Thursday, November 10, 2011

மூன்று படைப்புகள்




Posted by Picasa
அருணாசலபுரம் 2வது தெரு

ஆறே மாதங்களில் அங்கிருந்து நாங்கள் அருணாசலபுரம் 2வது தெருவில் ஒரு வீட்டிற்கு இடம் பெயர்ந்தோம். தெற்கு வடக்காக அமைந்த சாலை அது. (இப் போதைய மலர் மருத்துவ மனைக்கு எதிர்ப்புறம் உள்ள பகுதி) வீட்டின் மாடியில் வீட்டின் சொந்தக் காரர், கீழே நாங்கள். இந்த வீடு பெரியதாகவும் தெற்குப் பார்த்ததாகவும் இருந்தது. மின்சார வசதி கொண்டது. டிராயிங் ஹாலில் ஊஞ்சல் இருந்தது. பின்புறம் கிணறு, கொய்யா, மா, பலா, அருநெல்லி, மரமல்லி என்பதாகவும் கிழக்குப்புறம் வெறும் நிலமாகவும் இஇருந்தது. சாம்பு மாடி வீட்டுப் பையன், எனக்கு ஒரு ஆண்டு முந்திய வகுப்பில் என் பள்ளியிலேயே படிப்பவன். அவனது தந்தை அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். உடலில் சதைப்பற்றே இல்லாதவர். ஆனால் தாயாரோ அதற்கு நேரெதிர். மேற்குப் புறத்திலிருந்த குறுகிய நீண்ட இடத்தைத் தட்டிகொண்டு தடுத்து மேலே ஓலைக்கூரை கொண்ட இஇடத்தில் என் தந்தையுடன் வேலை செய்யும் ஹிந்தி ஆசிரியர் குடியிருந்தார். தாராபுரத்துக்காரர், பெயர் ஸ்ரீநிவாசராவ். மாத்வப் பிரிவைச் சேர்ந்தவர். மனிதர் வாயைத் திறந்தால் போதும், கெட்ட வார்த்தைகள் அருவிபோல் கொட்டும். சுற்றியிருப்பவர் காதைப் பொத்திக் கொண்டு ஓட வேண்டியது தான். வகுப்பிலும் ஆண் பெண் வித்யாசம் பார்க்காமல் ஹிந்தியிலும் தமிழிலும் ஏகத்துக்கும் திட்டுவார். நல்ல உயரமும் பருமனுமாக இருப்பார். வலிய வந்து உபகாரம் செய்வார். எங்கள் குடும்பம் போலவே அவர்கள் குடும்பமும் எண்ணிக்கை அதிகம் கொண்டது. பல சமயங்களில் மாலை நேரத்தில் அவர் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு அப்பா, அண்ணனுடன் பேசிக் கொண்டிருப்பார். பல சமயம் என்னை அங்கிருந்து துரத்துவார்கள் காரணம் சிறியவர்களுக்கான விஷயம் அல்ல என்பதுதான். ஆர்வம் காரணமாக ஏதேனும் காரணம் காட்டி அங்கு பலமுறை செல்வதும் வசவு கேட்பதும் நிகழும்.

வீட்டின் வெளிக்கதவு (Main Gate) மரத்தாலானது. உட்புறம் திறக்கும் விதமாக அமையப் பெற்றது. வீட்டின் வலப் புறத்தில் மேற்கு திசையில் அது இருந்தது. முன் புறம் சிறிய பாதை ஒன்று கிழக்கிலிருந்து வந்துசேரும். அதைத் தாண்டி இருந்த ஏராளமான தென்னைகளுடன் கூடிய விரிந்த பகுதி கோவிந்தராஜுலு என்னும் செல்வந்தருக்குச் சொந்தமானது. அருணாசலபுரம் 2 ஆவது தெருவின் எதிர்ப்புறம் பெரும்பாலும் குடிசைகள்தான். எனவே, அவர்களின் கழிப்பிடமாக இஇந்தப் பாதை தான் இருந்தது. எப்போதும் ஏதேனும் ஒரு குழந்தை பகலிலும், பெரியவர் இரவிலும் மலம் கழித்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி செல்ல அதுதான் குறுக்கு வழி என்பதால் தினமும் இந்த வழியைத்தான் கடந்து செல்ல நேரிடும்.

அந்த வீடு பிரம்மஞான சங்கத்தின் தெற்குப் பக்கத்தில் அதன் மதில் சுவருக்கு அருகாமையில் இஇருந்தது. அடையார் பாலத்துக்கு அருகில் கிழக்கில் பிரியும் அந்தத் தெரு ஊரூர் வழியாக எங்கள் பள்ளியின் நுழை வாயில்வரை நீளும். அதன் ஒரு புறத்தில் பிரம்மஞான சங்கத்தின் எல்லை மதில்சுவர் நீளும். உள்ளே செல்ல ஒரு பெரிய கதவு உண்டு. அது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திறந்து இருக்கும். அது பொதுவழி அல்ல என்றாலும் நான் பெசண்ட் பள்ளியில் படித்ததாலும், எனது அப்பா, அண்ணன் இருவரும் அங்கு பணியில் இருந்ததாலும் எப்போது வேண்டு மானாலும் தடையின்றி உள்ளே போய் வரலாம். பிரம்மஞான சங்கத்தின் அச்சகம் ‘வசந்தா பிரஸ்' அருகில் எதிர்ப்புறத்தில்தான் இருந்தது. அந்தப் பகுதி பெரும்பாலும் ஏழை மக்கள் வசிக்குமிடமாக இருந்ததால் தெரு வோரம் எப்போதும் கழிப்பிடமாகவே இருக்கும். பொதுக் கழிப்பிடம் என்பதெல்லாம் இருக்கவில்லை.

அதிகாலையில் ராமையா அண்ணனுடன் சென்று head quarters என்று அழைக்கப்பட்ட பெரிய மாளிகையில் -அது அடையாறு கடலில் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் அதன் தெற்குக்கரையில் மிக்க எழிலுடன் வாயிலில் ஏழு யானை முகங்கள் கொண்டதாய் இஇருக்கும்- நதியை ஒட்டிய வராண்டாவில் அமர்ந்து பாடங்களைப் படிப்போம். (அண்ணன் தனது B.A. தேர்வுக்கு ஆசிரியராக இருந்தபடி படித்தார்.) ஆனால் நான் படிக்கும் நேரத்தில் பெரும் பகுதியை சூரியன் கடலிலிருந்து எழும் அற்புதத்தையும், நதியில் வலைவீசி மீன் பிடிக்கும் மக்களையும் நதியின் எதிர் புறம் இஇருக்கும் அண்ணாமலை செட்டியார் மாளிகையின் எழிலையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த மாளிகை பற்றின கனவுகளும் உண்டு. அது பெரிய பசுமையான நிலப்பகுதியில் இரவுகளில் வெளேரென்று தனித்துக் காட்சிதரும். அனால் ஒரு முறைகூட அதனுள் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.

அருணாசலபுரம் வீட்டின் அமைப்பு பற்றி இப்போது தெளிவாக நினைவில்லை. கிழக்கில் இரு அறைகளும் சமையல் அறையும் ஹாலும் என்று யோசித்தால் தோன்றுகிறது. ஊஞ்சல் (வீட்டுக்காரருக்குச் சொந்தமானது) ஹாலில் இருந்தது. ஆனால் மின்விசிறி கிடையாது. பின்புறமிருந்த கிணறு அனைவருக்குமானது. குளியல் அறையிலிருதே கிணற்றில் நீர் இழுக்கலாம். ஆனால் இங்கும் கழிப்பறை மூன்றாகப் பிரிக்கப்பட்டு மேல் கூரை இல்லாமல்தான் இருந்தது. ஆள் வந்துதான் சுத்தம் செய்ய வேண்டும். சாம்பு வீட்டில் பசு ஒன்று உண்டு. நாங்கள் குடிப்போன சமயம் அது கன்று ஈன்றிருந்தது. எனவே பசும்பால் அவர்களிடமே வாங்கிக் கொண்டோம். வீட்டில் எப்போதும் வைக்கோல், சாணி, மாட்டு மூத்திர நாற்றமும் கொசுத்தொல்லையும் சகிக்க முடியாததாக இருக்கும். தொடக்கத்தில் வீட்டுக்கார குடும்பத்திடம் சுமூகமாகவும் இணக்கமாகவும் இருந்த உறவு பின்னாளில் பிடிக்காத, வேண்டாத ஒன்றாயிற்று.

சாம்புவும் நானும் நல்ல நண்பர்கள்தான். அவன் வகுப்பில் படித்த இரண்டு சகோதரர்களும் (இருவரின் அம்மாக்களும் வேறு வேறு) நாங்களும் எப்போதும் எங்கும் ஒன்றாகவே செல்வோம், இநேரம் கழிப்போம். கெட்ட வார்த்தை பேசுவது, திருட்டு ‘தம்' அடிப்பது என்று நான் வெறுத்த பலவற்றுடனும்தான் என் நட்பு அவர்களுடன் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சாம்புவுக்கும் எனக்கும் சண்டை வந்து முடிவில் ‘எனிமி' (enemy) விட்டுக் கொண்டோம். ‘எனிமி' விட்டுக்கொள்வது என்றால் ஒருவருடன் ஒருவர் பேசுவதை துண்டித்துக் கொள்வதுதான். இது கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்தது. ஆனால் அந்த நால்வர் கூட்டம் மட்டும் கலையவில்லை. பம்பரம், கில்லி தாண்டு, பட்டம், கோலியாட்டம் எதுவானாலும் இந்த சண்டை அதற்குத் தடையாக ஒருபோதும் இருந்ததில்லை. எங்களது குறும்புகள் எல்லை மீறியதால் பிரம்மஞான சங்கத்தின் நிலப்பகுதியில் நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. ஆனாலும், திருட்டுத்தனமாக நாங்கள் அங்கு செல்வது ஒருமுறை மாட்டிக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் போனதுவரை தொடர்ந்தது.

சித்தார்த் புச் என்று ஒரு மாணவன். குஜராத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்னையில் வசிக்கும் அவனது தந்தை கடல் வர்த்தகம் செய்பவர், பெரும் செல்வந்தர். புச் பள்ளியில் எனக்கு மூன்று ஆண்டுகள் மூத்தவன். அவன் ஒரு படகு வைத்திருந்தான். தனது நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் அதில் அடையார் நதியின் நடுவில் இருந்த சிறிய நிலப்பகுதிக்குப் போய் பாட்டும் கூத்துமாய் பொழுது போக்குவான். அந்தப் படகை பிரமஞானசங்கத்தின் நிலப்பகுதியில் நதியோரத்தில் ஒரு மரக்கிளையில் கட்டி வைத்திருப்பான். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவான். பொதுவாகவே ஆங்கிலவழிக் கல்வி வகுப்பில் படிக்கும் மாணவருக்கு எப்போதுமே ஒருவித அகந்தையும் மிதப்பும் இருக்கும். தமிழ்வழிக் கல்வி கற்கும் எங்களுக்கு அவர்களிடம் கொஞ்சம் கோபமும் பொறாமையும் உண்டு. ஒரு விடுமுறை நாளில் நாங்கள் அந்தப் படகை மரத்திலிருந்து அவிழ்த்து அதில் பயணித்து அந்த நிலப் பகுதிக்குச் சென்று விட்டோம். எங்களில் யாருக்கும் நீச்சல் தெரியாது. எங்கிருந்தோ புச் வந்து விட்டான். படகைக் காணோம் என்றவுடன் அங்கிருந்த காவலாளியிடம் விவரம் கேட்டுத் தெரிந்து கொண்டு நதியை நீந்தி வந்து விட்டான். ஏகத்துக்கும் அங்கிலத்தில் திட்டினான். எங்களைப் படகுடன் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்தான். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இழுத்துக்கொண்டுபோய் நிறுத்தி விட்டான். கடுமையான தண்டனையை எதிர் நோக்கிய நாங்கள் நீச்சல் தெரியாமல் நதியில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்னும் அறிவுறுத்தலுடன் மீண்டது பெரிய விஷயம்தான். ஆனால் புச் பின்னர் நெருக்கமான நண்பணானான். பலதடவை அவனுடன் படகில் போவதும் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு அடையார் கடற்கரையில் நீச்சல் தெரியாமலேயே குளிப்பதும் நின்று போயிற்று. எனது பெரிய அண்ணன் நீச்சலில் மிகவும் திறமைகொண்டவர். மணிக்கணக்காக கடலில் மிதப்பார்.

குனேகா நிறுவனத்தில் குளிக்கும் சோப்பு, ஊதுபத்திகள், சென்ட் வகைகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டன. நிறுவனத்தின் முதலாளி குடும்பம் மதுரையைச் சார்ந்த சௌராஷ்ட்ர பட்டுநூல்காரப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அடையாரில் தொழிற் சாலையும் அடையாறு நதி தாண்டி கிரீன்வேஸ் சாலையில் வசிக்க பெரிய மாளிகையும் இருந்தன. இன்று ஆந்திர மகிள சபா மருத்துவமனை இயங்கும் மாளிகைதான் அது. அவர்கள் வீட்டுப் பையன் ரவீந்திரன் என்னுடன் பள்ளி இறுதி வரை படித்தான். தினமும் ஒற்றை மாட்டு வண்டியில் தம்பியும் அவனும் அடையார் பாலம் தாண்டி பள்ளிக்கு வந்து செல்வார்கள். எங்களில் சிலர் அவ்வப்போது அவர்களுடன் வண்டியில் பள்ளிக்குப் போவோம். சில நாட்களில் அவன் ஒருவரையும் ஏற்றிக் கொள்ளாமல் சென்று விடுவதும் சிறுவர்கள் வண்டியைப் பிடித்தபடி ஓடுவதும் நிகழும். நான் அவ்விதம் வண்டியின் பின்னால் ஓடமாட்டேன். வண்டியில் ஏற்றிகொள்ளும்படி கேட்கவும் மாட்டேன். கோடை விடுமுறை நாட்களில் நண்பர்களில் சிலர் அவன் வீடு சென்று கிரிகெட் விளையாடுவோம். அங்கு எல்லோருக்கும் சிற்றுண்டி அல்லது ரொட்டி, பால் தவறாமல் கொடுப்பார்கள் .உற்சாகமாக உண்போம்.

எங்கள் வீட்டின் எதிர்புறம் பரவலாக இருந்த குடிசைகளில் ஒன்றில்தான் அந்த பிராமணக் குடும்பம் வசித்து வந்தது. மிகவும் ஏழ்மை நிலையில் அவர்கள் இட்லி விற்றும், பல்வேறு தின்பண்டங்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுத்தும் பிழைப்பு நடத்தி வந்தனர். பல நாட்கள் அவர்கள் குடிசையிலேயே மண் தரையில் தையல் இலையில் காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டுப் பள்ளி சென்றதும் உண்டு. ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வீட்டுக்கே வரவழைத்து உண்டதும் உண்டு. இந்த வீட்டில் வசித்த போதுதான் நான் சைகிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். பல நாள் வரை பின்னால் அமரும் கேரியர் (carrier) இல் அமர்ந்த படிதான் ஓட்டினேன். ஆனால் சிலரைப் போல அதில் சாகசங்கள் செய்ய மனத் திடம் இருக்கவில்லை. ஒரு கையை ஹாண்டில் பாரை பிடிக்காமல் ஓட்டவே மிகவும் சிரமப் பட்டேன். எனக்கு யானைக்கால் நோய் காய்ச்சல் வந்து, நடக்க முடியாமல் போய் தொடர்ந்த சிகிச்சை செய்துகொண்டு மிக மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அதற்கு சாப்பிட்ட மாத்திரை காரணமாக சிறுநீரே நீலநிறத்தில் இருந்தது. ஆண்களெல்லாம் திறந்த வெளியில் தான் சிறுநீர் கழிப்போம். திட்டுத்திட்டாக நீலநிறக் கறை ஆங்காங்கு தென்படும். வலது பாதத்தில் கொஞ்சம் வீக்கம் இப்போதும் எப்போதேனும் தென்படும். சாம்பு வீட்டில் பசுங்கன்று இறந்து அதற்காக அவன் அம்மா மிகவும் வருந்தி அழுதது, பசுவே கன்று ஈனும்போது ஏதோ பிரச்சினை வந்து அதன் கருப்பை வெளியே வந்துவிட, மிகுந்த அவஸ்தைக்குப் பிறகு இறந்தது எல்லாம் மனதில் பதிந்த சோகங்கள்.

Sunday, November 6, 2011

Landscape-oil on paper-1959

Posted by Picasa

Me in 1947

Posted by Picasa

my parants

Posted by Picasa
ஆறு மாத வீடு

கடற்கரையருகில் சவுக்கங்காட்டினிடையில் பிரம்மஞான சங்கத்திற்குச் சொந்தமான சில வீடுகளிருந்தன. அந்தப்பகுதி மிகவும் ஒதுக்குப்புறமானது. எலியட் கடற்கரையை ஒட்டியது. 1949 ஆம் ஆண்டு. பள்ளியின் கோடை விடுமுறை சமயம். பள்ளி நிர்வாகிகள் எங்களை அங்கு இடம்பெயரச் சொல்லிவிட்டார்கள். விட்டல் ஐயர் குடும்பம் முன்னரே அங்கு போய் விட்டிருந்தது. நகருக்குச் சென்றால் இரவுகளில் மின் வெளிச்சம் இல்லாத அந்தப் பொதுச் சாலையில் (வசந்த சாலை) நடந்துதான் வீடு திரும்ப வேண்டும். அந்த சாலையின் இருபுறமும் பிரம்மஞான சங்கத்தின் நிலம் இருக்கும். பெரும் வனத்தையொத்த அதன் தோற்றம் யாரையும் அச்சுறுத்துவதாக இருக்கும். தினமும் அதி காலையில் எலியெட் கடற்கரைக் குப்பத்திலிருந்து பெரும் சுமையுடன்கூடிய மீன் கூடைகளைத் தலையில் சுமந்தவாறு பெண்களும் ஆண்களும் மயிலாப்பூர் தண்ணித்துறை அங்காடிக்குப் போவார்கள். முறைபோட்டுக் கொண்டு கூடையின் பாரம் தாங்கி இடை சுழலச்சுழல அவர்கள் பெரு நடையாகப் போவது சிறுவனான எனக்கு மிகக்களிப்பாக இருக்கும். இப்போது பிரம்மஞான சங்கத்தின் நூலகம் அமைந்திருக்கும் கட்டிடத்துக்கு எதிர்புறச் சாலையில்தான் ‘கல்யாண பரிசு' திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் சைகிள் ஓட்டியபடி பாடும் காட்சி படமாக்கப்பட்டது. சரோஜாதேவிக்கு ஓட்டத் தெரியாது. யாரேனு மொருவர் பின்னாலிருந்து சைகிளை தள்ளி விடுவார்கள். அது விழா வண்ணம் யாரேனும் கூடவே ஓடுவார்கள். கணேசனோ உல்லாசமாக சைக்கிளில் சுற்றிச் சுற்றி விசில் அடித்தபடி ஓட்டி வருவார். திரைப்படக் கலைஞர் தமது உல்லாசத்துக்கு அல்லது நிதியுதவிக்குக் கிரிகெட் விளையாட எங்கள் விளையாட்டுத் திடலைத்தான் தேர்ந் தெடுப்பார்கள். அங்குதான் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் விளயாடமுடியும். ஜெமினி கணேசன், மனோஹர், நம்பியார் போன்ற சிலர் திறமையுடன் விளையாடு வார்கள். நாங்கள் உரிமையுடன் அங்கு உலாவுவோம், அவர்களுடன் பேசுவோம். அவர்களுக்கு போலிங் போடுவோம். இப்போது அந்தத் திடலில்தான் முன்னர் அடையாறு நதியை ஒட்டி அமைந்திருந்த ஆல்காட் பள்ளி இயங்கி வருகிறது.

அங்கு குடிப்போக விருப்பம் இல்லாமல் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறி பாப்பான்சாவடி என்று அந்நாளில் அழைக்கப்பட்ட இன்றய அடையார் சிக்னல் (adyar signal) அருகில் (திருவான்மியூர் போகும் சாலை) ஒரு வீட்டிற்குக் குடிப்போனோம். (செக்குமேடு என்றும் அந்தப் பகுதி அறியப்பட்டது) அதற்கு எதிர்ப்புறம் குனேகா கம்பெனியின் பெரிய வளாகம் இருந்தது. பின்னாளில் ஈராஸ் தியேட்டர் அருகிலேயே கட்டப் பட்டது. அடையாருக்கு அதுதான் முதல் முறையான திரையரங்கு. இப்போது திருவான் மியூரில் ஜெயந்தி, தியாகராஜா திரையரங்குகள் இருக்குமிடத்தில்தான் டென்ட் கொட்டாய் எனப்படும் திரையரங்குகளில் 35MM எனப்படும் உருளை கொண்டு திரைப் படங்கள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு ரீல் முடிந்தவுடன் மங்கிய விளக்கொளியில் பிஸ்கட் தேநீர் விற்கும் சிறுவர்கள் அவற்றைக் கூவி விற்பார்கள். அவற்றை வாங்கி உண்ணக்கூடாது என்னும் கண்டிப்புடன்தான் படம் பார்க்க அனுமதி கிட்டும்.

நாங்கள் குடிப்போன இந்த வீட்டின் முன்புறம் திறந்த வெளியும் நீண்ட பாதையும், கொண்டது. அது பொதுச் சாலை (பலகைவாராவதி சாலை) வரை போகும். வீட்டை சுற்றி வேலியும் நுழைவாயிலில் இரும்பு கம்பிகள் மேல்கீழாகக் கொண்ட இரண்டு பெரிய மரக்கதவுகளும் கொண்டது. ஆங்காங்கே வளர்ந்த புளியமரங்கள் இருக்கும். பின்புறமும் நிலம் நீண்டு பராமரிப்பற்றுக் கிடக்கும். முடிவில் ஒரு குளம். தெற்கில் வேலியை அடுத்து கிழக்கு மேற்காக சிறிய சந்து உண்டு. அங்கு வசிக்கும் குடிசைவாழ் மக்கள் மலம் கழுவ இஅந்தக்குளத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள். எப்போதும் மல நாற்றம் வீசும். “சர்வ குண்டித் தீர்த்தம்” என்று அந்தக் குளத்தைக் குறிப்பிடுவார்கள் எங்கள் வீட்டில். மின் வசதி இல்லாத வீடு அது. எனவே தினமும் மாலையானதும் ஐந்து அல்லது ஆறு ‘ஹரிகேன்' விளக்குகளின் கண்ணாடியை விபூதிப் பொடி கொண்டு அதில் படிந்திருக்கும் புகையைத் துடைத்துச் சுத்தம்செய்து, மண்எண்ணெய் ஊற்றி, திரியைச் சரிசெய்து அம்மா விளக்கேற்றுவார். மாடிப் பகுதியில் வீட்டுக்காரர் வசித்தார். அவர் மொழி தெலுங்கு. அவர் பெயர் சாம்பசிவ ராவ். “சாம்பசிவரவு” என்றும் “சம்பாசிவரவு” என்றும் உறக்கக் கத்தியபடி மரங்களைச் சுற்றிச்சுற்றி ஓடியும், சுற்றுச் சுவர்களில் கரிகொண்டு எழுதியும், கூட்டம் கூட்டமாய் சண்டையிட்டுச் செத்து மடியும் எறும்புகளை நேரம் போவது தெரியாமல் பார்த்தபடியும் தனியாகவே இருக்கக் நேர்ந்தது எனக்கு. பள்ளிக்கு அங்கிருந்து சென்றது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.

ஜட்காவண்டி என்று அழைக்கப்படும் குதிரை வண்டிகள் வரிசையாக வசந்த சாலையிலிருந்து தெற்குப்புறம் திரும்பும் பலகைவாராவதி சாலையோரத்தில் நிற்கும். அன்று சென்னை நகரம் முழுவதும் இம்மாதிரிக் குதிரைவண்டி நிலையங்களைக் காணமுடியும். இன்றும் ரிப்பன் கட்டிடத்தின் எதிர்ப்புறம் குதிரை வண்டிகளும் போதிய உணவில்லாததால் பரிதாபமாகக் காட்சியளிக்கும் தொத்தல் குதிரைகளும் காணக் கிடைகின்றன. திருவான்மியூர் போக 19 ஆம் எண் பஸ் தவிர வேறு வசதி ஏதும் கிடையாது. அதுவும் ஒரு மணிக்கு ஒரு முறைதான் வரும். பலசமயம் வராமலும் இருந்து விடும். அடையார் திருவான்மியூருக்கு இடைப்பட்ட நிலம் வயல்வெளிதான். பலகை வாராவதி (பக்கிங்ஹாம் கால்வாய்) கால்வாயில் நீரின் அளவு குறைவாக இருக்கும் எனவே, பல்வேறு பண்டங்களை ஏற்றிய நீண்ட படகுகளை நீண்ட மூங்கில் கொம்புகளால் குத்தித் தள்ளி போவதும் வருவதுமாக இருப்பார்கள். குஞ்சு அத்தையும் அவர் மகன் சீத்தாராம அத்தானும் அப்போதுதான் திருவான்மியூருக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். அத்தை அதுவரை எங்களுடனே தான் இருந்தார். அவர் இல்லாதது குழந்தைகளான எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவரது இட்டுக்கட்டிக் கதை சொல்லும் திறமை பெரிவர்களையும் அமர்ந்து கேட்கச் சொல்லும்.