Sunday, November 6, 2011

ஆறு மாத வீடு

கடற்கரையருகில் சவுக்கங்காட்டினிடையில் பிரம்மஞான சங்கத்திற்குச் சொந்தமான சில வீடுகளிருந்தன. அந்தப்பகுதி மிகவும் ஒதுக்குப்புறமானது. எலியட் கடற்கரையை ஒட்டியது. 1949 ஆம் ஆண்டு. பள்ளியின் கோடை விடுமுறை சமயம். பள்ளி நிர்வாகிகள் எங்களை அங்கு இடம்பெயரச் சொல்லிவிட்டார்கள். விட்டல் ஐயர் குடும்பம் முன்னரே அங்கு போய் விட்டிருந்தது. நகருக்குச் சென்றால் இரவுகளில் மின் வெளிச்சம் இல்லாத அந்தப் பொதுச் சாலையில் (வசந்த சாலை) நடந்துதான் வீடு திரும்ப வேண்டும். அந்த சாலையின் இருபுறமும் பிரம்மஞான சங்கத்தின் நிலம் இருக்கும். பெரும் வனத்தையொத்த அதன் தோற்றம் யாரையும் அச்சுறுத்துவதாக இருக்கும். தினமும் அதி காலையில் எலியெட் கடற்கரைக் குப்பத்திலிருந்து பெரும் சுமையுடன்கூடிய மீன் கூடைகளைத் தலையில் சுமந்தவாறு பெண்களும் ஆண்களும் மயிலாப்பூர் தண்ணித்துறை அங்காடிக்குப் போவார்கள். முறைபோட்டுக் கொண்டு கூடையின் பாரம் தாங்கி இடை சுழலச்சுழல அவர்கள் பெரு நடையாகப் போவது சிறுவனான எனக்கு மிகக்களிப்பாக இருக்கும். இப்போது பிரம்மஞான சங்கத்தின் நூலகம் அமைந்திருக்கும் கட்டிடத்துக்கு எதிர்புறச் சாலையில்தான் ‘கல்யாண பரிசு' திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் சைகிள் ஓட்டியபடி பாடும் காட்சி படமாக்கப்பட்டது. சரோஜாதேவிக்கு ஓட்டத் தெரியாது. யாரேனு மொருவர் பின்னாலிருந்து சைகிளை தள்ளி விடுவார்கள். அது விழா வண்ணம் யாரேனும் கூடவே ஓடுவார்கள். கணேசனோ உல்லாசமாக சைக்கிளில் சுற்றிச் சுற்றி விசில் அடித்தபடி ஓட்டி வருவார். திரைப்படக் கலைஞர் தமது உல்லாசத்துக்கு அல்லது நிதியுதவிக்குக் கிரிகெட் விளையாட எங்கள் விளையாட்டுத் திடலைத்தான் தேர்ந் தெடுப்பார்கள். அங்குதான் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் விளயாடமுடியும். ஜெமினி கணேசன், மனோஹர், நம்பியார் போன்ற சிலர் திறமையுடன் விளையாடு வார்கள். நாங்கள் உரிமையுடன் அங்கு உலாவுவோம், அவர்களுடன் பேசுவோம். அவர்களுக்கு போலிங் போடுவோம். இப்போது அந்தத் திடலில்தான் முன்னர் அடையாறு நதியை ஒட்டி அமைந்திருந்த ஆல்காட் பள்ளி இயங்கி வருகிறது.

அங்கு குடிப்போக விருப்பம் இல்லாமல் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறி பாப்பான்சாவடி என்று அந்நாளில் அழைக்கப்பட்ட இன்றய அடையார் சிக்னல் (adyar signal) அருகில் (திருவான்மியூர் போகும் சாலை) ஒரு வீட்டிற்குக் குடிப்போனோம். (செக்குமேடு என்றும் அந்தப் பகுதி அறியப்பட்டது) அதற்கு எதிர்ப்புறம் குனேகா கம்பெனியின் பெரிய வளாகம் இருந்தது. பின்னாளில் ஈராஸ் தியேட்டர் அருகிலேயே கட்டப் பட்டது. அடையாருக்கு அதுதான் முதல் முறையான திரையரங்கு. இப்போது திருவான் மியூரில் ஜெயந்தி, தியாகராஜா திரையரங்குகள் இருக்குமிடத்தில்தான் டென்ட் கொட்டாய் எனப்படும் திரையரங்குகளில் 35MM எனப்படும் உருளை கொண்டு திரைப் படங்கள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு ரீல் முடிந்தவுடன் மங்கிய விளக்கொளியில் பிஸ்கட் தேநீர் விற்கும் சிறுவர்கள் அவற்றைக் கூவி விற்பார்கள். அவற்றை வாங்கி உண்ணக்கூடாது என்னும் கண்டிப்புடன்தான் படம் பார்க்க அனுமதி கிட்டும்.

நாங்கள் குடிப்போன இந்த வீட்டின் முன்புறம் திறந்த வெளியும் நீண்ட பாதையும், கொண்டது. அது பொதுச் சாலை (பலகைவாராவதி சாலை) வரை போகும். வீட்டை சுற்றி வேலியும் நுழைவாயிலில் இரும்பு கம்பிகள் மேல்கீழாகக் கொண்ட இரண்டு பெரிய மரக்கதவுகளும் கொண்டது. ஆங்காங்கே வளர்ந்த புளியமரங்கள் இருக்கும். பின்புறமும் நிலம் நீண்டு பராமரிப்பற்றுக் கிடக்கும். முடிவில் ஒரு குளம். தெற்கில் வேலியை அடுத்து கிழக்கு மேற்காக சிறிய சந்து உண்டு. அங்கு வசிக்கும் குடிசைவாழ் மக்கள் மலம் கழுவ இஅந்தக்குளத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள். எப்போதும் மல நாற்றம் வீசும். “சர்வ குண்டித் தீர்த்தம்” என்று அந்தக் குளத்தைக் குறிப்பிடுவார்கள் எங்கள் வீட்டில். மின் வசதி இல்லாத வீடு அது. எனவே தினமும் மாலையானதும் ஐந்து அல்லது ஆறு ‘ஹரிகேன்' விளக்குகளின் கண்ணாடியை விபூதிப் பொடி கொண்டு அதில் படிந்திருக்கும் புகையைத் துடைத்துச் சுத்தம்செய்து, மண்எண்ணெய் ஊற்றி, திரியைச் சரிசெய்து அம்மா விளக்கேற்றுவார். மாடிப் பகுதியில் வீட்டுக்காரர் வசித்தார். அவர் மொழி தெலுங்கு. அவர் பெயர் சாம்பசிவ ராவ். “சாம்பசிவரவு” என்றும் “சம்பாசிவரவு” என்றும் உறக்கக் கத்தியபடி மரங்களைச் சுற்றிச்சுற்றி ஓடியும், சுற்றுச் சுவர்களில் கரிகொண்டு எழுதியும், கூட்டம் கூட்டமாய் சண்டையிட்டுச் செத்து மடியும் எறும்புகளை நேரம் போவது தெரியாமல் பார்த்தபடியும் தனியாகவே இருக்கக் நேர்ந்தது எனக்கு. பள்ளிக்கு அங்கிருந்து சென்றது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.

ஜட்காவண்டி என்று அழைக்கப்படும் குதிரை வண்டிகள் வரிசையாக வசந்த சாலையிலிருந்து தெற்குப்புறம் திரும்பும் பலகைவாராவதி சாலையோரத்தில் நிற்கும். அன்று சென்னை நகரம் முழுவதும் இம்மாதிரிக் குதிரைவண்டி நிலையங்களைக் காணமுடியும். இன்றும் ரிப்பன் கட்டிடத்தின் எதிர்ப்புறம் குதிரை வண்டிகளும் போதிய உணவில்லாததால் பரிதாபமாகக் காட்சியளிக்கும் தொத்தல் குதிரைகளும் காணக் கிடைகின்றன. திருவான்மியூர் போக 19 ஆம் எண் பஸ் தவிர வேறு வசதி ஏதும் கிடையாது. அதுவும் ஒரு மணிக்கு ஒரு முறைதான் வரும். பலசமயம் வராமலும் இருந்து விடும். அடையார் திருவான்மியூருக்கு இடைப்பட்ட நிலம் வயல்வெளிதான். பலகை வாராவதி (பக்கிங்ஹாம் கால்வாய்) கால்வாயில் நீரின் அளவு குறைவாக இருக்கும் எனவே, பல்வேறு பண்டங்களை ஏற்றிய நீண்ட படகுகளை நீண்ட மூங்கில் கொம்புகளால் குத்தித் தள்ளி போவதும் வருவதுமாக இருப்பார்கள். குஞ்சு அத்தையும் அவர் மகன் சீத்தாராம அத்தானும் அப்போதுதான் திருவான்மியூருக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். அத்தை அதுவரை எங்களுடனே தான் இருந்தார். அவர் இல்லாதது குழந்தைகளான எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவரது இட்டுக்கட்டிக் கதை சொல்லும் திறமை பெரிவர்களையும் அமர்ந்து கேட்கச் சொல்லும்.

No comments: