Monday, November 14, 2011

Avani avittam-me with uma(sister)at damodar garden house-1948

Posted by Picasa

panchali sapadham-drama-me as duryodana with folded hands-1954

Posted by Picasa

ஓவியங்கள் -அறுபதுகள்



Posted by Picasa
எண் 9-கஸ்தூர்பா நகர் முதல் குறுக்குத் தெரு-a

1950களின் தொடக்கத்தில் காந்தி நகருக்கு எதிர்ப்புறம் அடையாறு-கிண்டி சாலைக்குத் தென்புறம் கஸ்தூர்பா நகர் தோன்றியது. மேல்தட்டு நடுத்தர வர்க்க மக்களே (MIG) பெரும் பாலும் இங்கு வீடுகள் கட்டிக் கொண்டு வந்தனர். 1952 இல் நான் 7ஆவது வகுப்பில் (Seventh Form) இருந்த போதுதான் எங்கள் குடும்பம் கஸ்தூரிபா நகர் முதல் குறுக்குத் தெருவில் 9 ஆம் எண் வீட்டிற்குக் குடி பெயர்ந்தது. இந்த வீட்டிற்கு வாடகை அதிகம் என்பதால் தீவிர யோசனைக்குப் பின்பே அப்பா இந்த முடிவெடுத்தார். நாங்கள் வந்த சமயம் வீடு முழுவதுமாக கட்டி இருக்கவில்லை. மின் தொடர்பும் வந்திருக்கவில்லை. சரியான சாலையும் கழிவுநீர்க் குழாயும் அமைக்கும் பணியும் நடந்துகொண்டு இஇருந்தது.

மேற்குப் பார்த்த வாயில் கொண்ட இந்த வீடு வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, சாப்பிடும் அறை, சமையலறை, பூஜை அறை என்பதான வடிவமைப்புடன் இருந்தது. உண்ணும் அறையிலிருந்து குளியலறை செல்ல வழியும், வீட்டின் பின்புறம் செல்லும் வழியும் அடுத்தடுத்து இஇருந்தன. பம்பாய் லெட்றின் (Bombay commode) வசதி கொண்ட கழிப்பறைக்கு குளியலறையிருந்தும், வெளியிலிருந்தும் இரு வழிகள் இஇருந்தன. 5'க்கு10' என்பதாக நடைமேடை இறங்கிச் செல்லப் படிகளுடன் இருந்தது. நகராட்சிக் குடிநீர் குழாய் வசதியும் இருந்தது. நீர் வரும்போது சேமித்து வைக்க ஒரு பெரிய தொட்டியும் இருந்தது. வீட்டின் பின்புறம் தோராயமாக 20 அடிகள் நிலம் இருந்தது. பின்புறம் இடதுகோடியில் ஒரு கிணறும் உண்டு. ஆனால் அதில் உப்புநீர், எனவே குடிக்கப் பயன் படுத்த முடியாது. பின்புறம் 10 க்கு 15 அடிகள் பரப்பு கொண்ட தென்னை ஓலை வேய்ந்த குடிசை ஒன்று அமைத்துக் கொண்டோம். தளத்திற்கு சிமெண்ட் சதுரப் பரப்புகள் (1.5'-1.5') வீட்டுக்காரர் தானே தன் செலவில் போட்டுக் கொடுத்தார். அது ராஜு அண்ணன், ராஜாமணி, நான் மூவரும் வசிக்க, படிக்க என்று ஒதுக்கப்பட்டது. (ராஜு அண்ணன் விவேகாநந்தா கல்லூரியிலும் பின்னர் தாம்பரத்திலுள்ள மதராஸ் கிருஸ்துவக் கல்லூரியிலும் ஆங்கிலத்தை முதல் பாடமாகப் படித்தார். சம்பு அத்தையின் மூத்தமகன் ராஜாமணி நியூ கல்லூரியில் படித்தார்) வீட்டைச் சுற்றி வேலியும் முன்புறம் இஇடது புறத்தில் இஇரண்டு பெரிய மரக் கதவுகளும் கொண்ட தனி வீடு அது. வேலியை ஒட்டி நட்ட வேப்பங்கன்று வளர்ந்து மரமாகி வாசல் முழுவதற்கும் நிழல் கொடுத்தது. வெய்யிற் காலத்தில் அதனடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு உறங்குவதன் சுகமே அலாதிதான். தந்தை நாடாக் கட்டிலில் கொசுவலை கட்டிக் கொண்டு வெட்டவெளியில் உறங்குவார். ஆண்டுக்கு ஒருமுறை கட்டில் நாடா மாற்றுவது தடபுடலாக நிகழும். இரவில் திடீரென்று வரும் மழை எல்லோரையும் எழுப்பும்.

வீட்டை ஒட்டித் தென்புறத்தில் ஒரு பாதை -ஒழுங்கற்றது- கிழக்கில் பலகை வாராவதி சாலையில் போய்ச்சேரும். அங்கு பெரும்பாலும் வண்ணார்தான் வசித்தனர். வீட்டின் தெற்குப் புறம் வெட்ட வெளி, முன்னர் வயலாக இருந்த இடம்தான். வெட்ட வெளியில் எப்போதும் குறவர் கூட்டம் ‘டேரா' போட்டபடியிருக்கும். அடிக்கடி இரவில் அங்கிருந்து பன்றி அலறும் ஒலிகேட்கும். அவை அவர்களால் உணவுக்காகக் கொல்லப்படும்போது எழும் அவற்றின் மரண ஓலம். பன்றியைப் பிடித்து கால்களையும் வாயையும் கட்டிப்போட்டு சுற்றிலும் சூழ்ந்தபடி அவர்கள் கடப்பாரை கொண்டு அடித்து நொறுக்கி, அது இறக்கும் முன்பே நெருப்பில் போட்டு வாட்டி, அறுத்து உண்பார்கள். அதன் புலால் மிகவும் கடினமானது; எளிதில் செரிக்காது எனவேதான் இவ்வாறான கொலை என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அங்கு பன்றி இறைச்சி விற்கப்படும். பல இரவுகளில் அவர்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொள்ளும் ஒலி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பும். பின்னாளில் அங்கெல்லாம் வீடுகள் தோன்றிவிட்டன.

முன்னர் பாப்பான் சாவடியில் வசித்த வீட்டிற்கு நேர் மேற்கே அதே குளத்தை ஒட்டித்தான் இந்த வீட்டின் பின்புறம் தொடங்கியது. வரிசையாய் 6 அல்லது 7 பனை மரங்களிருந்தன. வேலியும் அவைதான். இங்கும் முதல் ஆறு மாதம் கெரசின் விளக்குதான். ராஜாமணி இரவில் எதிர்ப்புறத்தில் எழும்பிக் கொண்டிருந்த கட்டிடத்திற்கு விளக்கை எடுத்துக் கொண்டு படிக்கச் செல்வான். பின்னர் அங்கு ஒரு தெலுங்குக் குடும்பம் வந்தது. பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அடிக்கடி அங்கு வருவது உண்டு. முதல் வருடம் மழை நாட்களில் மின்சாரம் இல்லாமல் சரியான சாலையும் இல்லாமல் மிகுந்த அவதிப் பட்டோம். என்றாலும் நவராத்திரி வந்தபோது பெரிய அறையில் ஒன்பது படிகள் கட்டி பொம்மைகளை அடுக்கிக் கொண்டாடத் தவறவில்லை. எங்கள் இல்லத்தில் முறையான கொலுப்படி இல்லாததால் பென்ச், மேஜை, பெட்டிகள், புத்தகக் கட்டுகள் என்று வீட்டின் எல்லாப் பொருள்களும் படிகளாக மாறி உடையணிந்து கொண்டுவிட்டன. படிகளை அமைக்க ஒரு முழுநாள் ஒதுக்க வேண்டியிருந்தது. பின்னர் அனைவரின் யோசனைகளுடனும் பொம்மைகள் கொலுப்படிகளில் அடுக்கப் பட்டன. சுவர், ஜன்னல்கள் எல்லாவற்றையும் வேட்டி, சேலைகளைக் கொண்டு மறைத்தோம். அவ்வமையம் அருணசலபுரத்தில் குடியிருந்த சீதாராம அத்தான் கொலுப் படிகள் கட்டுவதில் உதவினார். முன்னர் அருணாசலபுரத்தில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிற்புறம் இருந்த வீட்டில்தான் பாப்பா அத்தை குடும்பமும் அப்போது வசித்தது. ரத்தினம் அங்கு தங்கி விவேகாநந்தா கல்லூரியில் மேற்படிப்பைத் தொடங்கினான்.

எங்கள்வீடு, கலாவீடு, அம்பிவீடு (கலா,அம்பி இருவரும் கிருஷ்ண வேணியின் நாட்டியத் தோழிகள்) மூன்றும் கொலு அலங்காரத்துக்குப் பிரசித்தம். கலா அதே தெருவில் மூன்று வீடுகள் முன்னால் வசித்தாள். இருவரின் இல்லமும் மிகுந்த நட்புடன் விளங்கியது. வீட்டின் அமைப்பும் ஒரே மாதிரித்தான் இருந்தது. அவள் நான்கைந்து அண்ணன்களுக்கு நடுவில் ஒரே தங்கை. மிகுந்த செல்லம். அம்பியின் தந்தை நடராஜன் கிண்டி சாலையில் எங்கள் தெரு சேரும் இடத்தில் பெட்ரோல் நிலையம் வைத்திருந்தார். உமா என்று அவளுக்கு ஒரு தங்கை. (இன்று சென்னை அபல்லோ மருத்துவமனையில் மருத்துவர்.) பெரியசாமித் தூரன், எழுத்தாளர் நாடோடி, என்று சிறப்புடன் அறியப்பட்ட பலர் எங்கள் வீட்டின் அருகில்தான் வசித்தனர். தூரன் மிகவும் எளிமையானவர். எப்போதும் வெள்ளைக் கதராடைதான் உடுத்துவார். ‘கலைக் களஞ்சியம்” தொகுப்பது அவரது பொறுப்பில் இருந்தது. அவரது பெண்கள் பையன் எல்லோரும் பெஸன்ட் உயர்நிலைப் பள்ளியில்தான் எங்களுடன் படித்தனர். அவரது வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளித்தான் ‘நாடோடி” யின் இல்லம். இருந்தது. கால்களை இறுக்கிப் பிடிக்கும் பைஜாமா, ஷெர்வாணியுடன் அவரை எப்போதும் பார்க்கலாம். தனது எழுத்தை சொந்தமாக பதிப்பித்தவர். ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராகப் பணி செய்தார். ஏராளமான நகைச்சுவை கட்டுரைகளை எழுதினார். அவற்றில் மனைவி சரசு, மகள் அனுராதா இருவரும் எப்போதும் இருப்பர். அவர் மகள் அனுராதா கோடை விடுமுறையில் எங்கள் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருப்பாள்.

வீட்டில் பூனை அல்லது நாய் வளர்ப்பது என்பது மிகுந்த பிரச்சினை கொடுக்கும் விஷயம். நான் மிகுந்த நாட்டமுடன் கொண்டு வரும் பூனைக் குட்டியை கிட்டண்னா எங்கேனும் கொண்டு போய் விட்டு விடுவார். எப்போதும் வீட்டில் அதன் தொந்தரவு என்று கூச்சலிடுவார். அதகேற்றாற்போல் அது எங்கிருந்தேனும் ஒரு ஓணான் அல்லது எலி என்று பிடித்துவந்து ஹாலில் ‘பென்ச்' அடியில் போட்டுக் கொண்டு தின்னத் தொடங்கும். விரட்டினால் நம்மிடமே உறுமும், சீறும். ஆனால் இவ் விஷயத்தில் பெரிய அண்ணன் என் பக்கம்தான். அவருக்கும் பிராணிகளின் மீது அன்பு உண்டு. ஒரு சமயம் இரண்டு முயல் குட்டிகளை யாரோ மாணவி வீட்டில் கொடுத்தார்கள் என்று வீட்டிற்கு எடுத்து வந்தார். ஒரு வலைப்பெட்டி தயார் செய்து அவற்றை வளர்க்கத் தொடங்கினோம். முள்ளங்கித் தழையும், காலிப்பூ தழையும், கேரட்டுகளும்தான் அவற்றுக்கு உணவு. காய் கடையில் வீணாகும் அவற்றை குறைந்த விலை கொடுத்தோ, அவ்வப்போது சும்மாவோ வாங்கி வந்தோம் இரவில் கூண்டைக் குளிக்கும் அறையில் பாதுகாப்பாக வைத்தோம். பகலில் ஹாலில் கூண்டைத் திறந்து வைத்தால் அவை அங்கும் இங்கும் ஓடும். நம் மடியில் படுத்து உறங்கும். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. வீட்டில் எப்போதும் முள்ளங்கி, கேரட் இலைகளின் அழுகிய நாற்றம் தாங்க முடியவில்லை. அப்புறமென்ன? முயல் வளர்ப்புக்கு வீட்டில் எதிர்ப்பு வந்து விடவே ஒருநாள். வளர்க்க வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் அவை யாரிடமோ சேர்ப்பிக்கப் பட்டன.

நான் நாய் வளர்த்ததையும் கொஞ்சம் சொல்லவேண்டும் பெரிய அண்ணன் ஒரு குட்டி நாயை ஒரு மாணவன் வீட்டிலிருந்து கொண்டு வந்தார். அது ஒரு கலப்பு இனம். அதைப் பராமரிக்கும் பொறுப்பை யாரும் சொல்லாமல் நானே எடுத்துக் கொண்டேன். அனால் மூன்று மாதங்களிலேயே அது நோய் கண்டு மாண்டுபோனது. திரும்பவும் ஒரு நாய்க்குட்டி வந்தது. இதுவும் கலப்பினம்தான். தோற்றம் நம் தெரு நாய் போலத்தான். குட்டைவாகு செம்பழுப்பு நிறம். அது வளர்ந்து பருவம் எட்டியதும் வீட்டைச் சுற்றி தெரு நாய்களின் அலைச்சல் தொடங்கியது. காந்தி நகரில் 4ஆவது மெயின் சாலையில் நெய்காரப்பட்டி செல்வந்தர் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. தந்தைக்கு முன்னரே தெரிந்த மனிதர்கள்தான். அங்கு சென்று அப்பா பாடங்கள் கற்றுத் தருவதும் உண்டு. அவர்கள் வீட்டில் ஒரு கருப்பு நிற ‘டேஷ் ஹௌண்ட்' ஆண் நாய் இருந்தது. அது எங்கள் வீட்டிற்கு வரத் தொடங்கியது. முதலில் கூட்டி வந்தார்கள். பின்னர் அதுவே ஓடிவந்து எங்கள் வீட்டிலேயே பழி கிடக்கத் தொடங்கியது. ஆனால் எங்கள் வீட்டு நாய் ஒரு தெரு நாயுடன் சேர்ந்து குட்டிகளீன்றது. அவை சில தினங்களில் ஒவ்வொன்றாக இறந்து போயின. அது வாசலில் ஒரு குழியில் இறந்த குட்டிகளைப் பாதுகாத்துக்கொண்டு எல்லோரையும் வெருட்டியபடி இருந்தது. சில நாட்கள் பெரும் சிக்கலானவையாகவே போயின. யாரிடமோ சொல்லி நாயையே அப்புறப் படுத்த வேண்டியதாயிற்று.

பெரிய அண்ணனுக்குச் செடி வளர்ப்பதிலும் மிகுந்த ஈடுபாடு. எங்கிருந்தோ குரோடன்ஸ் பதியன்களைக் கொண்டுவந்து வீட்டின் முன் புறம் அவற்றைத் தொட்டியில் நட்டு பராமரித்துச் வீட்டின் முன்புறத்தைச் சோலையாக்கினார். பின்புறத்திலும் செடிகளும் வாழைத் தோட்டமும் பயிர் செய்தார். எல்லோரும் கிணற்றிலிருந்து செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எனவே நாங்கள் ஒருவருக் கொருவர் வாளியில் தண்ணீர் சேந்திக் குளிப்போம். அங்கு ஒரு சிமெண்ட் தொட்டியில் நீர் நிறைத்து வைப்போம். ஒரு நாள் அணில் ஒன்று அதில் விழுந்து தத்தளித்தது. அதற்கு உதவ நான் அதை நீரிலிருந்து தூக்கினேன். சுரீர் என்னும் வலியை உணர்ந்தேன். அணில் என்விரலை இறுகக் கவ்விக் கொண்டு விட்டது. எவ்வளவு உதறியும் விடவில்லை. அதன் கழுத்தை அழுத்தி வாயைப் பிளந்து விரலை மீட்டேன். தன்னை விடுவித்துக் கொண்ட அது ஓடி விட்டது. விரலிலிருந்து ஏராளமான ரத்தம் ஒழுகியது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளக் கொஞ்சம் நேரமாயிற்று.

ஓவியம் எப்போது என்னை அணைத்துக் கொண்டது என்பதை அடிக் கோடிட்டுக் கூற இயலாது. பள்ளி வாழ்க்கையில் அதனுடன் ஒரு ஆழமான நெருக்கம் ஏற்பட மாணவருக்கு ஓவியம் கற்பித்த ஓவியர் ஸ்ரீநிவாசுலுதான் காரணம். விவரம் தெரியாமலே மனம் ஓவியத்தில் லயித்துப்போய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் (நேரம் உண்டாக்கிக் கொண்டும்) ஓவிய வகுப்பில் நேரம் போக்கிய நாட்கள் ஏராளம். பள்ளியில் பிற்பகல் மாணவர் பின் தங்கிய பாடத்தில் உதவி செய்ய வகுப்புக்கள் இருந்தும் ஓவியம்தான் என்னை ஈர்த்தது. ஆங்கிலம், கணிதம் இரண்டும் என்னை இழுத்துப் போட்டுப் புரட்டும். என் தந்தை "ஆங்கிலத்துக்குப் புதிய அகராதி நீதான்” என்று கேலியாகவும் கோபமாகவும் அவருடைய மனநிலைக்குத் "mood” தக்கபடி சொல்லுவார்.