எனக்கு ‘தேனுகா’ என்ற ஸ்ரீநிவாசனுடன் முதல்
சந்திப்பு நிகழ்ந்தது, 1985 ல் கும்பகோணத்தில்தான். அது, குடும்பத்துடன் (‘கிருஷாங்கினி’,
நான் மகன், மகள்) தமிழ்நாட்டு ஊர்களுக்குச் சுற்றுலா சென்ற சமயம். புதுச்சேரியில் யூகோ வங்கியில் பணி புரிந்த காலம்.
கட்டாயம் சந்திக்க வேண்டியவர் களின் பட்டியலில் ‘தேனுகா’ பெயரும் இருந்தது. ‘கரிச்சான் குஞ்சு’வின்
மகள் விஜயாள் பணிமாற்றம் பெற்று பாண்டிச்சேரியிலிருந்து கும்ப கோணம் சென்று ஒரு வருடம்
ஆகியிருக்கும்.
நாங்கள் குடந்தையில் இருந்த இரு நாட்களிலும்
‘தேனுகா’ பெரும்பாலும் எங்களுடன் இருந்து உரையாடினார். முதல் முறையாக சந்திக்கும் உணர்வே
தோன்றாமல் வெகு இயல்பாக உரையாடினார். ‘கிருஷங்கினி’யின் சிறு கதைகளைப் பற்றி விரிவாகப்
பேசினார். தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த ஆண்டே (1986 ஜனவரி) எனக்குப் பதவி உயர்வு
கிட்டியது. கும்ப கோணம் தஞ்சாவூருக்கு இடையில் இருந்த பண்டாரவாடை கிளையில் (யூகோ வங்கியில்
தலைமைக் காசாளர் பொறுப்பு) பணி. அங்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு நாங்கள் பாட்ராச்சாரி
தெருவில் வசிக்கத் தொடங்கினோம். குடந்தையில் வசித்த அடுத்த ஐந்து ஆண்டுகாலம் அனேகமாக
தினமும் ‘தேனுகா’வுடனான சந்திப்பு இருந்தது. அது அவரது அலுவலமாக, எங்கள் வீடாக, காந்தி
பூங்காவாக, கோபால்ராவ் நூலகமாக, கும்பேஸ்வரர் கோவில் ராமசாமி கோவில் சாரங்கபாணி கோவில் என ஏதாவது ஒரு
ஆலயமாக இருக்கும். அவர் எப்போதும் ஒரு மிதிவண்டியில் பயணிப்பார். சமயத்தில் அவருடன் தஞ்சை பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நட்புகள்
கூட்டம் எங்கள் இல்லத்துக்கு வரும். உரையாடல் வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் தொட்டு
வரும். சர்ச்சைகளும், பொறிபறக்கும் எதிர் வாதங்களுமாக கூரை அதிரும். பண்டாரவாடை வெற்றிலை
அதற்குக் காரம் கூட்டும்.
ஓவியப் பள்ளிக்கு நாங்கள் இருவரும் மிதிவண்டியுடன்
எண்ணற்ற முறை சென்றிருக்கிறோம். P.B..சுரேந்திரநாத், S..முருகேசன் என்று முதல்வர்கள்
அடுத்தடுத்து இருந்த சமயம் அது. வழியில்தான் சிற்பி வித்யாஷங்கரின் இல்லம். அவரது இல்லத்துள்ளும்
நேரம் போகும். பல ஞாயிறுகளின் போது, நாங்கள் குடும்பத்துடன் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு
மதிய உணவுடன் புறப்படுவோம். ‘தேனுகா’வும் உடன் பயணிப்பார். அவை பற்றிய வரலாறு, கலை
சார்ந்த நுணுக்களுடன் ஓயாமல் பேசியபடியே நேரம் செல்லும். அவருக்கு அதெல்லாம் ஒரு தாய்வீடு
போலத்தான். குறிப்பாக கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம், தாரசுரம் ஆலயம் சென்ற அனுபவம் இன்றும்
மறக்க முடியாதது.
மாலை வங்கி வேலை முடிந்தவுடன் மற்றவர் போலத்
தன் வீடு போக மாட்டார் ‘தேனுகா’. டபீர் தெருவில் உள்ள ‘கரிச்சான் குஞ்சு’ வீட்டுக்குப்
போய், அவரை அழைத்துக் கொண்டு நகரின் நடுவில் இருக்கும் காந்தி பூங்காவிற்கு வண்டியை
உருட்டியபடி வருவார். அரசலாற்றின் அருகில் வசித்த எம்.வி. வெங்கட்ராமன் தமது மிதிவண்டியில்
வந்து சேர்ந்து கொள்வார். அவர் கும்பேஸ்வரன் கோவில் மொட்டை கோபுரத்திற்கு எதிர்ப்புறம்
இருந்த பசும்பால் காபி கிளப்பில் சிற்றுண்டி முடித்துக் கொண்டுதான் வருவார். வெற்றிலை
சீவல் மெல்லாத நேரமே இராது. அந்தநேரத்தில் இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர் குழுமுவது தப்பாது.
இருட்டத் தொடங்கியதும் எல்லோரும் கலைந்தபின் . ‘தேனுகா’, ‘கரிச்சான் குஞ்சு’வைத் திரும்ப
கூட்டிச் சென்று அவரது வீட்டில் சேர்த்தபின்தான் தன் வீடு செல்வார்.
அவருக்கு நாய் அச்சத்தைக் கொடுக்கும் விலங்கு.
எங்கள் வீட்டில் பைரவ் என்னும் நாய் இருந்தது. எங்கள் இல்லத்துக்கு வரும் அவர் வீட்டு
வாயிலில் நின்றபடி அதை நாங்கள் சங்கிலியல் சரியாகப் பிணைத்துள்ளோமா என்று கேட்டுக்
கொண்டு உறுதி செய்துகொண்டபின் தான் மிதிவண்டியைப் பூட்டுவார். விட்டல்ராவ் தமது குடும்பத்துடன்
குடந்தை வந்தபோது அவர்களை தேனுகா எங்கள் இல்லத்திற்குக் கூட்டி வந்தார். அது போலவே
குடந்தை வாழ் இசைக் கலைஞர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். தபால் இலாகாவில் பணியாற்றிய
சம்பத் ஐயங்கார் அப்படி அறிமுகம் ஆனவார்தான். அவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின்
சீடர். குடந்தையில் துக்காம்பாளையத் தெருவில் ஐயங்கார் வசித்த போது அவரது கடைசிக் காலத்தில்
அவருடன் இருந்தவர்.
குடந்தை ஓவியக் கல்லூரியில் ஒரு செயல்முறை
விளக்க ஓவிய--சிற்ப நிகழ்வு ஏற்பாடு ஆனது. அது பற்றி ஒரு மதிப்பீட்டுக் கட்டுரை எழுதும்படி
க்ருஷாங்கினியைக் கேட்டுக் கொண்டார். வற்புறுத்தினார் என்பதுதான் சரியாக இருக்கும்.
அதற்கு முன்னர் க்ருஷாங்கினி அம்மாதிரி கட்டுரைகள் எழுதியதில்லை எனவே மிகுந்த தயக்கம்
காட்டினார் அதுதான் முதல் கட்டுரை. கிருஷாங்கினிக்கு
ஒவியம் பற்றி எழுத ஊக்கம் அளித்தவர் தேனுகாதான்.
அது பின்னர் ஓவிய நுண்கலை இதழில் வெளிவந்தது.
தேனுகா அடிக்கடி சென்னை சென்று வருவார்.
ஒரு முறை அது பற்றிக் கேட்டபோது ‘பேண்ட்’ தைத்துக் கொள்ளப் போனதாகச் சொன்னார். நான்
வியப்புடன் குடந்தை, தஞ்சை நகர்களில் தைத்துக் கொள்ள என்ன தடை என்ற போது இங்கே சரியாக
அமையாது என்றார். சென்னையில் லஸ் பகுதியில் இயங்கிய ஒரு தையல் கடையில்தான் எப்போதும்
தைத்து வாங்கினார்.
‘ஜனரஞ்சனி’ என்னும் அமைப்பு மாதந்தோறும் ஏற்பாடு
செய்யும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் தவறாமல் செல்வோம். மறுதினம் அன்று பாடிய
இசைக் கலைஞரின் நிறைகுறைகளைப் பற்றிய விரிவான உரையாடல் ஒன்று அவரிடமிருந்து வரும்.
சுவாமிமலை ராஜரத்தினம் (நடன குரு) அவரது அண்ணன். ‘தேனுகா’ நாதஸ்வர கச்சேரிகளில் தாளம்
போடும் தனது அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது இசை நுட்பம் எனக்கு
விளங்காது. என் இசை அறிவு கேள்வி ஞானம்தான்.
என் ஓவியப் படைப்புக்களைப்பற்றிய கருத்துக்கள்
அவ்வப்போது அவரிடமிருந்து வருவது எனக்கு ஊக்கப்படுத்தும் விதமாகவே இருந்தன. அவருக்கு,
ஓவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் இசைக் கலைஞர்கள் நடனக் கலைஞர்கள் என்று அனைவருடனும்
ஆழமான நட்பு இருந்தது. அனைவருடனும் இணக்கமான நட்புடன் பழகி வந்தார் என்பது பல நேரங்களில்
அவர் பேச்சில் வெளிப்பட்டது.
அவர் ஓவியம்--சிற்பம் சார்ந்த மதிப்பீடுக்
கட்டுரை தொடர்ந்து எழுதினார். கவிதைகளையும் எழுதினார். ஆனால் அவருக்குப் புகழும் பெருமையும்
கொடுத்தது அவரது கட்டுரைகள்தான்.
எனக்கு பண்டாரவாடையிலிருந்து பணிமாற்றம்
சென்னைக்கு (1990) கிட்டியது. பின்னர் படிப்படியாக குடந்தை தஞ்சை நண்பர்களுடான சந்திப்பு
குறைந்து கொண்டு வரத்தொடங்கியது. ‘தேனுகா’ சென்னை வரும் போதெல்லாம் தொலை பேசியில் தொடர்பு
கொண்டு பேசுவார். ஆனால் அதுவும் மெதுவாகக் குறைந்தது. அவருக்கு இருந்த பணி நெருக்கடிதான்
காரணம். அவர் கட்டிய புதிய இல்லத்திற்குப் போக எனக்கு இயலவில்லை. ஆனால் அந்த வீட்டின் அமைப்புப் பற்றி
அவர் மிகுந்த மனநிறைவுடன் பல தடவை சொல்லிக்
கேட்டிருக்கிறேன். தான் ஒரு கவிஞர் என்று அறியப்பட வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்தார்
தேனுகா. மேலை நாட்டு ஓவியர்களில் பியட் மோந்திரியன், நவீன ஓவிய உத்தியான ‘நியோபிளாஸ்டிசிசம்’
பற்றி அவர் நீண்ட நுணுக்கமான உரையாடலகள் என்னுடன் நிகழ்த்தியுள்ளார். மேலை நாட்டு நவீனச்
சிந்தயை உள்வாங்கிக்கொண்டு அதை நம் மண்ணின் சிந்தனையுடன் இணைத்துப் படைப்பதையே அவர்
விரும்பினார். ‘ஆஹிரி’ (அது ஒரு கர்நாடக இசை ராகத்தின் பெயர்) என்னும் தலைப்பிட்ட தனது
கவிதை வாசகர்களுக்குச் சரியாகப் புரிதலில் சென்றடையவில்லை என்ற வருத்தமும் அவருக்கு
உண்டு. அவ்விதமே தனக்கு ஒரு பெண்குழந்தை வாய்க்கவில்லை என்பதும் அது பற்றின ஆதங்கமும்
அவரிடமிருந்து அடிக்கடி வெளிப்படும். இதே மனக்குறை பிரபஞ்சனிடமும் உண்டு.
சென்ற ஆண்டு சிற்பி தனபால் அவர்களுக்கான
ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்புரை செய்தார். அது சென்னை பெசன்ட் நகரில் நிகழ்ந்தது.
அப்போது சந்தித்ததுதான் கடைசி சந்திப்பு.
‘தேனுகா’ மறைந்த செய்தியை நான் ‘தினமணி’
நாளிதழில் படித்துப் பதறியபடி க்ருஷாங்கினியிடம் சொன்னேன். அப்போதுதான் அவர், கனடாவில்
வசிக்கும் எங்கள் மகள் நீரஜா தொலைபேசியில் அந்த செய்தியைச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.
உடனே கும்பகோணம் போக மனம் துடித்தது. முன்பு
தஞ்சை ப்ரகாஷ் இறந்த செய்தி கேட்டவுடன் சென்னையிலிருந்து பேருந்தில் பயணப்பட்டு அவரது
இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள முடிந்தது. இப்போது அது இயலவில்லை. முதுமைதான் காரணம்.
மனம் புழுங்குகிறது. ப்ரகாஷ் இல்லாத தஞ்சாவூருடன், ‘தேனுகா’ இல்லாத குடந்தையும் இப்போது
சேர்ந்து கொண்டது. Published in “thalam” 2014 last quarter issue
No comments:
Post a Comment