறுவனத்தின் மாட்டுத் தொழுவத்தில் பசுக்களும் காளைகளும் கொழுகொழுவென்று இருக்கும். காளைகளுக்கு லாடம் மாற்றுவது, மூக்கணாங்கயறு மாற்றுவது போன்றவை பலசமயங்களில் எங்கள் வீட்டின் எதிரிலிருந்த திறந்த வெளியில் நிகழும். ஒரு சமயம் மழை காலத்தில் சாலையில் இஇருந்த மின் கம்பத்திலிருந்து கம்பி அறுந்து தொங்கியது தெரியாமல் வேலைக்காரச் சிறுமி அதைத் தொட்டுவிட உடலில் மின்சாரம் பாய்ந்து, இறக்க இருந்தவளை ராமு அத்தான் விரைந்து செயல்பட்டு ஒரு மரக்கட்டை கொண்டு அவள் கையில் அடித்து அவளை விடுவித்துக் காப்பாற்றினார் (அத்தான் அப்போது எதற்காக எங்கள் வீட்டிலிருந்தார் என்பது நினைவில்லை.)

செம்பழுப்பு நிறத்தில் புலிபோலான கோடுகள் கொண்ட பூனைக்குட்டி ஒன்று எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. ‘டைகர்' என்று பெயரிட்டு அதை வளர்க்கத் தொடங்கினோம். வீட்டின் முன்புறம் வளர்ந்திருக்கும் புல்வெளியில் வெட்டுக்கிளிகளை வேட்டையாடும். பெயரிட்டு அழைத்தால் எங்கிருந்தாலும் நாய்போல ஓடிவரும். நாங்கள் கடற்கரை செல்லும் போதும் கூடவே வரும். அந்த வீட்டைவிட்டு நாங்கள் போனபின்பும் கூட அது அங்குதான் சுற்றிக் கொண்டிருந்தது. எனது அண்ணனைக் கண்டால் ஓடிவந்து கால்களுக் கிடையில் உரசிக் கொஞ்சும்.

வெகு அழகுடன் கூடிய ஒரு பெண் என் அண்ணனுக்கு மனைவியாக வந்து சேர்ந்தார். இளம் வயதிலேயே அன்னையை இழந்தவர். அவரது தந்தை மீனம்பாக்கம் வானிலை ஆய்வுமையத்தில் பணியிலிருந்தார். மறுமணம் செய்துகொள்ளவில்லை. மின்சார ரயில் தண்டவாளத்துக்கும் தென் நெடுஞ்சாலைக்கும் (Grand Southern Trunk Road) இடையில் அவரது அலுவலகமும் அதையொட்டி இல்லமும் இருந்தது. அங்கும் வனம் போன்ற சூழ்நிலைதான். எதிர்ப் புறத்தில் இயங்கிய விமானதளத்திற்கு பள்ளியிலிருந்து எங்களை இட்டுச் செல்வார்கள். விமானத்தினுள் ஏறிப்பார்ப்போம் மீனலோசனி என்ற பெயர் கொண்ட அவர் ஏதோ விதத்தில் தூரத்துஉறவு. முறையாகக் கர்நாடக இசை பயின்றவர். இசைக்காக பள்ளியை ஒதுக்கியவர். மிக இனிமையாக பாடுவார். தினமும் காலையில் வீட்டு வேலைகளெல்லாம் முடிந்தபின் பாய் ஒன்றை விரித்து, அதில் அமர்ந்து, தம்பூராவில் சுருதி சேர்த்து, பாடத் தொடங்கினால் அடுத்த இரண்டுமணி நேரம் இசை அந்தப் பிரதேசத்தில் குதிப்போடும். தினமும் நான் பள்ளிவிட்டு வரும்போதே அதைக் கேட்டபடி மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்கு ஓடுவேன். வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு ஐந்து நிமிட நடைதான். நகரில் நடக்கும் இசைக் கச்சேரிகளுக்குப் போவதும், தானே மேடையில் கச்சேரிகள் செய்வதும், வானொலி நிலையம் சென்று பாடுவதும் எனக்கு அவர்மீது பெரும் ஈர்ப்பையும் பிரமிப்பையும் கொடுத்தது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவரது இசையைப் பாராட்டி, தன்னுடன் மேடைகளில் பாடச் சொன்னார். மன்னி என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார் அவருக்கு ராமலிங்கம் என்னும் அண்ணனும், கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி என்று இரு தம்பிகளும் உண்டு.

இந்த வீட்டில்தான் பின்னாளில் மைசூர் வாசுதேவாச்சார்யார், வெ.சாமிநாத சர்மா என்பதாகப் பலர் வசித்தனர். “கிருஷ்ணா காட்டேஜ்” (Krishna Cottage) என்றும் “யெல்லோ பங்களா” (Yellow banglow) என்றும் இரண்டு பெயருடன் இந்த வீடு குறிப்பிடப்பட்டது.

Wednesday, October 26, 2011

வீடுகளும் கோடுகளும்

‘எனது ஓவியப்பயணம்' ‘வீடு பேறு' என்னும் தலைப்புகளில் நான் முன்னர் எழுதியதை ஒருங்கிணைத்து எனது வாழ்க்கை பதிவாக ஒரு நூல் வெளியிடும் முயற்சி இது. நூலுக்குத் பெயர் இடவில்லை. ‘எனது ஓவியப்பயணம்' “ராயர் காபி கிளப்' “மரத்தடி” குழுமங்களில் தொடராக வந்தது. “வீடு பேறு” எதிலும் வந்ததில்லை. எனது வலையில் கொஞ்சம் போல இட்டதை அழித்துவிட்டேன்.அதை இன்னும் சற்று விரிவாகப் பதிவு செய்துள்ளேன்.
அரவக்கோன்







எனது ஓவியப் பயணம்
அறையை வீடாக்கும் சுவர்களும்
சுவர்களின் மீதேறிய ஓவியங்களும்
வீடுகளும் கோடுகளும்



















அ.நாகராஜன்

(அரவக்கோன்)





கலையம்புத்தூர்

நான் பிறந்த ஊர் பழநிக்கு அருகில் உள்ள கலையம்புத்தூர். (என் பிறந்த தினம் 26-4-1939) என்னும் சிறிய ஊர்.

“கலையம்புத்தூர் அக்கிரஹாரம் கிழக்கு மேற்காக, எதிரெதிரான வீடுகளுடைய இரு வரிசையாக அமைந்திருக்கும். தெருக்களில் லாந்தல் கம்பங்களில் மண்ணெண்ணெயில் எரியும் சிம்னி விளக்குகள் இருக்கும். தெரு மிகவும் குறுகல் என்று சொல்லமுடியாது. வீதிகள் சாணம் தெளித்து, பெருக்கி சுத்தமாக இருக்கும். எங்கும் குப்பையின்றி, வீட்டுக்கு வீடு இடைவெளி இல்லாமல் கோலங்களுடன் ‘பளிச்' என்று இருக்கும். வீட்டுத் தரைகள் காரையால் சமப் படுத்தப்பட்டு, தேய்கல்லால் தேய்த்து, வழவழப்பாகவும் தார்ச்சாலை போன்று கருப்பாகவும் இருக்கும். காரை அரைக்கப்படும்போதே அதனோடு கொட்டாங்கச்சியைக் கருக்கி, அந்தக் கரியைக் கலந்து அரைத்துவிடுவதால் தரை கருப்பாக அமையும். அதில் கோலம் ‘பளிச்' என்று தெரியும். வீடுகளில் விறகு அடுப்புக்கள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும். அதன் மேலும் கரியையும் ஊமத்த இலைகளையும் சேர்த்து அரைத்துக் கொஞ்சம் போல அதில் எண்ணெய் கலந்து அடுப்பின் மேல் தேய்த்துத் தேய்த்துக் கருப்பாக்கியிருப்பார்கள். பச்சையான தென்னை மட்டையில் சுத்தமாகச் சீவிய விளக்குமார்களுக்கு இலேசான மஞ்சள் அபிஷேகம் செய்து பார்ப்பதற்கு தந்த விளக்கமார்கள்போல தோற்றம் வரச்செய்து இருப்பார்கள்.

அக்கிரஹாரத்தில் மொத்தம் நூறு வீடுகளும், சிறிய கடைத்தெருவும், சின்னதாக குடியானவத் தெருவும் இருக்கும். ஊரைச் சுற்றிலும் நெல்விளையும் நஞ்சைபூமி ‘பசேல்' என்று காட்சி தரும். வயல்களுக்கு நடுவில் “பிரியாவிடையார் கோயில்” இருக்கும். கோயில் சிறியதானாலும் மனோரம்யமாயும், தெய்வ சானித்தியம் நிறைந்ததாகவும் இருக்கும். அக்கிரஹாரத்தின் கிழக்கு முடிவில் ‘கல்யாணி அம்மன்' கோயிலும், அதை ஒட்டினாற்போல தென் வடவாக ஓடும் வாய்க்காலும் இருக்கும். ஒரு அழகிய நந்தவனமும் வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்தில் இருக்கும்.

அனேகமாக அங்கு வசிப்பவர்களெல்லாம் விவசாயிகள். நெல் அறுவடை ஆனதும் ஒவ்வொரு வீட்டின் வீதிகளிலும் திண்ணையை ஒட்டிய இடத்தில் நீண்ட சதுரமாகக் குழி வெட்டுவார்கள். குழிமண் காய்ந்து ஆறியபின் அதன் கீழும், பக்கவாட்டிலும் மூங்கில் பாயை மறைப்புக் கட்டி அதனுள் தங்களுக்கு வருடத்துக்கும் தேவையான நெல்லைக் கொட்டி மேலே பாயை மூடி, வைக்கோல் பரப்பிப் பிறகு குழிகளை ஒரு மேடை போலச் செய்து விடுவார்கள். வெய்யில் காலத்தில் இரவில் அதன் மேல் படுக்கை விரித்து படுத்து உறங்குவார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு குழியைப் பிரித்து நெல்லைக் களஞ்சிகளில் சேர்த்து வைத்துக் கொள்ளுவார்கள். குழிநெல் ஆரோகியம் தரக்கூடியது என்னும் நம்பிக்கை உடையவர்கள் அவர்கள்.

வீட்டுக்கு வீடு பசு எருமை மாடுகள் கொட்டிலில் கட்டி இருக்கும். பசு மாடு சாணமிட்டவுடன் அதையெடுத்து கல்-மண் கலவாமல், சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வெய்யிலில் காய வைத்துக் கொள்வார்கள். நன்றாகக் காய்ந்த பிறகு நெல் கருக்காயை மண் தரையில் கெட்டியாகப் பரப்பி அதன் மேல் சாணி உருண்டைகளை அடுக்கி திரும்பவும் கருக்காயைக் கொட்டிக் குவியலாக்கி மூடி, நெருப்பு வைத்து விடுவார்கள். அது நன்றாக எரிந்து தணிந்து ஆறிப்போன பிறகு மெதுவாக அதைக் கலைப்பார்கள். உள்ளே சாணி உருண்டைகள் சாம்பலாகி வெள்ளையாக இருக்கும். அந்தச் சாம்பலைத் துணியால் வஸ்திரகாயம் செய்து (மெல்லிய துணியை வாயகன்ற பாத்திரத்தில் வேடு கட்டிச் சலிப்பது.) கொள்ளுவார்கள். பின்னர் அதில் கலக்க வேண்டிய வாசனைப் பொருள்களைச் சேர்த்து அந்த வீபூதியை மலைக்கு எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வித்துக் கொண்டு வருவார்கள். அந்த விபூதியை வெளியூர்களில் உள்ள நண்பர், உறவினர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டிலும் உபயோகிப்பார்கள். இதேபோல, மலை வாழைப்பழம் நூற்றுக் கணக்கில் வாங்கி வீட்டிலேயே முறைப்படி பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு அதை அபிஷேகம் செய்வித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். பழனியின் பிரசித்தமான மலை வடுமாங்காய் ஊறுகாயும், பார்சல் செய்யப்படும்.

கலையம்புத்தூருக்கும், ஷண்முக நதிக்கும் இடையில் சற்று உள்ளடங்கிய வனத்துக்குள் ‘சின்னாறு' என்ற பெயருடைய ஆறு ஒன்று ஓடும். அங்கு பாறைகள் அதிகமாகவும் மணல் தரை குறைவாகவும் இருக்கும். நதி பாறைகளில் துள்ளிக்குதித்து சிறு சிறு அருவிகளாக வருவது பார்க்க மனம் கவர்வதாக இருக்கும். கலையம்புத்தூரின் அக்கிரகார மஹா ஜனங்கள் நினைத்த பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒரு தின்பண்டமாக, சமையலாக செய்துகொண்டு அங்கு சென்று ‘கூட்டாஞ் சோறு' உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இதற்கான கூடுதலும் தீர்மானமும், வாய்க்காலில் பெண்கள் துவைத்துக் குளிக்கும் காலை வேளயிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். திரும்பி வந்து, இரவில் கும்மியும் கோலாட்டமும் நிலவில் அமர்களமாக நடக்கும்.”

கலையம்புத்தூர் பற்றிய இந்தச் சுவையான செய்திகள் எனது அத்தையும், மாமியாருமான திருமதி “பூரணி” எழுதியுள்ள “பூரணி நினைவலைகள்” நூலிலிருந்து பெறப் பட்டவை. கலையம்புத்தூருக்கு எனது தாயாருடன் ஓரிருமுறை நான் சென்றிருக்கிறேனே தவிர அவ்வூருடனான தொடர்பு வேறு ஒன்றும் கிடையாது.

ரிஷிவேலி பள்ளி

ராமசாமி (ராமையா), ராமகிருஷ்ணன் (கிட்டு), நாராயணசாமி (ராஜு) என்று எனக்கு மூன்று அண்ணன்கள். கிருஷ்ணவேணி, உமா என்று இரு தங்கைகள். 1942 இல் (மூன்று வயதுக் குழந்தையாக நான் இருந்தபோது) என் தந்தையார் R.அனந்தநாராயண ஐயர் மதனபள்ளி (ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்தது) அருகில் ரிஷிவேலி என்னும் இடத்தில் J.K.என்று உலகெங்கும் அறியப்பட்ட கிருஷ்ணாஜி நிறுவி நடத்திய பள்ளியில் வேலையில் சேர்ந்தார். இதனால் எங்கள் குடும்பம் கலையம் புத்தூரிலிருந்து இடம் பெயர்ந்தது. நாட்புறமும் மலைகள் சூழ்ந்த நிலப் பகுதியில் அப்பள்ளி இருந்தது. சுற்றிலுமிருந்த மலையடிவாரத்தில் சீதாப் பழ மரங்கள் காடாய் அடர்ந்திருக்கும். கேட்பாரற்றுப் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். கிழக்குப்புறம் மலையில் ஒரு பெரிய குகை உண்டு. சிறுத்தையும், காட்டுப் பன்றியும், கழுதைப் பன்றியும் ஏராளமான நாகப் பாம்புகளும் இன்னும் பல பெயர் தெரியாத உயிரினங்களும் அங்கு இருந்தன. மலையில் ஒரு சிற்றோடையும் உண்டு. அம்மலையில் பல நூற்றாண்டு களுக்கு முன்னர் ஒரு துறவி வாழ்ந்ததால் ‘ரிஷி கொண்டா' (தெலுங்கில் கொண்டா என்பது மலையைக் குறிக்கும்) என்னும் பெயரால் அழைக்கப் படுகிறது. ஆண்டு முழுவதும் மழையும் குளிருமாகவே இருக்கும். ஆசிரியர் குடும்பம் அவர்களுக்கான இல்லங்களில் வசித்தாலும் உண்பது பொது உணவகத்தில்தான். வீட்டில் சமைக்க அனுமதி கிடையாது. மாணவ-மாணவியர் ஆசிரியர் எல்லோரும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே வசிக்கும் முறை. அங்கு முறையான வகுப்போ ஆண்டு இறுதியில் நிகழும் தேர்வோ இருக்கவில்லை. பாடதிட்டதில் உள்ளவாறு மொழி, கணிதம், என்று படிப் படியாக முடிக்கவேண்டும். இதனால் ஒரு மாணவன் அவனுடைய கற்கும் திறமைக் கேற்ப வகுப்பு மாறிமாறி அமருவான். பள்ளி இறுதி தேர்வு மட்டும்தான் இருக்கும். இந்த கற்பிக்கும் முறைக்கு Dolton Plan என்று பெயர். 1919 இல் Helen Parkhurst என்னும் அமெரிக்கப் பெண்மணி தொடக்கநிலைக் கல்வியில் இந்த புதிய சிந்தனையை உருவாக்கினார். நுண் கலைகளை கற்பிக்க அவற்றில் புகழ் பெற்ற கலைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மேகம் கவிந்து மோடமாக இருந்தால் மாணவர் விளையாட்டுத் திடலில் ஆசிரியர்களுடன் குழுமி விடுவார்கள். ஒரு முறை மூத்த மாணவர்கள் துணி கொண்டு செய்யப்பட்ட பந்தை கொளுத்தி இரவில் கால்பந்து விளயாடியது இன்றும் பசுமையாக உள்ளது. வகுப்பெடுக்கும் ஆசிரியர்களே மாணவ விடுதியிலும் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். படிப்பது என்பது வகுப்பறையுடன் முடிந்து விடும். விடுதியில் படிப்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆண்டு முடிவில் நிகழும் விளையாட்டுப் போட்டிகளில் வெல்வோருக்கு பூச் செண்டுதான் பரிசு. இளம் சிறாருக்கான போட்டிகளில் அனைவருக்கும் பரிசுகள் உண்டு. நானும் தங்கை கிருஷ்ணாவும் ஒரு முறை மலையேறி விட்டு கீழே வரத்தெரியாமல் அழுதவண்ணம் இருந்ததும், எங்களைக் காணோம் என்பது தெரிந்து அனைவரும் பரபரத்துத் தேடியலைந்து கண்டு பிடித்து மீட்டதும் இன்றும் தெளிவாக உள்ள அனுபவம். வளாகத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. மாணாக்கர் ஆசிரியர் என்று எல்லோரும் அதில்தான் நீச்சல் பயின்றார்கள். என் அம்மா கூட கொசுவம் வைத்த புடவையுடன் சுரைக்காய் குடுக்கை உதவியுடன் நீச்சல் பயின்றதாக சொல்லி இருக்கிறார்கள். என் மூத்த அண்னன் மூச்சை அடக்கிக் கொண்டு நீரினுள் அமிழ்ந்து விடுவதும் ‘அண்ணன் வர மாட்டான்' என்று என்னை மற்றவர் பயமுறுத்துவதும் என் அச்சம் கண்டு களிப்பதும் நிகழும்.

ஒருமுறை ஒரு ஆசிரியரின் மனைவியை நாகம் தீண்டி அவர் இறந்து போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம். இரவில் மாணவியர் விடுதியில் பணியிலிருந்த அவர் தமதறையிலிருந்து எதிர்புறம் சென்றபோது இருட்டில் பாம்பை மிதித்து விட அது கொத்திவிட்டது. மருத்துவ வசதி இல்லாத அங்கிருந்து மதனபள்ளிக்குத்தான் கொண்டு செல்லவேண்டும். காலம் கடந்துவிடவே காப்பாற்ற இயலவில்லை என்று என் அண்ணன் கூறியிருக்கிறார். பாம்பு கடித்து இறந்தது என்பது அதற்கு முன்போ பின்னரோ அங்கு நிகழவில்லை. என் தந்தை அங்கிருந்த சமயம் G.V.சுப்பாராவ் என்பவர் பள்ளியின் முதல்வராக இருந்தார். வைத்தண்ணா தேவானை போன்றோர் ஆசிரியர்கள். GVS என்று குறிப்பிடபட்ட அவர் தமது கல்லூரிப் படிப்பில் இரண்டு எம்.ஏ.பட்டம் பெற்றவர். அப்போதே பிரம்மஞான சங்கத்து உறுப்பினரான மிகவும் ஈடுபாட்டுடன் பெசன்ட் அம்மையாரின் கல்விச் சிந்தனைகளை செயற் படுத்தினார். அடையாரில் தொடங்கிய பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக அம்மையாரால் அமர்த்தப் பட்டார். கிண்டிபள்ளி என்று அறியப்பட்ட அதுதான் ரிஷிவேலிக்கு 1931 இல் இடமாற்றம் செய்யப்பட்டது. 1942 வரை பள்ளியின் தலமை ஆசிரியராக இருந்த அவர்மேல் ஆங்கில அரசு தேச விரோத செயல்களில் மாணவர் களுக்கு வழி காட்டுவதாகச் சொல்லிப் பள்ளியைச் சோதனை செய்து அரசு தடை செய்திருந்த கம்யூனிச சிந்தனை சார்ந்த பல நூல்களைப் பறிமுதல் செய்தது. அவர் தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் ஐம்பதுகளில் சென்னையில் மாம்பலத்தில் பால பாரத் (Bala barath) பள்ளியை நிறுவினார். ரிஷிவேலியில் அவருடன் பணிபுரிந்த ஆசிரியர் சிலர் இங்கும் இருந்தனர். 1960 களில் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தமது 86ஆவது வயதில் காலமானார். இன்றும் அவரது பிறந்த நாள் அவரருடன் இணைந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.