Monday, December 12, 2011

சென்னை ஓவியப்பள்ளி-a

எனது குரு ஸ்ரீநிவாசுலு சென்னையில் பிறந்தபோதும் தனது இளமைக் காலத்தை சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் என்னும் கிராமத்தில் கழித்தார். அவரது தந்தை பொம்மைகள் செய்வதிலும் நாடகக் கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராயிருந்தார். எனவே, வண்ணமும் தூரிகையும் ஸ்ரீநிவாசுலுவுக்குப் புதிதல்ல. பின்னர் சென்னை ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் கற்றார். படிப்பு முடிந்தபின் பிரம்மஞான சங்கத்தின் வளாகத்தில் ஒருநாள் அவர் இயற்கையை ஓவியமாக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட ருக்மிணிதேவி அவரைத் தம்முடைய கலாக்ஷேத்திரத்தில் ஓவியராகப் பணிபுரியச் சேர்த்துக் கொண்டார். ஸ்ரீநிவாசுலுவிடம் என்னை ஈர்த்தவை அவரது நிலம்சார்ந்த வண்ண அணுகுதலும், அழுத்தமும் துல்லியமும் கொண்ட கோடுகளும்தான். பிசிரற்ற, ஒரு சாட்டை போன்ற கோட்டை கித்தானில் தூரிகைகொண்டு தீட்டும்போது அந்த லாகவம் எவரையும் பிரமிக்க வைக்கும். தனது உடன் படித்த ஓவியத் தோழர்களைப் போலவே அவரும் ஆங்கில ஓவியப் பாணி நிலக்காட்சிகளைத்தான் கருப்பொருளாகக் கொண்டார். 1948-51களில் லேபாக்ஷி கோயில் ஓவியங்களை தாளில் நகலெடுத்த போதுதான் அவர் தனது ஓவியத் தடத்தை அடையாளம் கண்டார் என்பர் கலை வல்லுனர். கருப்புடன் சேர்ந்த நிறமாயினும் சுண்டியிழுக்கும் கண்களும் கூர்மையான நாசியும் பளிச்சென்னும் சிரிப்பும் யாரையும் வசமாக்கும். சராசரி உயரம்தான். தோள்வரை புரளும் கேசம். வெற்றிலை சுவப்பதை விரும்புவார். ஆனால் முறையாகப் பள்ளியில் படிக்காததால் மொழிச் சிக்கல். குறிப்பாக ஆங்கிலம். ஆங்கில மொழி ஆசிரியர் வெங்கடேஸ்வருலுதான் அவருக்குக் கடிதங்களை எழுத, வரும் கடிதங்களுக்கு பதிலனுப்ப உதவுவார்.

மாதக்கணக்கில் ஓவியம் தீட்டாமல் இருப்பார். திடீரென்று ஒரு நாள் அவருள் உறங்கும் கலைஞன் விழித்தெழுவான். குப்பி வண்ணங்களும் (Poster Colours) தூரிகைகளும் சட்டியில் நீரும் (அது தூரிகைகளை கழுவ) அருகிலிருக்க மார்பில் கட்டிய லுங்கியுடன் தரையில் சப்பணமிட்டு அமர்வார். ஒரே அளவான கெட்டி அட்டைத் தாள்களை அடுக்கிவைத்துக் கொள்வார். பின்மாலை தொடங்கி இரவு முழுவதும் ஓவியங்கள் தீட்டுவது நிகழும். வண்ணங்களைக் குழைக்க கடப்பாக்கல் தரையையே பயன் படுத்துவார். தொடர்ந்து தேநீர் வெற்றிலை என்பதுடன் படைப்பு நிகழும். இன்று நினைத்தாலும் அந்த நேரத்தில் கிட்டிய மகிழ்ச்சியும் பிரமிப்பும் முழுமையாக உள்ளது. அவரது குடும்பம் அளவில் பெரியது. அதிக இடைவெளி இல்லாத விதமாய் குழந்தைகள் அவற்றில் இரட்டையாக ஒருமுறை ஆண் பின்னர் பெண். நான் அவரைக் காணச்சென்ற போதெல்லாம் உணவும் சிற்றுண்டியும் நேரத்தைப் பொறுத்து தவறாமல் கிடைக்கும்.

சென்னை ஓவியப்பள்ளியில் பயில வரும் மாணவனுக்கு அதற்கான ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒரு நுழைவுத் தேர்வு உண்டு. அதற்கென ஸ்ரீநிவாசுலுவிடம் மனிதனின் முகம் மற்றும் முழு உருவம் வரைவதில் பயிற்சி பெற்றேன். என்னுடன் எங்கள் பள்ளியிலேயே படித்த பகவத்கீதா என்னும் பெண்ணும், S.V.ராமாராவ் என்பவனும் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். (இப்போது அவன் புகழ்பெற்ற ஓவியனாக அயல் தேசத்திலேயே வசிக்கிறான்.) எங்களை ஸ்ரீநிவாசுலு அப்போது மயிலையில் வசித்து வந்த அவரது பள்லித் தோழரும் ஓவியப் பள்ளியில் பணிபுரிபவருமான திரு தனபாலிடம் கூட்டிச் சென்றார். எங்களைப் பள்ளியில் சேர்க்க சிபாரிசு செய்தார். எங்கள் கோட்டு சித்திரங்களை அவரிடம் காண்பித்தோம். பின்னர் முறைப்படி விண்ணப்பித்தோம். தேர்வுக்கான அழைப்பு வந்தது. ஓவியப் பள்ளியின் வாயிலில் அதற்கென வந்தவர்கள் சுமார் 40 பேர் கூடியிருந்தோம். நல்ல நிறமுடைய ஒருவர் எங்கள் பெயர்களைப் படித்து, தேர்வுக் கூடத்துக்கு அனுப்பினார். அவர்தான் K.C.S.பணிக்கர் என்று பின்பு தெரிந்து கொண்டேன். முதல்வர் திரு.ராய்சவுத்திரி வெளிநாடு போயிருந்ததால் இவர்தான் அப்போது முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

நான்கு நாட்கள் தேர்வு நடந்தது. காலை நேரத்தில் மனிதனின் முகம் (முன்னால் அமர்ந்திருக்கும் மனிதன் முகம்) வரைவது இரண்டு நாட்கள்; மனிதனின் முழு உருவம் வரைவது இரண்டு நாட்கள். பிற்பகலில் எங்கள் சொந்த ஓவியம் வண்ணத்துடன் தீட்ட வேண்டும். முதலில் ஒரு மாதிரி நடுக்கமாக, பயமாகக்கூட இருந்தது. நடுவில் மனிதன் (model) இருக்க சுற்றிலும் சரிந்த மேஜையின் முன் நின்றபடி, அல்லது அமர்ந்தபடி பார்த்து வரையவேண்டும். பெரிய சவாலாகத்தான் இருந்தது இது.

மூன்று மாதங்கள் ஓசையின்றி போயின. இரண்டு முறை பள்ளி சென்று விசாரித்தேன். பொறுமைதான் பதில். தேர்வின் முடிவும் வந்தது. நான் மூன்றாம் ஆண்டுக்கான வகுப்பில் சேர்த்துக்கொள்ளப் பட்டேன். (double promotion) அப்போது இது ஆறு வருடப்படிப்பு. முதல் 2 ஆண்டு பொதுநிலைக் கல்வி (general drawing). பின்னர் மூன்று ஆண்டுகள் மாணவன் தேர்ந்தெடுக்கும் ஓவிய அல்லது சிற்ப கல்வி; கடைசீ ஆண்டு முடித்தால் பட்டையம் இல்லாவிட்டால் சான்றிதழ் என்று கல்வி முறை இருந்தது. நான் பிடிவாதமாக நுண்கலை ஓவியம் (fine arts) தான் படிப்பேன் வர்த்தக விளம்பரம் சார்ந்த ஓவியம் (comercial arts) படிக்க மாட்டேன் என்று அதில் சேர்ந்து கொண்டேன். கால் காசுக்கு ஆகாதது என்று வீட்டில் எல்லோரும் கோபித்தார்கள். ஆனாலும் இரட்டைத்தேர்வு (double promotion) கிடைத்ததில் ஒரு திருப்தி. பள்ளியில் ‘கோட்டு' அடித்ததனால் உண்டான அவமானத்துக்கு இது பெரிய ஆறுதலாக அமைந்தது. அந்த ஆண்டு செப்டம்பரில் திரும்பவும் S.S.L.C. பரிட்சை எழுதித் தேரினேன். அப்போது எல்லாப் பாடங்களையும் ஒருமித்து எழுதித் தேர்வு பெற்றால் தான் கல்லூரிப் படிப்பு படிக்க முடியும். நான் கல்லூரி செல்வது என்பது இயலாதது. ஆனாலும் பின்னாளில் ஆசிரியப் பணியில் இருந்தபோது பட்டப்படிப்பு படிக்க முடிந்தது.

வர்த்தக விளம்பரம் சார்ந்த ஓவியப் படிப்பு (commercial arts) என்பது விளம்பர நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் முறை. அது முடித்ததும் எப்படியும் ஒரு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் நான் மனதில் செய்து கொண்ட முடிவு ஓவிய உலகில் ஒரு சிறந்த, புகழ்மிக்க, ஒரு நிரந்தர பெயர் பதித்த ஓவியனாக உயர வேண்டும். கனவுதான் என்றாலும் என்னை வானத்தில் பறக்கச் செய்தது அது. அடிப்படை வண்ணங்கள். தூரிகைகள், வரையக் காகிதங்கள், பென்சில்கள் என்று தந்தையுடன் பாரிஸ் வளாகத்தில் இருந்த பெருமாள்செட்டி கடையில் வாங்கிக் கொண்டு ஓவியப் பள்ளியில் போய் சேர்ந்தேன். (பெருமாள்செட்டி ஸ்தாபனம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.)

ஓவியப் பள்ளியின் வளாகத்தில் சிவப்பு வண்ணம் பூசிக்கொண்ட, இரண்டு அடுக்குக் கட்டிடம் பற்றி முதலில் சொல்ல வேண்டும். ஒரு பெரிய, விலாசமான கீழ் தளம். இது ஓவியக் காட்சிகளுக்கு, அது சார்ந்த கூட்டங்களுக்குப் பயன் படுத்தப்படும் இடம். நூலகமும் அதில்தான். பூந்தமல்லி சாலையில் இதற்கு நுழைவாயில் உண்டு. பொதுவாக மூடியே இருக்கும். நூலகமும் மாணவர் பயன் படுத்தும் நிலையில் இருக்க வில்லை. முதல், இரண்டாம் தளம் வகுப்பறைகள். சிறப்பான வெளிச்சம் பெறும் அமைப்புகளைக் கொண்டவை. பத்துக்குப் பத்து அடி மர மேடை, சுற்றிலும் உயர்ந்த சாய்வான மேஜை, அமர கைப்பிடிகளற்ற ஸ்டூல்கள் என்று இருக்கும். ஆங்காங்கே பெரிய மரத்தடுப்புகள் இருக்கும். இவற்றில் மாணவர்கள் தமது படைப்பு முயற்சிகளை ‘பின்' கொண்டு குத்திப் பார்வைக்கு வைப்பார்கள். நடுவில் இருக்கும் மேடையில் model என்று குறிப்பிடப்படும் மனிதர்கள் வெறும் கோவணத்துடன் நிற்கவைக்கப் படுவார்கள். தேவைக்குத் தகுந்தவாறு ஒளி அமைக்கப்படும். மேடையைச் சுற்றி நாற் புறமும் மாணவர்கள் பரவி, அவனைப் பார்த்துக் கரிக் குச்சியால் வரைவார்கள். ஒரு வாரம் முகம், ஒரு வாரம் முழு உருவம் என்பதாக காலைப் பொழுது பத்து மணி முதல் இரண்டு மணி வரை இருக்கும். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஐந்து நிமிட இடைவெளி இருக்கும். மாணாக்கர் தமது திறமையை உயர்த்திக்கொள்ள, பக்குவப்பட என்பதுடன் இது அந்த மனிதனுக்கும் ஓய்வாக அமையும் அவனுக்கு மிகக்குறைந்த நாட்கூலிதான் கிட்டும். மாணவர்கள் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி செய்வார்கள். அவ்விதமே பெண்களும் ‘மாடல்' முறையில் உடையின்றி நிற்க, அமர, படுக்க என்று பல நிலைகளிலும் காட்சிப்படுத்தப் படுவார்கள். ஆனால், மூன்றாமாண்டு வகுப்புகளிலிருந்துதான் இது நிகழும். மாணவர்கள் உடல்கூறு பற்றி நேரிடை அனுபவம் பெற இவை பெரிதும் உதவும். உடையவிழ்த்து பலர் கண்கள் மொய்க்கப் பலமணி நேரம் நிற்கும் நடுவயதுப் பெண்ணொருத்தி ஒருமுறை என்னுடனேயே எழும்பூர் ரயில் நிலயத்தில் வண்டியேறி என்னுடன் யதேச்சையாகப் பயணம் செய்தாள். நான் மிகுந்த கூச்சமாக உணர்ந்து அவளை தவிர்த்தேன். அவளோ இயல்பாக என்னுடன் பேசியபடி பயணித்தாள்.

இதல்லாமல் வெள்ளிக் கிழமைகளில் ‘ஸ்டில் லைஃப்' (still life) என்று அறியப் படும் ‘பொருள்தொகுப்பு' மேஜையில் அமைக்கப்படும். இதில் உயிரற்ற பொருட்கள், (கனி, பூ என்பன போன்றவை) இடம் பெறும். ஒரு சமயம் வெட்டிய ஆட்டின் தலை கூட இடம் பெற்றது. அன்று முழுவதும் எல்லோரும் அதை வரைவது, வண்ணங்களில் தீட்டுவது என்று செல்லும். மாலையில் ஏலம் விட்டு அனைவரும் பகிர்ந்து உண்போம். (பழங்கள் மட்டும்தான் இதில் அடக்கம்). ஆசிரியர் பெரும்பாலும் மாணவனின் வரைதலில் குறுக்கிட மாட்டார். தனது தவறுகளை, பிரச்சினைகளை அவனே அறிந்து தீர்ப்பதுதான் இதன் நோக்கம். அவர் பொதுவாக ஓவியம் பற்றி, செயல்முறை பற்றிப் பேசுவார். தாமும் எங்களுடன் வரைவார். அப்போது அது ஒரு செயல் முறை விளக்கமாக அமையும்.

ஒருமணி நேரம் மதிய உணவுக்காக ஒதுக்கப்படும். பிற்பகல் நாங்கள் எங்கள் சுயபடைப்புக்களை, வண்ண ஓவியங்களை உருவாக்குவதில் ஈடுபடுவோம். முதல் இரண்டு ஆண்டில் நீர் வண்ணத்திலும், மூன்றாம் ஆண்டு முதல் தைல வண்ணத்திலும் ஓவியம் தீட்டப் பயிற்றுவிக்கப்படும். அடிப்படையான வண்ணங்களைக் கையாள்வது, புதிய வண்ணக் கலவையை உருவாக்குவது என்பது போன்ற பொதுவான விஷயங்கள் கற்றுத்தரப்படும். பெரும்பாலும் இவை பிறர் செய்வதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் விதமாகவே அமையும். நாங்கள் வகுப்பை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியே போகலாம், வரலாம். ஒப்புக்குச் சொல்லி விட்டுச் செல்வோம். பிற்பகல் பல நாட்களில் ‘அவுட் டோர் ஸ்டடி' (outdoor study) என்று சென்னையை சுற்றுவதற்கும், காணும் காட்சிகளில் மனம் லயிப்பதை பதிவு செய்யவும் இது உதவும். மறுதினம் வகுப்பில் எங்களுக்குள் இவற்றை வைத்து விவாதங்களும் நடக்கும். ஆசிரியரும் இதில் தமது அனுபவங்களைச் சொல்லி உதவுவார்.

சிற்பப் பகுதிக்கு வேறு கட்டிடம்; இந்த சிவப்புக் கட்டிடத்தை ஒட்டியது. இங்கு வகுப்பின் அமைப்பே வேறாக இருக்கும். சுழலும் வசதி கொண்ட சமதளப் பலகை (3க்கு3அடி) பொருத்தப்பட்ட அமைப்புகள் தரையில் இருக்கும் மற்றொரு பலகையுடன் இணைக்கப் பட்டிருக்கும். மாணவன் நின்றவாறு பலகையில் களிமண் கொண்டு உருவம் சமைப்பான். வடிவத்துக்குத் தக்கவாறு முதலில் கம்பியால் இதற்கு அடித்தளம் உண்டாக்கப் படும். அறை முழுவதும் எங்கும் களிமண், தொட்டிகளில் தண்ணீர், தரையில் நசநசப்பு என்றிருக்கும். இங்கும் முன்னர் சொன்னது போலவேயான பாட திட்டம்தான் பின்பற்றப் பட்டது. விளம்பரத் துறை ஓவியப் படிப்பு ஒரு மாணவனை சரியான விளம்பர ஓவியனாக உருவாக்கியது. இதற்கான கட்டிடம் பெரிய கட்டிடத்துக்கு நேரெதிரில் ஒரு 150 அடி இடைவெளியில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது.

No comments: