Wednesday, November 28, 2012

rukmini devi-part.1


this article was appeared in rayar kappi klub a net group on 
Wed, 8 Oct 2003

    மஹாஜனங்களுக்கு வந்தனம்,

    இது திருமதி ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் நூற்றாண்டு வருடம். அவர் உருவாக்கிய ஸ்தாபனம் "கலாக்ஷேத்திரா”வில் இந்த ஆண்டு முழுவதும் அதைக் கொண்டாடுகின்றனர்; நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் மூலம். எனக்கு அங்கு கற்கவும் வளரவும் கிடைத்த வாய்ப்பை வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாக எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

    வேதகாலத்தில் விவரிக்கப்படும் கல்விக்கூடங்களுக்கு ஒரு இன்றைய சாட்சி "கலா க்ஷேத்திரம்". வடக்கே வங்காளத்தில் "சாந்திநிகேதன்” போல தெற்கே சென்னையில் இது. தாகூரும் ருக்மிணிதேவியும் தனி மனிதராகத் தொடங்கி ஒரு இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் கலாச்சார அடையாளங்களாய் இருப்பவர்கள்.
    எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என் தந்தை 'ரிஷிவேலி' (rishi vally school) என்னும் பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்து பெசன்ட் உயர் நிலைப் பள்ளியில் வரலாறு/புவியியல் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். ருக்மிணிதேவி தமது கலாக்ஷேத்திரத்துடன் இந்தப் பள்ளியையும் அமைத்து நடத்தி வந்தார்.
    சென்னையின் தென் கோடியில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் நிலப் பகுதியில் அமைந்துள்ள பிரம்ம ஞான சங்கத்தின் [theosophical society] ஒரு பகுதியில் இவை அமைக்கப் பட்டன. பெரிய வனம்போலக் காணப்பட்ட இந்த இடம் ஒரு பர்ணசாலையை ஒத்திருந்தது. தேவதாசிகள் என்று குறிப்பிடப் பட்டவர்களால் காப்பாற்றி போஷிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிஷிதமாகப் பார்க்கப்பட்ட சதிர் என்று அழைக்கப்பட்ட நாட்டியக் கலையை   இன்று பொது உடமையாக்கிய ருக்மிணி தேவி, தாம் அதை தமது 29வது வயதில்தான் கற்றார். மிகுந்த எதிர்ப்புக்கிடையே முதன் முதலில் பிரம்ம ஞான சங்கத்தின் வருடாந்திர சந்திப்பில் மேடை ஏறினார்.
    எனக்கும் இசை, நாட்டியம், ஓவியம் போன்றவை அறிமுகமானது இங்குதான். 'கலாக்ஷேத்திரம்' தென்னாட்டுக் கலைகளை (கர்நாடக இசை, பரத நாட்டியம்{"சதிர்” என்னும் அமைப்பிலிருந்து புனரமைக்கப் பட்டது.}கத களி ) பேணிப் பரப்பும் ஸ்தாபனமாக விளங்கியது. ஓவியத்துக்கும் இடம் இருந்தது. என்றாலும் பரத நாட்டியம்தான் முதன்மையான கலையாக பயில்விக்கப் பட்டது. பள்ளியில் ஓவிய வகுப்புக்கள் மாணவர்களுக்கு தங்கள் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடம் அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கு திரு ஸ்ரீநிவாசுலுதான் ஓவியர். என் குருவும் கூட.

    ருக்மிணி தேவி பற்றி இங்கு நான் சொல்ல விழைவது  ஒரு சிறுவனாக, இளைஞனாக என் பார்வையில் அவர் காணக் கிடைத்தது பற்றித்தான். கலாக்ஷேத்திரா அமைந்த பகுதியை வசந்த சாலையிலிருந்து தாமோதர புரம், வண்ணான் துறை வழியாக திருவான்மியூர் செல்லும் சாலை பிரித்தது. ( இது தெற்கு வடக்காக அமைந்தது.)  மேற்குப்பகுதி பள்ளிக்கும், கிழக்குப்பகுதி கலைப் பள்ளிக்குமாக இருந்தது. அனேகமாக எல்லா கற்பிக்கும் கூடங்களும் தென்னம்கூரை குடில்கள்தான். மூன்றடிச் சுவர் எழுப்பி, மூங்கில் பிளாச்சுகளால் தடுக்கப்பட்டவை. சிமென்ட் தரை.  அங்கு கண்ணாடிக் கொட்டகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு பெரிய (சுமாராக பத்தடி அகலம் ஆறடி உயரம் இருக்கும்) கண்ணாடி இருக்கும். தமது நடனப் பயிற்சியை அங்குதான் அவர் செய்வார். தமது உருவத்தை கண்ணாடியில் பார்த்தபடி பயிற்சி செய்து அதில் மெருகு கூட்டுவார். நாங்கள் ஜன்னல் வழியாக எட்டி வேடிக்கை பார்ப்போம்.
(இப்படித்தான் என் தங்கை கிருஷ்ணவேணி பார்த்து அதைப்போல ஆடக் கண்டு
அவளுக்கு நாட்டியம் பயில்விக்க என் தந்தையிடம் சம்மதம் பெற்று அவளை
சிறந்த நாட்டியக் கலைஞராக்கியது வேறு கதை.)

    எப்போதும் அவரை பிறர் ஒரு பயம் கலந்த மரியாதையுடனேயே அணுகுவர். செயலில் சுத்தம், உன்னதம், முழு கவனம் இவற்றை எல்லோரிடமும் எதிர்பார்ப்பார், அவை இல்லாதபோது சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டார். இசை, நாட்டியத் துறையில் அப்போது மிகப் பிரபலமானவர்கள் (பாபநாசம் சிவன், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார், மைலாப்பூர் கௌரிஅம்மாள், சந்துப் பணிக்கர் அவர்களில் சிலர்) பல ஆண்டுகள் வந்து தங்கி பல நாட்டிய நாடகங்களுக்கு மெட்டு அமைத்தும், நடனம் பயில்விப்பதில் உதவியும் செய்தனர்.
( வளரும்)

No comments: