Monday, December 12, 2011

Drawings-1960s




Posted by Picasa

ஓவியங்கள் - 1960s





Posted by Picasa

சென்னை ஓவியப்பள்ளி-a

எனது குரு ஸ்ரீநிவாசுலு சென்னையில் பிறந்தபோதும் தனது இளமைக் காலத்தை சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் என்னும் கிராமத்தில் கழித்தார். அவரது தந்தை பொம்மைகள் செய்வதிலும் நாடகக் கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராயிருந்தார். எனவே, வண்ணமும் தூரிகையும் ஸ்ரீநிவாசுலுவுக்குப் புதிதல்ல. பின்னர் சென்னை ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் கற்றார். படிப்பு முடிந்தபின் பிரம்மஞான சங்கத்தின் வளாகத்தில் ஒருநாள் அவர் இயற்கையை ஓவியமாக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட ருக்மிணிதேவி அவரைத் தம்முடைய கலாக்ஷேத்திரத்தில் ஓவியராகப் பணிபுரியச் சேர்த்துக் கொண்டார். ஸ்ரீநிவாசுலுவிடம் என்னை ஈர்த்தவை அவரது நிலம்சார்ந்த வண்ண அணுகுதலும், அழுத்தமும் துல்லியமும் கொண்ட கோடுகளும்தான். பிசிரற்ற, ஒரு சாட்டை போன்ற கோட்டை கித்தானில் தூரிகைகொண்டு தீட்டும்போது அந்த லாகவம் எவரையும் பிரமிக்க வைக்கும். தனது உடன் படித்த ஓவியத் தோழர்களைப் போலவே அவரும் ஆங்கில ஓவியப் பாணி நிலக்காட்சிகளைத்தான் கருப்பொருளாகக் கொண்டார். 1948-51களில் லேபாக்ஷி கோயில் ஓவியங்களை தாளில் நகலெடுத்த போதுதான் அவர் தனது ஓவியத் தடத்தை அடையாளம் கண்டார் என்பர் கலை வல்லுனர். கருப்புடன் சேர்ந்த நிறமாயினும் சுண்டியிழுக்கும் கண்களும் கூர்மையான நாசியும் பளிச்சென்னும் சிரிப்பும் யாரையும் வசமாக்கும். சராசரி உயரம்தான். தோள்வரை புரளும் கேசம். வெற்றிலை சுவப்பதை விரும்புவார். ஆனால் முறையாகப் பள்ளியில் படிக்காததால் மொழிச் சிக்கல். குறிப்பாக ஆங்கிலம். ஆங்கில மொழி ஆசிரியர் வெங்கடேஸ்வருலுதான் அவருக்குக் கடிதங்களை எழுத, வரும் கடிதங்களுக்கு பதிலனுப்ப உதவுவார்.

மாதக்கணக்கில் ஓவியம் தீட்டாமல் இருப்பார். திடீரென்று ஒரு நாள் அவருள் உறங்கும் கலைஞன் விழித்தெழுவான். குப்பி வண்ணங்களும் (Poster Colours) தூரிகைகளும் சட்டியில் நீரும் (அது தூரிகைகளை கழுவ) அருகிலிருக்க மார்பில் கட்டிய லுங்கியுடன் தரையில் சப்பணமிட்டு அமர்வார். ஒரே அளவான கெட்டி அட்டைத் தாள்களை அடுக்கிவைத்துக் கொள்வார். பின்மாலை தொடங்கி இரவு முழுவதும் ஓவியங்கள் தீட்டுவது நிகழும். வண்ணங்களைக் குழைக்க கடப்பாக்கல் தரையையே பயன் படுத்துவார். தொடர்ந்து தேநீர் வெற்றிலை என்பதுடன் படைப்பு நிகழும். இன்று நினைத்தாலும் அந்த நேரத்தில் கிட்டிய மகிழ்ச்சியும் பிரமிப்பும் முழுமையாக உள்ளது. அவரது குடும்பம் அளவில் பெரியது. அதிக இடைவெளி இல்லாத விதமாய் குழந்தைகள் அவற்றில் இரட்டையாக ஒருமுறை ஆண் பின்னர் பெண். நான் அவரைக் காணச்சென்ற போதெல்லாம் உணவும் சிற்றுண்டியும் நேரத்தைப் பொறுத்து தவறாமல் கிடைக்கும்.

சென்னை ஓவியப்பள்ளியில் பயில வரும் மாணவனுக்கு அதற்கான ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒரு நுழைவுத் தேர்வு உண்டு. அதற்கென ஸ்ரீநிவாசுலுவிடம் மனிதனின் முகம் மற்றும் முழு உருவம் வரைவதில் பயிற்சி பெற்றேன். என்னுடன் எங்கள் பள்ளியிலேயே படித்த பகவத்கீதா என்னும் பெண்ணும், S.V.ராமாராவ் என்பவனும் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். (இப்போது அவன் புகழ்பெற்ற ஓவியனாக அயல் தேசத்திலேயே வசிக்கிறான்.) எங்களை ஸ்ரீநிவாசுலு அப்போது மயிலையில் வசித்து வந்த அவரது பள்லித் தோழரும் ஓவியப் பள்ளியில் பணிபுரிபவருமான திரு தனபாலிடம் கூட்டிச் சென்றார். எங்களைப் பள்ளியில் சேர்க்க சிபாரிசு செய்தார். எங்கள் கோட்டு சித்திரங்களை அவரிடம் காண்பித்தோம். பின்னர் முறைப்படி விண்ணப்பித்தோம். தேர்வுக்கான அழைப்பு வந்தது. ஓவியப் பள்ளியின் வாயிலில் அதற்கென வந்தவர்கள் சுமார் 40 பேர் கூடியிருந்தோம். நல்ல நிறமுடைய ஒருவர் எங்கள் பெயர்களைப் படித்து, தேர்வுக் கூடத்துக்கு அனுப்பினார். அவர்தான் K.C.S.பணிக்கர் என்று பின்பு தெரிந்து கொண்டேன். முதல்வர் திரு.ராய்சவுத்திரி வெளிநாடு போயிருந்ததால் இவர்தான் அப்போது முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

நான்கு நாட்கள் தேர்வு நடந்தது. காலை நேரத்தில் மனிதனின் முகம் (முன்னால் அமர்ந்திருக்கும் மனிதன் முகம்) வரைவது இரண்டு நாட்கள்; மனிதனின் முழு உருவம் வரைவது இரண்டு நாட்கள். பிற்பகலில் எங்கள் சொந்த ஓவியம் வண்ணத்துடன் தீட்ட வேண்டும். முதலில் ஒரு மாதிரி நடுக்கமாக, பயமாகக்கூட இருந்தது. நடுவில் மனிதன் (model) இருக்க சுற்றிலும் சரிந்த மேஜையின் முன் நின்றபடி, அல்லது அமர்ந்தபடி பார்த்து வரையவேண்டும். பெரிய சவாலாகத்தான் இருந்தது இது.

மூன்று மாதங்கள் ஓசையின்றி போயின. இரண்டு முறை பள்ளி சென்று விசாரித்தேன். பொறுமைதான் பதில். தேர்வின் முடிவும் வந்தது. நான் மூன்றாம் ஆண்டுக்கான வகுப்பில் சேர்த்துக்கொள்ளப் பட்டேன். (double promotion) அப்போது இது ஆறு வருடப்படிப்பு. முதல் 2 ஆண்டு பொதுநிலைக் கல்வி (general drawing). பின்னர் மூன்று ஆண்டுகள் மாணவன் தேர்ந்தெடுக்கும் ஓவிய அல்லது சிற்ப கல்வி; கடைசீ ஆண்டு முடித்தால் பட்டையம் இல்லாவிட்டால் சான்றிதழ் என்று கல்வி முறை இருந்தது. நான் பிடிவாதமாக நுண்கலை ஓவியம் (fine arts) தான் படிப்பேன் வர்த்தக விளம்பரம் சார்ந்த ஓவியம் (comercial arts) படிக்க மாட்டேன் என்று அதில் சேர்ந்து கொண்டேன். கால் காசுக்கு ஆகாதது என்று வீட்டில் எல்லோரும் கோபித்தார்கள். ஆனாலும் இரட்டைத்தேர்வு (double promotion) கிடைத்ததில் ஒரு திருப்தி. பள்ளியில் ‘கோட்டு' அடித்ததனால் உண்டான அவமானத்துக்கு இது பெரிய ஆறுதலாக அமைந்தது. அந்த ஆண்டு செப்டம்பரில் திரும்பவும் S.S.L.C. பரிட்சை எழுதித் தேரினேன். அப்போது எல்லாப் பாடங்களையும் ஒருமித்து எழுதித் தேர்வு பெற்றால் தான் கல்லூரிப் படிப்பு படிக்க முடியும். நான் கல்லூரி செல்வது என்பது இயலாதது. ஆனாலும் பின்னாளில் ஆசிரியப் பணியில் இருந்தபோது பட்டப்படிப்பு படிக்க முடிந்தது.

வர்த்தக விளம்பரம் சார்ந்த ஓவியப் படிப்பு (commercial arts) என்பது விளம்பர நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் முறை. அது முடித்ததும் எப்படியும் ஒரு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் நான் மனதில் செய்து கொண்ட முடிவு ஓவிய உலகில் ஒரு சிறந்த, புகழ்மிக்க, ஒரு நிரந்தர பெயர் பதித்த ஓவியனாக உயர வேண்டும். கனவுதான் என்றாலும் என்னை வானத்தில் பறக்கச் செய்தது அது. அடிப்படை வண்ணங்கள். தூரிகைகள், வரையக் காகிதங்கள், பென்சில்கள் என்று தந்தையுடன் பாரிஸ் வளாகத்தில் இருந்த பெருமாள்செட்டி கடையில் வாங்கிக் கொண்டு ஓவியப் பள்ளியில் போய் சேர்ந்தேன். (பெருமாள்செட்டி ஸ்தாபனம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.)

ஓவியப் பள்ளியின் வளாகத்தில் சிவப்பு வண்ணம் பூசிக்கொண்ட, இரண்டு அடுக்குக் கட்டிடம் பற்றி முதலில் சொல்ல வேண்டும். ஒரு பெரிய, விலாசமான கீழ் தளம். இது ஓவியக் காட்சிகளுக்கு, அது சார்ந்த கூட்டங்களுக்குப் பயன் படுத்தப்படும் இடம். நூலகமும் அதில்தான். பூந்தமல்லி சாலையில் இதற்கு நுழைவாயில் உண்டு. பொதுவாக மூடியே இருக்கும். நூலகமும் மாணவர் பயன் படுத்தும் நிலையில் இருக்க வில்லை. முதல், இரண்டாம் தளம் வகுப்பறைகள். சிறப்பான வெளிச்சம் பெறும் அமைப்புகளைக் கொண்டவை. பத்துக்குப் பத்து அடி மர மேடை, சுற்றிலும் உயர்ந்த சாய்வான மேஜை, அமர கைப்பிடிகளற்ற ஸ்டூல்கள் என்று இருக்கும். ஆங்காங்கே பெரிய மரத்தடுப்புகள் இருக்கும். இவற்றில் மாணவர்கள் தமது படைப்பு முயற்சிகளை ‘பின்' கொண்டு குத்திப் பார்வைக்கு வைப்பார்கள். நடுவில் இருக்கும் மேடையில் model என்று குறிப்பிடப்படும் மனிதர்கள் வெறும் கோவணத்துடன் நிற்கவைக்கப் படுவார்கள். தேவைக்குத் தகுந்தவாறு ஒளி அமைக்கப்படும். மேடையைச் சுற்றி நாற் புறமும் மாணவர்கள் பரவி, அவனைப் பார்த்துக் கரிக் குச்சியால் வரைவார்கள். ஒரு வாரம் முகம், ஒரு வாரம் முழு உருவம் என்பதாக காலைப் பொழுது பத்து மணி முதல் இரண்டு மணி வரை இருக்கும். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஐந்து நிமிட இடைவெளி இருக்கும். மாணாக்கர் தமது திறமையை உயர்த்திக்கொள்ள, பக்குவப்பட என்பதுடன் இது அந்த மனிதனுக்கும் ஓய்வாக அமையும் அவனுக்கு மிகக்குறைந்த நாட்கூலிதான் கிட்டும். மாணவர்கள் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி செய்வார்கள். அவ்விதமே பெண்களும் ‘மாடல்' முறையில் உடையின்றி நிற்க, அமர, படுக்க என்று பல நிலைகளிலும் காட்சிப்படுத்தப் படுவார்கள். ஆனால், மூன்றாமாண்டு வகுப்புகளிலிருந்துதான் இது நிகழும். மாணவர்கள் உடல்கூறு பற்றி நேரிடை அனுபவம் பெற இவை பெரிதும் உதவும். உடையவிழ்த்து பலர் கண்கள் மொய்க்கப் பலமணி நேரம் நிற்கும் நடுவயதுப் பெண்ணொருத்தி ஒருமுறை என்னுடனேயே எழும்பூர் ரயில் நிலயத்தில் வண்டியேறி என்னுடன் யதேச்சையாகப் பயணம் செய்தாள். நான் மிகுந்த கூச்சமாக உணர்ந்து அவளை தவிர்த்தேன். அவளோ இயல்பாக என்னுடன் பேசியபடி பயணித்தாள்.

இதல்லாமல் வெள்ளிக் கிழமைகளில் ‘ஸ்டில் லைஃப்' (still life) என்று அறியப் படும் ‘பொருள்தொகுப்பு' மேஜையில் அமைக்கப்படும். இதில் உயிரற்ற பொருட்கள், (கனி, பூ என்பன போன்றவை) இடம் பெறும். ஒரு சமயம் வெட்டிய ஆட்டின் தலை கூட இடம் பெற்றது. அன்று முழுவதும் எல்லோரும் அதை வரைவது, வண்ணங்களில் தீட்டுவது என்று செல்லும். மாலையில் ஏலம் விட்டு அனைவரும் பகிர்ந்து உண்போம். (பழங்கள் மட்டும்தான் இதில் அடக்கம்). ஆசிரியர் பெரும்பாலும் மாணவனின் வரைதலில் குறுக்கிட மாட்டார். தனது தவறுகளை, பிரச்சினைகளை அவனே அறிந்து தீர்ப்பதுதான் இதன் நோக்கம். அவர் பொதுவாக ஓவியம் பற்றி, செயல்முறை பற்றிப் பேசுவார். தாமும் எங்களுடன் வரைவார். அப்போது அது ஒரு செயல் முறை விளக்கமாக அமையும்.

ஒருமணி நேரம் மதிய உணவுக்காக ஒதுக்கப்படும். பிற்பகல் நாங்கள் எங்கள் சுயபடைப்புக்களை, வண்ண ஓவியங்களை உருவாக்குவதில் ஈடுபடுவோம். முதல் இரண்டு ஆண்டில் நீர் வண்ணத்திலும், மூன்றாம் ஆண்டு முதல் தைல வண்ணத்திலும் ஓவியம் தீட்டப் பயிற்றுவிக்கப்படும். அடிப்படையான வண்ணங்களைக் கையாள்வது, புதிய வண்ணக் கலவையை உருவாக்குவது என்பது போன்ற பொதுவான விஷயங்கள் கற்றுத்தரப்படும். பெரும்பாலும் இவை பிறர் செய்வதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் விதமாகவே அமையும். நாங்கள் வகுப்பை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியே போகலாம், வரலாம். ஒப்புக்குச் சொல்லி விட்டுச் செல்வோம். பிற்பகல் பல நாட்களில் ‘அவுட் டோர் ஸ்டடி' (outdoor study) என்று சென்னையை சுற்றுவதற்கும், காணும் காட்சிகளில் மனம் லயிப்பதை பதிவு செய்யவும் இது உதவும். மறுதினம் வகுப்பில் எங்களுக்குள் இவற்றை வைத்து விவாதங்களும் நடக்கும். ஆசிரியரும் இதில் தமது அனுபவங்களைச் சொல்லி உதவுவார்.

சிற்பப் பகுதிக்கு வேறு கட்டிடம்; இந்த சிவப்புக் கட்டிடத்தை ஒட்டியது. இங்கு வகுப்பின் அமைப்பே வேறாக இருக்கும். சுழலும் வசதி கொண்ட சமதளப் பலகை (3க்கு3அடி) பொருத்தப்பட்ட அமைப்புகள் தரையில் இருக்கும் மற்றொரு பலகையுடன் இணைக்கப் பட்டிருக்கும். மாணவன் நின்றவாறு பலகையில் களிமண் கொண்டு உருவம் சமைப்பான். வடிவத்துக்குத் தக்கவாறு முதலில் கம்பியால் இதற்கு அடித்தளம் உண்டாக்கப் படும். அறை முழுவதும் எங்கும் களிமண், தொட்டிகளில் தண்ணீர், தரையில் நசநசப்பு என்றிருக்கும். இங்கும் முன்னர் சொன்னது போலவேயான பாட திட்டம்தான் பின்பற்றப் பட்டது. விளம்பரத் துறை ஓவியப் படிப்பு ஒரு மாணவனை சரியான விளம்பர ஓவியனாக உருவாக்கியது. இதற்கான கட்டிடம் பெரிய கட்டிடத்துக்கு நேரெதிரில் ஒரு 150 அடி இடைவெளியில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது.

எண் 9-கஸ்தூர்பா நகர் முதல் குறுக்குத் தெரு-2

‘கல்கி' எழுதிய ‘பொன்னியின் செல்வன்' தொடர் அப்போதுதான் தொடங்கி வந்து கொண்டிருந்தது. ஓவியர் மணியத்தின் சித்திரங்களை பார்த்து வரைவது எனக்குப் பிடித்தமான ஒன்றானதால் எனது எல்லா நோட் புத்தகத்திலும் முன்பக்கம் பாடமும் பின்புறம் கோட்டுச் சித்திரங்களும் தவறாமல் இருக்கும். ஒரு முறை கணித வகுப்பில் நான் என்னை மறந்து (வழக்கம் போல்) சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன். அப்போது நான் ஒன்பதாவது நிலையில் (Ninth form) இருந்தேன். கணித ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் நோட்டை வாங்கிப் பார்த்தார். உன்னிப்பாக எல்லாப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்து விட்டு ஒன்றும் கூறாமல் திருப்பிக் கொடுத்தார். சற்று பொறுத்து, “உன் ஓவியத் திறமையை ஓவிய நோட்டில் காட்டு. கணிதம் பயிலமட்டும் கணித நோட்டைப் பயன்படுத்து.” என்று சொன்னவர் மேலும் சொன்னார், "நாகராஜா விதி என்ன விசித்திரமானது பார்! நான் உனக்கு கணிதம் கற்பிக்க வேண்டும். உனக்கோ ஓவியம்தான் பிடிக்கிறது நீயும் நானும் இப்படியே உன் படிப்பு முடியும் வரை இந்த விளையாட்டை தொடர்ந்தாக வேண்டும்.” நான் தலையை குனிந்தபடி நின்றேன். அவரிடம் நான் வேறு பல ஒழுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். கணிதம் கடைசீ வரை வரவே இல்லை. பின்னர் ஓவிய நோட்டில் அவ்வகை கோட்டோவியங்களை வரைந்தேன். பலரும் அவற்றைக்கண்டு உற்சாகப்படுத்தினார்கள். அந்த ஓவியங்கள் ஸ்ரீநிவாசுலு கண்களில் பட்டுவிடவும் அவர் என்னைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். அவ்வாறு ஏன் கடிந்து கொண்டார் என்பது எனக்கு அப்போது புரியவில்லை. பலமுறை கேட்டும் அவற்றை எனக்குப் பின்னர் அவர் கொடுக்கவேயில்லை. ‘சொந்தமாக ஓவியம் பழகு' என்று மட்டும் கூறினார்.

கணித ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் எல்லோரிடமிருந்தும் மிகவும் வேறு பட்டவர். ஆகிருதி அதிகம் இல்லாத வெளுப்பான நிறம் கொண்டவர். முகத்தில் கடுகளவும் புன்னகைச் சாயல் இராது. ஆனால் யாரையும் என்றுமே கடிந்து பேசாதவர். காந்தீய சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தானே ராட்டையில் நூல் நூற்று, கதர் கடையில் அதற்கு ஈடாக கதர் துணி வாங்கி, ஜிப்பா தைத்துக் கொள்வார். (எனது பெரிய அண்ணன்கூட பல ஆண்டுகள் பஞ்சுப்பட்டை வாங்கி நூற்றுக் கதர் உடை அணிந்து வந்தார். தனது திருமணத்தின் போது கூட கதர்பட்டு ஜிப்பாதான் அணிந்தார். நானும் சர்க்காவில் நூல் நூற்று உதவியது உண்டு.) ஆண்டுக்கு இரண்டு கதர் வேட்டி பச்சை அல்லது நீலநிறப் பட்டைசாயக் கோடு போட்டது இரண்டு ஜிப்பா, இரண்டு துண்டுகள்தான் ஒரு வருடத்துக்கான அவர் உடை. பழைய வேட்டிகள் கோவணமாகி விடும். ஜிப்பா கிழிந்து விட்டால் ஒட்டுப் போட்டு அணிவார். பனியன் போட்டதே கிடையாது. காசநோயால் பாதிக்கப்பட்டவர் என்பார் என்னப்பா. யாரையும் தன்னருகே அணுக விடமாட்டார். அதிலும் பெண்கள் என்றால் நான்கு அடிகள் தள்ளி நின்றபடி தான் தங்கள் கணித நோட்டை மேஜை மேல் வைக்க வேண்டும். விலையுயர்ந்த ‘ஷீஃபர்ஸ்' பேனா வைத்திருப்பார். அதன் முனை கம்பிபோல் இருக்கும். திருத்தும் நோட்டில் srs என்று கையொப்பம் இடுவார். அவர் போகும் வழியில் இருக்கும் வகுப்புகள் ஆசிரியர் இல்லாவிடினும் அமைதியாக இருக்கும். காலையில் தான் பயன்படுத்தும் கழிப்பறையைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் போவார். தான் சார்ந்த வேலையைத் தவிர பள்ளியின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். மாலை மூன்றேகால் மணிக்குப் பள்ளி வகுப்புகள் முடிந்துவிடும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது அறையிலிருந்து வெளியே அவர் கிளம்பிவிடுவார். இரவு ஏழு மணிக்கு உணவின் போது தான் விடுதிக்கு வருவார். நிர்வாகம் அவரை எதுவும் சொன்ன தில்லை. காரைக்குடி சாம்பசிவ ஐயரிடம் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டார். கோபிசெட்டிபாளையம் அவரது ஊர். எங்களுக்கு ஏதோ விதத்தில் சொந்தம்கூட என்று தந்தை சொல்வார்.

தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ணரத்தினம் ஓய்வு பெறும்வரை தலைமை ஆசிரியராகவே பணியாற்றினார். (1942 முதல் 1976 வரை) நல்ல உயரம் வெளுப்பான மேனி, எல்லோரையும் அரவணைத்துப் பள்ளியை நிர்வகித்தார். மாணவ மாணவியரிடையே மிகுந்த நெருக்கம் கொண்டவர். அனைவரின் பெயரும் அவர்களது குடும்ப விபரமும் தெரிந்தவர். காலையில் பள்ளி தொடங்கும் நேரத்தில் தனது அலுவலக அறையின் முன்புறம் இருக்கும் அகலமான கைப்பிடிச் சுவரின் மேல் அமர்ந்தபடி மாணவ மாணவிகளுடன் உரையாடிப் பின் அறைக்குச் செல்வார். அவரிடம் சாவிக் கொத்துடன் ஒரு ஊதலும் இருக்கும். அதன் ஒலி அனைவரையும் உறைய வைக்கும். மாணவ மாணவியர் அவரது அறைக்கு எப்போது வேண்டுமானாலும் சென்றுவர அனுமதியுண்டு. ஒரு சமயம் ஒரு மாணவி தன்னை சகமாணவன் எப்போதும் பார்ப்பதாக அவரிடம் புகார் செய்தாள். “அவன் உன்னைப் பார்க்கிறான் என்பது உனக்கு எப்படித் தெரிந்தது? நீயும் அவனைப் பார்க்கிறாய் அல்லவா?” என்று அவளை மடக்கினார். “நீ அழகாய் உள்ளதால் அவன் உன்னைப் பார்க்கிறான் நீ அதற்கு மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும்?' என்று சொன்னார். பின்னர் அந்த மாணவனைக் கூப்பிட்டு ‘நீ இவளை விரும்புகிறாயா? திருமணம் செய்து கொள்வாயா உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா?' என்று கேட்கவும் அவன் அரண்டு போய் அழத் தொடங்கி விட்டான். இருவரையும் ‘நட்புடன் பழகுங்கள்' என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆசிரியர் வகுப்பு எடுக்கும்போது அவர் குறுக்கிட மாட்டார். மாலையில் அவரை அருண்டேல் டென்னிஸ் விளையாட்டுத் திடலில் தினமும் பார்க்கலாம். அது களிமண்தரை கொண்டது. அங்கு விளையாடப் பல பெரிய மனிதர்கள் வருவார்கள். அவர்களில் T.T.கிருஷ்ணமாச்சாரியின் மகன் ஒருவர். பள்ளி நிர்வாகம் முழுவதுமாக கிருஷ்ணரத்தினம் பொறுப்பில்தான் இருந்தது. 1976 இல் பள்ளி திருவான்மியூருக்கு இடம்பெயர்ந்தது. அரசின் மான்யம் பெற்று வந்ததால் அங்கு மதிய உணவு திட்டமும் அறிமுகமாயிற்று. ருக்மிணி தேவிக்கு படிப்படியாக அதன்மீதிருந்த அக்கரை குறைந்து வந்தது. அருண்டேலின் பெயரில் ஒரு புதிய பள்ளி கலாக்ஷேத்திர வளாகத்தில் தோன்றியது.

பள்ளி நாட்களில் எனக்கு விளையாடிலும், ஓவியத்திலும், தமிழிலும் பல பரிசுகள் கிடைத்தன. அப்போது Sankar's weekly என்னும் வார இதழ் டில்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை அது பன்னாட்டு பள்ளி மாணவ/மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரைப் (ஆங்கிலம்) போட்டிகள் நடத்தி, வயது பிரிவின் படி பரிசுகள் தரும். அதில் பரிசு கிட்டுவது பெருமைக்குரியது. 10ஆம் வகுப்பில் படிக்கும்போது எனக்கு அதில் ஓவியத்துக்கு பரிசு கிட்டியது ஒரு அலாரம் கடிகாரம், நான்கு தூரிகைகளுடன் கூடிய நீர்வண்ணப் பெட்டி (Tube colours.) ஆகியவை தபாலில் வந்தபோது உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவ்விதமே அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்காக நடத்திய ஓவியப் போட்டியிலும் முதற் பரிசு கிட்டியது. அதை வெளியிட்ட அரசு இதழ் இன்றும் என்னிடம் உள்ளது. அண்மையில்தான் கடிகாரம் குப்பைகூடைக்குப் போனது.

பள்ளியிறுதி ஆண்டில் தமிழை முதல் மொழியாகப் படித்த (அப்போது ‘சிறப்புத் தமிழ்' ‘பொதுத் தமிழ்' என்று பாட திட்டத்தில் இருந்தது.) மாணவர் கூடி குழு ஒன்றமைத்து பாரதிவிழா கொண்டாடினோம். அதையொட்டி விழா மலரொன்று கொண்டு வந்தோம். அது முற்றிலும் கையெழுத்திலானது. பல வண்ண ஓவியங்கள் கூடியது. என்னுடன் படித்த P.N.குமார்(பே.நா.அப்புசாமியின் பேரன், அவ்வையார் திரைப் படத்தில் சுட்டபழம் கொடுத்த முருகனாக நடித்தவன், பின்னர் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்தவன்) தீட்டிய ‘பாஞ்சாலி சபதக்' காட்சி ஓவியங்களும், ‘ஓம்சக்தி ஓம்சக்தி' பாடலுக்கு நான் தீட்டிய ஓவியங்களும் (விநாயகர், கலைமகள், அலைமகள், மலைமகள், கிருஷ்ணன், குமரன்) எல்லோராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. அவன் நீர்வண்ண ஓவியம் தீட்டுவதில் சூரன். நான் டெம்பரா பாணியில் வல்லவன். (பின்னாளில் நான் அங்கு ஓவிய ஆசிரியனாக பணி புரிந்தபோது அந்த மலர் பள்ளி நூலகத்தில் இருக்கக் கண்டு பேருவகையுடன் அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்ததும், மற்ற ஆசிரியர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டதும் இனிய நினைவுகள்.) பல பள்ளிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டி, பாரதி கவிதைகளைப் பாடும் போட்டி போன்றவையும், விழாவின் மைய நிகழ்வாக பாரதியின் கவிதை வடிவிலேயே ‘பாஞ்சாலி சபதம்' நாடகமும் மேடையேறியது. பள்ளியில் பணிபுரிந்த எனது மூத்த அண்ணன்தான் நாடகமாக வடிவமைத்தார். எங்களுக்கு நடிப்பும் சொல்லிக் கொடுத்தார். நான் துரியோதனன் வேடத்தில் நடித்தேன். பொடிசலாக, பொருத்தமற்று இருந்த நான் தமிழ் உச்சரிப்புக்காக வேடம் கொடுக்கப் பட்டேன். அதுதான் முதல் முறையாகப் ‘பாஞ்சாலி சபதம்' நாடகமானது. திரு ‘கல்கி' நாடகத்துக்கு வந்திருந்து நடிகர்களைப் பாராட்டிப் பேசினார். துரியோதனன் வேடத்துக்கு நான் பொருத்தமாக இல்லை என்பதையும் நாசூக்காகச் சொன்னார். கலாக்ஷேத்திராவிலும் பின்னர் அது நாட்டிய நாடகமாக அரங்கேறியது. அதில் எனக்கு விகர்ணன் வேடம் கிட்டியது. ‘சேவா ஸ்டேஜ்' பல ஆண்டுகளுக்குப் பின்னால்தான் ‘பாஞ்சாலி சபதம்' நாடகத்தை மேடை யேற்றியது. ஆனால், சேவா ஸ்டேஜ் ‘பாஞ்சாலி சபதம்' பெரும் புகழ் பெற்றது. நாங்கள்தான் அதற்கு தொடக்கம் என்பது எங்கும் எவராலும் எந்தசமயத்திலும் குறிப்பிடப் படவில்லை என்பதில் எனக்கு இன்றுவரை வருத்தம்தான்.

1954-55 ஆம் ஆண்டில் பள்ளி இறுதி (S.S.L.C.) பரிட்சையில் தோல்வி. முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு எல்லோருடைய வசவுகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டேன். அப்போதுதான் கிட்டப்பார்வை என்னும் பார்வைக் கோளாறு காரணமாக நான் கண்ணாடி அணியத் தொடங்கினேன் நான் அந்த ஆண்டு செப்டம்பரிலும் தேர்வில் தடுக்கி விழுந்தேன். முதல் முறை சமூகம் (அப்போது புவியியல், வரலாறு இரண்டும் கலந்தது) என்றால் இம்முறை கணிதம். ஆனால், அதுதான் என் வாழ்க்கையில் திசை திரும்பிய கணம். நான் என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்கக் காரணமான கணம். ஓவியர் ஸ்ரீநிவாசுலு என் தந்தையிடம் என்னை ஓவியப் பள்ளியில் சேர்க்க சொன்னார். நானும் அதில் வெகு தீவிரமாக இருந்தேன். எனக்கு கல்கத்தாவில் சாந்திநிகேதன் சென்று ஓவியம் பயில ஆவல். ஆனால் வீட்டில் இதற்குக் கடும் எதிர்ப்பு. இதில் என்ன உத்தியோக வாய்ப்பு இருக்கிறது? என்று எல்லோருமே வியந்தார்கள். இறுதியில் என் தந்தை, ‘அவன் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அப்படியே நடக்கட்டும்' என்று சமாதானமாகி என்னை சென்னை ஓவியப் பள்ளியில் சேர்க்க உடன்பட்டார். நானும் சாந்திநிகேதன் இல்லை என்ற கொஞ்சம் வருத்தத்துடன் ஸ்ரீநிவாசுலுவிடம் பயிற்சி ஓவியம் பயிலத் தொடங்கினேன். இது இப்போது எல்லா துறைகளுக்கும் நடக்கும் முன் பயிலும் திட்டம் தான். அந்த ஆண்டில்தான் கிட்டண்ணாவின் திருமணம் மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் ஒரு சத்திரத்தில் நடந்தது அவ்வமயம் எனக்கு உபனயனமும் செய்வித்தார்கள். அண்னனுக்கு மனைவியாக வந்தவர் பெயர் லஷ்மி. என்னைவிட இரண்டு மாதங்கள்தான் மூத்தவர். இளம் வயதிலேயே தாயை இழந்தவர். ‘சின்னமன்னி' என்று அழைக்கப்பபட்ட அவரும் சங்கீத வித்வான் S.ராஜம் ஐயரிடம் முறையாக இசை பயின்றவர். ஒரு அண்ணன், ஒரு அக்காள் கொண்டவர்.

பள்ளி இறுதி முடிக்கும்போதே எனக்கு மீசை வளரத் தொடங்கிவிட்டது. வீட்டில் மீசையை நீக்கும்படி கண்டிப்புச் செய்தார்கள். எனக்கோ மீசையின்மீது பாசம். மௌனமாக அடம் பிடிப்பேன். வீட்டில் மீசை வளர்ப்பது அதுவரை இல்லாத புதிய வழக்கம். ஆனால் ராஜு அண்னன் தனது பணி ஏற்கும்போது மீசை வளர்க்கத் தொடங்கவே என்னை கண்டிப்புச் செய்வதிலும் தளர்ச்சி ஏற்பட்டு ‘எப்படியும் தொலையட்டும்' என்னும் வசவுடன் நின்றும் போனது.

என் பள்ளிப் பருவத்தின் கடைசீப் பகுதி, ஓவியக் கல்லூரியில் படித்தது என ஏழு வருடம் இந்த வீட்டில் (1960 வரை) வசித்தோம்.