Friday, January 18, 2013

இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்-சுவர் ஓவியங்கள்-(MURAL PAINTINGS in INDIAN LAND)

வணக்கம்,
நான் எழுதிய "இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்" நூல் பிரதிகள் இல்லை என்பதனால் அவ்வப்போது அதிலிருக்கும் கட்டுரைகளை இங்கு ஒட்ட எண்ணம், இதோ ஒன்று தொடக்கமாக.


சுவர் ஓவியங்கள்

(MURAL PAINTINGS in INDIAN LAND)

உலகின் தொன்மைக் காலத்தின் உன்னதமான ஓவிய பாரம்பரியங்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆன்மீகம் அதன் அடி நாதமாக இருந்தது. அப்போதே மிக உயர்ந்த செய்நேர்த்தி ஓவியங்களில் கைவரப் பெற்றிருந்தது. இந்தியத் தொன்மைக்கால சுவர் ஓவியங்களைப்பற்றி உலகின் மிகச் சில வல்லுனர்கள்தான் அறிந்திருந்தனர். இந்திய ஓவிய வரலாறு அவர்களால் இடைக்காலச் சுவடி ஓவியங்கள், கையடக்க ஓவியங்கள் என்பதிலிருந்துதான் ஆராய்ச்சி செய்யப் பட்டது. அஜந்தா ஒவியங்கள் என்பது தொடர்பற்ற ஒரு ஒளிக்கீற்று என்பதாகவே கொள்ளப் பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வல்லுனர் திரு. சி.சிவராமமூர்த்தி தென்னிந்திய சுவர் ஓவியங்கள் பற்றி விரிவான நூலொன்றை வெளியிட்டார். அதில் சில கோட்டுச் சித்திரங்களும், புகைப் படங்களும் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் புகைப்படங்களின் நேர்த்தி இன்மையால் அது மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்று போனது.

இந்தியத் துணைக் கண்டத்தில் நமக்குக் காணக் கிடைத்த அஜந்தா ஓவியங் களே இயற்கை பாதிப்புகளுக்கு ஈடு கொடுத்து எஞ்சியவை. இந்திய-கிழக்கு நாடுகளின் ஓவிய வரலாறு இங்கிருந்துதான் துவங்குகிறது. அது புத்தமதம் சார்ந்த ஓவியங்களுக்கு ஊற்றுக்கண்ணாகவும், அகத்தூண்டுதலுக்கானதாகவும் விளங்கியது.

அஜந்தா குகை ஓவியங்கள் இரண்டு காலக் கட்டங்களில் தீட்டப்பட்டன. முதலாவது கால கட்டம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்றும், இரண்டாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்றும் வரலாறு சொல்கிறது. இரண்டாவது கால கட்டத்தில் அப்போது வட இந்தியாவில் ஆட்சி செய்த குப்தர்களும் தட்சிண நிலப்பகுதியில் ஆட்சி செய்த வாகடக மன்னர்களும் அதற்குப் பெரும் துணையாக இருந்தனர். அஜந்தா குகை ஓவியங்களில் ஹீனயானம், மஹாயானம் என்னும் புத்த மதத்தின் இரு பிரிவுகளின் ஓவியங்களும் உள்ளன. புத்தரின் வாழ்க்கையும் ஜாதகக் கதைகள் என்று குறிப்பிடப்படும் அவரது முந்தைய பிறவிகளின் வாழ்க்கையும்தான் அவற்றில் கருப்பொருளாக உள்ளன.

இந்திய நில ஓவியமரபு அஜந்தா ஓவியர்களால் செழுமைப் படுத்தப் பட்டது. ‘விஷ்ணு தர்மோத்ர புராண'த்தில் அது ‘சித்ர சூத்ரா' என்று பதியப் பட்டது. கி.பி 5-6 நூற்றாண்டுகளில்தான் அது எழுத்துருவம் பெற்றதென்றாலும் பல நூற்றாண்டுகளாக அது செவிவழியே பின்வந்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப் பட்டது. ஓவியர்கள் குழுக்களாகவும் குடும்பங்களாகவும் தொடர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள். ‘காண்போரின் சிந்தையை ஆக்ரமித்து மேம்படுத்து வதால் மனித குலத்திற்கு ஒரு பெருமை மிக்க கருவூலம்' என்று ஓவியத்தைப்பற்றி ‘சித்ர சூத்ரா' சொல்கிறது. ஓவியம் கற்போருக்கான வழிமுறைகளும், அவர்கள் பின்பற்ற வேண்டிய உத்திகளும் அவற்றில் உள்ளன. ஓவியத்திற்கான கருப் பொருளை எப்படி வெற்றிகரமாக காட்சிப்படுத்துவது, உரிய வண்ணங்களை எவ்வாறு தேர்வு செய்வது, மனித உணர்வுகளுக்குத் தகுந்த விதத்தில் உடல் வடிவமைப்பை எப்படி படைப்பது, என்பது போன்ற பல்வேறு இலக்கணங்களை உள்ளடக்கியதாக அது உள்ளது. ஓவியனுக்கு அது ஒரு பயில் நூலாக இருந்திருக்கிறது. என்றபோதிலும், பயிற்சியின் முதிர்ச்சியால் மட்டுமே ஓவியம் அமைந்துவிடாது. அவனது திறமையும் கற்பனைச் செறிவும்தான் ஓவியத்தின் பின்புலமாக அமையும் என்று அந்நூல் குறிப்பிடுகிறது. அந்த நூல் அறிவு சார்ந்தது என்பதாலும் மிகுந்த போற்றுதலுக்கு உரியது என்பதாலும் எப்போதும் புனிதமானதாகவே கையாளப் பட்டது.

இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வித ஓவிய எச்சங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமக்குக் கிட்டியுள்ளன. கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கான ஓவிய வரலாறு அதில் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் நமது ஓவியங்களில் காலத் தொடர்ச்சி இல்லை என்பது ஒரு பொதுவான கருத்தாக இருந்து வந்துள்ளது. அஜந்தா ஒவியங்கள் உருவான காலத்திலேயே படைக்கப்பட்ட சுவர் ஓவியங்களில் மிஞ்சியவை பிதல்கோரா, எல்லோரா போன்ற இடங்களில் உள்ள பல குகை மண்டபங்களில் இன்றும் உள்ளன.

கி.பி. நான்கு முதல் ஆறாம் நூற்றாண்டில் ‘பாக்'(Bagh) நதி ஓடும் விந்திய மலை அடிவாரத்தில் குடையப்பட்ட ஒன்பது குகைகள் அகழ்வாராய்ச்சித் துறையால் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆனால் இயற்கையின் பாதிப்பு களிலின்றும் தப்ப முடியாமல் அவற்றிலிருந்த ஓவியங்கள் அழிந்து விட்டன. ஆன போதிலும் எஞ்சியவற்றை பிரதி எடுத்துப் பார்த்ததில் அஜந்தா ஓவிய உத்தியின் பாதிப்பு அவற்றில் தெரிகிறது. அங்கு போலவே இங்கும் உருவங்கள் அசைவற்று உறைந்த தன்மையைக் கொண்டுள்ளன.

கி.பி ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய ஆட்சியில் அவர்களது தலை நகரமாக விளங்கிய பாதாமியில் உள்ள கற்கோயில்களில் ஓவியங்கள் அநேகமாக அழிந்தே போய்விட்டன. ‘பாக்' போலவே எஞ்சியிருக்கும் ஓவியங்கள் சுவர் களிலும் அறையின் உட்கூரையிலும் இருந்த ஓவியங்களின் வளம் பற்றி கற்பனை செய்ய வைக்கின்றன. அது ஒரு மலைக்கவைக்கும் அனுபவம்தான்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அப்போது காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு, தென்னிந்தியாவில் ஆட்சிபுரிந்த பல்லவ அரசர்களும் குகை மண்டபங் களையும், கற்கோயில்களையும் குடைந்தமைத்து, சைவ--வைணவ சமயம் சார்ந்த சிலைகளையும் ஓவியங்களையும் அவற்றில் படைத்து, ஒரு புதிய கலை வழியை உண்டாக்கினார்கள். காஞ்சியிலுள்ள கைலாசநாதர் ஆலயத்திலும், பன மலையிலும் அவர்களின் கலை உன்னதம் எஞ்சியுள்ள ஓவியங்களில் தென் படுகிறது. கைலாசநாதர் ஆலயத்தில் அஜந்தா ஒவியங்களில் நாம் கண்ட மென்மையும் எழிலும் தாக்கம் கொண்ட ஓவியங்கள் உள்ளன. கூடவே அவற்றில் அரசர்களின் புகழ் சொல்லும் காட்சிகளும் உள்ளன. சிவபெருமானின் குடும்பம் அங்கு ஒருவிதத்தில் அரசனின் குடும்பமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் வெளிச்சுற்றுச் சுவர்களிலுள்ள ஓவியங்களில் வேலைப்பாடுகள் கொண்ட கிரீடங்கள், அணி கலன்கள், உடைகள் போன்றவை அரசவாழ்வின் ஆடம்பரத்தைப் புலப்படுத்துவதாக உள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டில் சித்தன்னவாசல் குகைக் கோயில் சமணர்களால் குடையப்பட்டது. அதன் உட்கூரையில் காணப்படும் ஓவியம் மிக உயர்ந்த கற்பனை வளமும் நளினமும் கொண்டதாக உள்ளது. ஒரு சமணத் துறவி குளத்திலிருந்து தீர்த்தங்கருக்குப் படைக்கவென்று தாமரை மலர்களைப் பறித்துச் சேகரிப்பது அங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. யானை, எருமை, வாத்துகள், மீன்கள் ஆகியவற்றை மனிதனுக்கு இணையாக குளத்தில் அமைந்துள்ள விதம் இறைவன் பார்வையில் அனைத்தும் சமம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. தாமரை மலர்கள் அதன் இயற்கை அளவினைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக உள்ளன. உற்சாகம் கொப்பளிக்க ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை வெகு அற்புதமான ஓவியமாக்கியுள்ளதைக் கண்டுதான் உணர முடியும்.

இதனிடையில் எட்டாம் நூற்றாண்டில் எல்லோராவில் ஒரு மலையே கற் கோவிலாக செதுக்கி உருவாக்கப்பட்டது. என்னளவில் இது ஒரு உலக அதிசயம். நேரில் காண்போருக்கு இதன் பிரம்மாண்டம் இனம் புரியாத பிரமிப்பைத் தோற்றுவிக்கும். அதன் அழகை உள்வாங்கிக் கொள்வதே ஒரு அனுபவமாகும். காண்போர் அதன்முன் உருவம் சுருங்கி, இல்லாமற் போகும் அதிசயம் நிகழும். இதன் சுவர்களில் முன்பு ஓவியங்கள் மிளிர்ந்தன. மேற்கூரைகள் முழுவதும் ஓவியங்களால் நிரப்பப்பட்டிருந்தன. இன்று அங்கு எஞ்சி இருக்கும் ஓவியங்கள் அவற்றின் நேர்த்தியையும் கலை முதிர்ச்சியையும் பற்றிக் கட்டியம் கூறிக் கொண்டு உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அங்கு சமண மத கற்குகைகள் குடையப்பட்டன. அவற்றிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியர்கள் அங்கு தங்கள் ஓவியங்களை பழைய வழியில் தீட்டினாலும் அவற்றில் சமணமதக் கோட்பாடுகள் சார்ந்த கருப்பொருளை காட்சிப் படுத்தி இருக் கிறார்கள். அஜந்தாவின் இயற்கையெழிலும், உருவங்களின் ஒயிலும் உள்ள இந்த ஓவியங்களில் உருவங்களின் படைப்பில் ஒரு புதிய வடிவமைப்பு காணப் படுகிறது. இதை ஒரு முக்கியமான அணுகுமுறை, வளர்ச்சி என்று வல்லுனர்கள் அடையாளம் காண்கின்றனர். இந்தியாவெங்கும் அது பின் வந்த நூற்றாண்டு களில் தொடர்ந்து கையாளப்பட்டுள்ளது.

பத்தாம் நூற்றாண்டில், சோழராட்சி தனது வல்லமையின் முழுமையையும், செழிப்பின் உச்சத்தையும் தொட்டது. மன்னன் ராஜராஜன் தனது கீர்த்தியைப் பறைசாற்றும் விதத்திலும், இறைவனைப் போற்றும்படியாகவும் தஞ்சையில் சிவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினான். ராஜராஜேஸ்வரம் என்றும், பிரகதீஸ் வரர் ஆலயம் என்றும், மக்களால் பெரியகோவில் என்றும் அது அழைக்கப் படுகிறது. மன்னன் ஆலயத்தின் மூலவரின் முன்று புறங்களிலும் இருக்கும் கற் சுவர்களில் சைவத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக ஓவியங்களைப் படைக்கச் செய்தான். சோழ அரசனின் போர் வெற்றிகளையும், பெருமை களையும் கூறும் விதமாக, சிவபிரான் திருபுரம் எரித்த காட்சி ஓவியமாக உள்ளது. அவரின் போர் முனைப்புடன் கூடிய எடுப்பான தோற்றமும், அது கண்டு அஞ்சி நடுங்கும் அரக்கர்களின் நிலையும் மிகுந்த திறமையுடனும் நுணுக்கமாகவும் ஓவியமாக்கப்பட்டுள்ளன. அவ்விதமே நடனமிடும் இரு மங்கையர் உடலில் ஓவியன் கொணர்ந்துள்ள நடன அசைவுகளை வெளிப் படுத்தும் நெளிவுகள் தமிழ் நிலத்தின் அன்றைய ஓவிய-நடன வளமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலுள்ள வண்ண அமைப்பு இதமாகவும், திடமாகவும் உள்ளது. அன்றைய மக்களின் வாழ்க்கையை, அன்று நிலவிய அரச வாழ்வின் மஹோன்னத நிலையை இந்த ஓவியங்களில் நம்மால் காணமுடிகிறது. இந்த ஓவியங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த கிரீடங்களும், அணிகலங்களும் உடை களின் நேர்த்தியும் நமக்கு இவற்றைத் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் வரண்ட மேட்டுப் பகுதியான லடாக் பிரதேசம், உண்மையில் பல கலாச்சாரங் கள் சந்தித்த நிலம். கடந்து போன காலங்களில் அது உயிர்த்துடிப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்கியது. 11ஆம் நூற்றாண்டில் லடாக், மேற்கு திபேத், கின்னௌர் (kinnaur), லாஹுல்--ஸ்பிடி (lahul-spiti) நிலப்பகுதிகளை அடக்கிய தனது நாட்டில் மன்னன் எஷெ ஓட் (yeshe od) புத்த துறவிகள் வசிப்பதற்கென்று நூற்று எட்டு விஹாரங்களை (விடுதி மண்டபங்கள்) நிர்மாணித்தான். அவற்றை நிர்மாணிக்கவும் அவற்றில் ஓவியங்கள் தீட்டவும் காஷ்மீரிலிருந்து ஓவியர்களும் கட்டிடக் கலைஞர்களும் தருவிக்கப் பட்டனர். அதுவே பின்னாட்களில் இமயம் தாண்டிச் சென்ற புத்த மதத்தின் முதுகெலும்பாக அமைந்தது.

அஜந்தா ஒவியங்களில் நாம் காணும் புத்தர் ஜாதகக்கதைகள் புத்த மதத்தின் மஹாயானா பிரிவைச் சார்ந்தவை. அதிலிருந்து கிளைத்து வளர்ந்தது தான் வஜ்ரயானா வழிபாட்டு முறை. வங்காளத்தில் பாலா ஆட்சியில் மக்களிடையே பிரபலம் அடைந்த அது நேபாளம், திபெத், லடாக் பகுதிகளில் நிலை கொண்டு விரிவடைந்தது. வஜ்ரயானா புத்தவழி, முக்தி அடைய ஒரு புதிய பாதையைக் காட்டுகிறது. தொழுபவன் கடவுள் உருவங்களை மனதில் நிறுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி தியானிப்பதன் மூலம் அந்த தெய்வங்களின் சக்தியை உள்வாங்கி, தானே அவையாக மாறுகிறான். இந்த வழிபாட்டு முறையில் ஓவியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

வறண்ட, விளைச்சலற்ற பெரும் நிலப்பகுதியான லடாக்கில் உள்ள அல்சி (alchi), புத்த துறவிகள் வாழும் விடுதி மண்டபம், பாலை நிலத்தில் உள்ள நீர்த் தடாகம் போன்றது. அதில் காணப்படும் சுவர் ஓவியங்கள் காண்போரின் மனம் மயக்க வல்லவை. அவலோகிதேஸ்வரா சிலையின் ஒற்றை துணி உடையில் காணப்படும் ஓவியங்கள் சிறப்பு மிக்கவை. இந்த சிலை மூன்றடுக்கு ஆலயத்தில் உள்ளது. காஷ்மீரின் அப்போதைய ஓவியக்கலை, கட்டிடக் கலை ஆகியவை அடைந்திருந்த உயர்வு, முதிர்ச்சி, போன்றவற்றை இவற்றின் மூலம் கண்டு கொள்ளலாம். பச்சை நிறத் தாராவின் ஓவியம் அங்குள்ளவற்றில் மிகச்சிறந்த கலையம்சங்கள் கொண்டது. பெணுருவத்தின் திரட்சியை காண்போர் மனம் கவரும் வண்ணம் ஓவியன் ஓவியமாகியுள்ளான். அதன் பக்கவாட்டில் உள்ள முகத்தில் உண்மையில் மறைந்திருக்கும் விழியையும் முகத்தை ஒட்டி ஒரு மிதக்கும் மீன்போல காட்சிப்படுத்துவது எல்லோரா ஓவியர்கள் கையாண்ட உத்தியின் தொடர்ச்சியே. அங்குதான் இந்திய ஓவியத்தில் இந்த உத்தி முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது.

காஷ்மீர ஓவியர்கள் தங்களுக்குக் கிடைத்த இந்திய ஓவிய வழிமுறையின் துணையுடன் ஒரு புதியபாதை வகுத்து ஓவியங்களைப் படைத்துள்ளனர். காந்தார கலைவழி, ஆசியக் கலைவழி இரண்டையும் இணைத்துத் தங்கள் ஓவியங்களில் உடை, அணிகலன்கள் போன்றவற்றை புதுமையானவிதத்தில் வடிவமைத்திருக் கிறார்கள்.

ஸ்பிடி பள்ளத்தாக்கில் உள்ள ‘தபு' விஹாரத்திலும் இப்படிப்பட்ட சுவர் ஓவியங்களைக் காணலாம். இந்த விஹாரம்தான் 108 விடுதிகளில் முதலாவதாகக் கட்டப்பட்டது என்று தோன்றுகிறது. வரலாறு இதன் காலத்தை கி.பி. 996கள் என்று குறிப்பிடுகிறது. இங்குள்ள ஓவியங்கள் ‘அல்சி' யின் ஓவியங்களுடன் பெரிதும் ஒத்துப் போகின்றன. இவ்வுருவங்களில் காணப்படும் நெளிவுகளும், உடல் கூறுகளின் தன்மையினின்றும் விலகி வடிவமைக்கப்பட்டுள்ள விதமும், இசைவாக இணையும் கோடுகளும் காஷ்மீர் ஓவியத்தின் சிறப்புக்கள்.

ஹிமாசலப் பிரதேசத்தில் ‘கின்னௌர்' தாலுக்காவில் அமைந்துள்ள ‘நாகோ' விஹாரம் மண்ணாலான சுற்றுச் சுவர்களைக் கொண்டது. அங்கு நான்கு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் காணப்படும் ஓவியங்களும் முந்தைய ஓவிய வழியை அடியொட்டியே உள்ளன.

வஜ்ரயானா வழியில் படைக்கப்பட்ட ஓவியங்களின் தொடர்ச்சி நீண்டது; பல நூற்றாண்டு வளர்ச்சியைத் தன்னுள் அடக்கியது; அறுபடாது தொடர்வது; இன்றும் நடைமுறையில் உள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் லலித்பூர் ஜில்லா சமவெளியிலுள்ள சிவன், விஷ்ணு ஆலயங்கள் 13ஆம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்டவை. அவை அங்கு ‘கச்சேரி' என்று அழைக்கப் படுகின்றன. ‘சோட்டி கச்சேரி' என்னும் ஆலயத்தின் விதானத்தில் உள்ள எஞ்சியுள்ள ஓவியங்கள் மிகவும் கவனத்துக்குரியவை. நலந்தா அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்த ஓவியங்களுக்குப்பின் வடக்கு சமவெளியில் நமக்குக் கிடைத்துள்ள ஓவியங்கள் இவைதான்.

11ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓவியச்சுணக்கம் 14ஆம் நூற்றாண்டில், விஜயநகர ஆட்சியில்தான் நீங்கியது. ஓவியம் மீண்டும் பரவலாக காணப்படுவது அப்போதிலிருந்துதான். ஹம்பி போன்ற பன்நாட்டு நாகரீகம் கலந்து செழித்த நகரங்களில் ஓவியக்கலை மீண்டும் புதிய கதியில் இயங்கத் தொடங்கியது. ஹம்பியில் உள்ள விருபாக்ஷர் ஆலயத்தின் விதானம் ஓவியங்களால் நிரப்பப் பட்டுள்ளது. அவற்றில் வலிமையும் எளிமையுமான கோடுகள், காட்சிகளுக்கு ஏற்ப உருவங்களின் அசைவுகளைக் காட்டும் விதமாக உள்ளன. ஓவியன் அவற்றை எவ்விதத் தடையும் இன்றிப் படைத்திருக்கிறான். அவற்றில் விஜயநகர மன்னர்கள் பற்றியும் அவர்களது ஆட்சியின் சிறப்புகள் பற்றியுமான காட்சிகள் இந்துக் கடவுளர்களின் கதைகளுடன் பின்னப்பட்டு உள்ளன. அந்த மன்னர் களின் பெருமைக்குரிய அரச குருவான ‘வித்யாரண்யர்' இடம் பெற்றிருக்கும் ஊர்வலக் காட்சி ஒன்றும் அங்கு ஓவியமாக உள்ளது.

விருப்பன்னா, வீரன்னா என்னும் இரு நாயகர் சகோதரகள்களால் 16ஆம் நூற்றாண்டில் லேபாட்சியில் எழுப்பப்பட்ட ஆலயம் மிகவும் கவனத்துக்குரியது. அப்போது லேபாட்சி நகரம் மிக முக்கியமான வர்த்தக மையமாகவும் யாத்திரிகத் தலமாகவும் விளங்கியது. அக்கோயிலின் விதானத்தில் நாம் காணும் ஓவியங்கள் மத்தியகால இந்தியாவின் கலை வெளிப்பாடுகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவற்றில் பல்வகை நாகரீகங்களின் பதிவுகள் உள்ளன. வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நயம், முகத்திலிருந்து தனித்து மிதக்கும் விழி, உடலிலிருந்து விசிரிபோல விரியும் உடைகள் போன்ற உத்திகள் ஓவியங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கின்றன. விதவிதமான கொண்டைகளுடனும் உயர்வகை அணிகலன்களுடனும், அலங்காரம் மிக்க உடைவகைகளுடனும் ஓவியமாக்கப் பட்டுள்ள பெண்டிர் அன்றைய செல்வச் செழிப்பான வாழ்க்கையைப் பிரதி பலிப்பதாக உள்ளனர்.

16முதல் 19ஆம் நூற்றாண்டுவரை கேரளாவின் அரச மாளிகைகளிலும், ஆலயங்களிலும் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்றும் அவற்றின் மிடுக்குக் குன்றாமல் காணக்கிடைக்கின்றன. சிவ-பார்வதி, வேணுகோபாலன், மஹா விஷ்ணு, இராமன் போன்ற இந்துக்கடவுளர்களின் புகழ் கூறும் கதைகள் அவற்றில் இடம் பெற்றன. அந்த ஓவியங்களில் உள்ள உருவங்கள் இயல்பானதைக் காட்டிலும் அளவில் பன்மடங்கு பெரியனவாக உள்ளன. திண்மையும் உறுதியும் கொண்டவை அவை. அஜந்தா பாணியின் இழைதான் இங்கும் ஓடுகிறது. ஆனாலும் கேரள மண்ணின் தனித் தன்மை விரவி இந்திய ஓவியத்தின் புதிய உத்தி அங்கு கிளைக்கிறது. அந்த மண்ணுக்குச் சொந்தமான நாட்டிய நடனங்களின் அழுத்தமான உறவுகளை நம்மால் அந்த ஓவியங்களில் உணர முடியும்.

16ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தொய்ந்திருந்த ஓவியக்கலை, முகலாய மன்னர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் புத்துயிர் பெற்று உற்சாகமாக வலம் வரத் தொடங்கியது. உலகமே சிறப்பித்துக் கொண்டாடும் கையடக்க ஓவியங்கள் அப்போதுதான் ஏராளமாகப் படைக்கப்பட்டன. மன்னரின் தலை நகரமான பதேபூர் சிக்ரி அரச மாளிகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஆனால் ஓவியர்கள் சுவர் ஓவியத்துக்கான இலக்கணம் புரியாமலேயே ஓவியங் களைப் படைத்துள்ளனர். அந்த ஓவியங்கள் கையடக்க ஓவியங்களின் பெரிது படுத்தப்பட்ட வடிங்களாகவே உள்ளன. அவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பிய அங்காடிகள், யானை, குதிரைகளின் மீது பயணிப்போர், போன்ற காட்சிகளுடன் குழல் ஊதுபவன் ஓவியம் ஒன்றும் கவனம் பெறுபவை.

1531இல் மத்திய இந்தியாவில் நிலைகொண்டு இயங்கிய புந்தேல் வம்சம் ‘ஓர்ச்சா' நகரைக் கட்டியது. கோட்டையினுள் எழுப்பிய அரச மாளிகையின் சுவர்கள் ஓவியங்களால் நிரப்பப்பட்டன. 17ஆம் நூற்றாண்டில் ‘ராஜ் மஹல்' முழுவதும் சுவர் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டது. அவற்றில் மீதமாயிருக்கும் ஓவியங்களிலிருந்து அப்போது வட இந்திய நிலப்பகுதியில் பரவலாக இருந்து வந்த முகலாய-ராஜஸ்தான் ஓவிய பாணிகளின் கலப்பு ஒரு புதிய கிளையாக வளர்ந்தது என்பது நமக்கு ஒரு செய்தியாகக் கிடைக்கிறது. பொதுவாக அந்த ஓவியங்களில் ஒரு எளிமை காணப்பட்டாலும் முகலாய ஓவிய வழிப் பதிவுகள் அழுத்தமாக உள்ளன.

ஜெய்பூர் நகரத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அமர் மாளிகையில் ‘போஜன் சாலா'வில் உள்ள தேர்ந்த தொழில்முறை ஓவியர்கள் உருவாக்கிய சுவர் கோட்டுச் சித்திரங்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றில் வைணவ மதம் தொடர்பான கதைகள், நிகழ்ச்சிகள் ஓவியமாக்கப்பட்டுள்ளன. ஓவியன் அவற்றைப் படைக்கும்போது தன் வயமிழந்திருப்பானோ என்று எண்ணவைக்கும் படைப்புகள் அவை. அளவிற் பெரிய நுழைவாயில்களுக்கு இருபுறமும் அவ்வித ஓவியங்கள் உள்ளன. சுவர் ஓவியங்களைக் காட்டிலும் இவை அளவில் சிறுத்து இருப்பினும், அவற்றின் முழுமை காண்போரைச் சேர்கிறது என்பது உறுதி.

ஒரு சமயம் மிக முக்கியமான வர்த்தக மார்க்கமாக விளங்கிய பகுதி ராஜஸ்தான். ஷெகாவதி நிலப்பகுதியில் உள்ள செறிவூட்டப்பட்ட 19-20 நூற்றாண்டு கால மாளிகைகளில் பெருமளவில் சுவர் ஓவியங்கள் காணப்படு கின்றன. அவற்றில் அங்கு வர்த்தகம் செய்துவந்த மார்வாரிகளின் செல்வச் செழிப்பு விரவியுள்ளது. அந்தசமயத்தில் அங்கு நிலைகொள்ளத் தொடங்கிய ஆங்கில கலாச்சாரத்தின் பாதிப்பு இவ்வோவியங்களில் உள்ளது. மதத்துக்கு அப்பாற்பட்ட பல செய்திகள், மார்வாரி வர்த்தகர்களின் கடல்கடந்த பயண அனுபவங்கள், அவ்வோவியங்களில் இடம் பெற்றுள்ளன.

பசுமை நிறைந்த இமாலயப் பள்ளத்தாக்குகள், எவ்விதத்தடையும் இல்லாத சுவர் ஓவியங்களின் தொடர் நிகழ்ச்சிக்கான களமாக விளங்கின. 18-19ஆம் நூற்றாண்டுகளில் சம்பா பகுதியில் உள்ள ‘ரங்மஹால்'இல் எஞ்சியுள்ள சுவர் ஓவியங்களே ‘பஹாரி' சுவர் ஓவியங்களின் மேதமையைச் சொல்பவை. அவற்றில் கருப்பொருள் என்பது பெரும்பாலும் இந்துசமயம் சார்ந்ததாகவும் அப்போதைய அந்தப் பகுதியின் கையடக்க ஓவியங்களின் பாதிப்புடனும்தான் உள்ளன. உணர்ச்சி மிக்க அந்த ஓவியங்களில் வாழ்க்கையின் செல்வச் செழிப்பும் இழை யோடுவது நன்கு தெரிகிறது.

இந்திய நிலப்பகுதியின் கிழக்கு சமவெளியில் உள்ளது ஒரிசா. அங்கு தொன்மையான கலை, நாகரீகம் இரண்டும் தடையற்று செழித்தது. ‘பெகுடா' என்னும் ஊரில் இருக்கும் 18ஆம் நூற்றாண்டு ‘விரஞ்சி நாராயண்' ஆலயத்துச் சுவர் ஓவியங்கள் அந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த உதாரணமாகும். இவை கையடக்க ஓவியங்களைப் பெரிதுபடுத்தியது போல இல்லாமல், அஜந்தா பாணியைப் பின்பற்றி இந்திய சுவர் ஓவியங்களின் வழியிலேயே படைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் உள்ள கருப்பொருள் இராமாயணம்தான். இவற்றில் காணப் படும் பணிவும் மனித இனத்தின் நிலைப்பாடும் கவனத்துக்குரியவை.

பஞ்சாப் நிலத்தில் காணப்படும் சுவர் ஓவியங்களை இந்திய நிலத்தின் இறுதிக்காலப் படைப்புகளாகக் கருதலாம். இவற்றில் முகலாய ஓவிய வழியின் தடம் நன்கு தெரிந்தாலும் பஞ்சாப் பாணி கைவிடப்படவில்லை. உருவங்களின் முகங்கள் இதை உறுதி செய்கின்றன. மேலும் அவற்றின் கருப்பொருள் அந்த நிலத்தின் சமூக, வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது. மக்கள் கூட்டம் மிகுந்து இருக்கும் அமிர்தசரஸ் அங்காடி வீதிகளில் உள்ள கோயில்களிலும், கிஷன்காட் போன்ற கிராமங்களிலும், பாடியாலா கோட்டையில் கிலா முபாரக், கிலா அந்ரூன் போன்ற மாளிகைகளிலும் இந்த ஓவியங்கள் விரவிக் கிடக்கின்றன.

சிகிரியா மலை, (5ஆம் நூற்றாண்டு) பொலனருவா (12ஆம் நூற்றாண்டு) ஆகிய இலங்கைப் பகுதியில் காணப்படும் சுவர் ஓவிங்களும், 12/13ஆம் நூற்றாண்டுகளில் மாயன்மாரில் ‘பகன்' (Bagan) பகோடாகளில் படைக்கப்பட்ட சுவர் ஓவியங்களும், ஜப்பானில் உள்ள ‘ஹோரியூஜி' (Horyuji) ஆலயத்தில் உள்ள சுவர் ஓவியங்களும் இந்திய(அஜந்தா)ஓவிய மரபின் பிரதிபலிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இவ்விதமாக, அஜந்தாவில் தொடங்கிய இந்திய ஓவியவழி, இந்தியாவில் தோன்றிய புத்தமதத்துடன் இணைந்து பயணித்து, ஆசியாக் கண்டத்தில் தடம் பதித்து நிலைகொண்டு, ஒரு புதிய கலாச்சாரத்தை அங்கு நிர்மாணித்து விட்டது.

No comments: