02-பழங்குடி இன மக்களின் ஓவியங்கள்.
1. வார்லி ஓவியங்கள்
2. ஒரிசா ஓவியங்கள்
1.வார்லி பழங்குடியினரின் ஓவியங்கள்
வார்லி பழங்குடியினர் பெருமளவில் காணப்படும் பகுதி மேற்கிந்திய கடலோர நிலமான ‘தானே' மாவட்டமாகும். மும்பை இதற்கு வெகு அருகிலே தான் உள்ளது. 10ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த இனம் பற்றித் தெரியவந்துள்ள தாக வரலாற்று வல்லுனர்கள் கணிக்கின்றனர். இவர்களின் மூதாதையர் பற்றின தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
பெரும்பாலும் எல்லா வார்லி இனத்து மக்களும் ஓவியம் தீட்டுகிறார்கள். ஓவியமென்பது அவர்களது இனம்சார்ந்த செய்திகளை, சடங்குகளைச் சொல்லும் மொழியாகப் பயன்படுகிறது. எழுதுவதென்பது அவர்களிடம் இல்லை. வார்லி மக்கள் ஓவியங்களைத் தங்கள் இல்லத்தின் உட்சுவர்களில் தீட்டுகிறார்கள். அவை மண்ணாலானவை. ஓவியங்களில் கருப்பொருளென்பது இயற்கை சார்ந்ததாகவே உள்ளது. அறுவடை பற்றிய ஓவியம் அவற்றில் ஒன்று. திருமண விழா பரவலாக ஓவியமாக்கப்படும் மற்றொன்று. செழித்து வளர்ந்து அறுவடைக்கு உகந்ததாக இருக்கும் பயிர் நிலம், வானத்தில் பறக்கும் பல்வேறு பறவையினம், இசைக் கருவியை மீட்டும் ஒருவனைச் சுற்றிக் கைகோர்த்து நடனமிடும் மக்கள், தினசரி வேலைகளை செய்யும் பெண்டிர், விளையாடும் சிறார் போன்ற காட்சிக்ளை அவர்கள் திரும்பத் திரும்ப ஓவியங்களில் காட்சிப் படுத்தினர்.
வார்லி இன மக்களின் இல்லங்களில் காணப்படும் சுவர் ஓவியங்கள் அவற்றின் தன்மையால் வரலாற்றுக்கு முற்பட்ட சுவர் ஓவியங்களின் சாயலைக் கொண்டுள்ளன. வார்லி இனப் பெண்டிர்தான் பெரும்பாலும் இவ்வோவியங் களைப் படைக்கிறார்கள். இல்லத்தின் மண்சுவரை பசுஞ்சாணத்தையும் கரிப் பொடியையும் நீரில் கரைத்துக் கலந்த குழம்பால் முறைப்படி பூசி, அதன்மீது வெயிலில் உலர்த்திக் காயவைத்த அரிசியைப் பொடிசெய்து உண்டாக்கிய வெள்ளை வண்ணம் கொண்டு ஓவியங்களைப் படைத்தனர். அவை நேர்கோடுகள் இல்லாதவை. அந்த இடத்தில் புள்ளிகளும் தொடர்ந்த சிறுகோடுகளும் உருவங் கள் வரையப் பயன்பட்டன.
அவர்களது ஓவியங்களில் நாம் இந்துமத இதிகாச புராண கடவுளரையோ, அவற்றில் உள்ள கதைகளையோ காண முடியாது. அவர்களுடைய திருமணக் கடவுளான ‘பால்கட்' ஓவியத்தில் மணமக்கள் புரவியின்மேல் ஊர்வலம் செல்லும் காட்சி தவறாது இடம்பெறும். புரவி என்பது அவர்களது பொருளாதார எல்லைக்கு அப்பாற்பட்டது. அந்த ஓவியம் அவர்களுக்கு மிகவும் புனிதமானது. அது இல்லாமல் ஒரு திருமணம்கூட அங்கு நிகழாது. இம் மாதிரியான கருப் பொருள் கொண்ட ஓவியங்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டன. மறை முகமாக அவை அவர்களுக்கு அருள் பாலித்தன. அல்லாமலும் அவ்வோவியங் கள் தங்கள் தெய்வங்களின் சக்தியையும் ஆற்றலையும் வெளிக் கொணரப் பயன்படுத்தும் கருவிகள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவர்களிடம் நிலவுகிறது.
அவர்களுக்குத் தங்கள் ஓவியங்களின் பெருமை நன்றாகவே தெரிந்திருக் கிறது. சுற்றுலாப் பயணிகள் அவற்றைப் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்கிறார்களென்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். இந்நாளில் இவ்வோவியங் கள் சுவரிலிருந்து இடம்பெயர்ந்து சிறிய தாள்களுக்கும், கைத்தறி துணிகளுக்கும் வந்துவிட்டன. மரபை அவை பின்பற்றும் அதே நேரத்தில் நவீனத்தையும் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் வண்ணங்களும் இடம் பெறுகின்றன. இந்திய அரசாங்க ‘கைத்தொழில், நெசவு மையம்' அவர்களுக்கு இந்த ஓவியங்களைக் காகிதத்தில் தீட்ட தேவையான உபகரணங்களைத் தந்துதவுகிறது. மேலும் அவற்றை கலைச் சந்தையில் விற்றும் கொடுக்கிறது.
2. ஒரிசா பழங்குடியினரின் ஓவியங்கள்
ஒரிசா மாநிலம் பழங்குடி இனத்தினரின் பல பிரிவுகளை பெருவாரியாகக் கொண்டது. அவைகளில் ‘சௌரா', ‘சந்தால்' பிரிவு மக்கள் தமது இல்லங்களின் உட்சுவற்றில் ஓவியங்கள் தீட்டுகிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையில் கிட்டும் மகிழ்ச்சி அவர்களது கலைகளில் வெளிப்படுகிறது. அவர்களது கலை சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு இசை, நடனம், என்றுமட்டுமல்லாமல் உடை, அணி கலன்கள், சுவர் ஓவியங்கள், மரச் செதுக்கல்கள் போன்றவை மூலமாகவும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
‘சந்தால்' ஓவியங்கள்
‘சந்தால்' பிரிவின மக்களின் அழகுணர்ச்சி அவர்களது இல்லங்களின் உட் சுவர் ஓவியங்களில் வெளிப்படுகிறது. அவை அம்மக்களின் உள்ளுணர்வு களையும், சுற்றுசூழலின் மேல் அவர்களுக்கு இருக்கும் நேசதையும், அக்கரையையும், அவர்கள் பின்பற்றிய சமய நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய வனவாக உள்ளன. மேலும், அவை அவர்களது கடந்த கால வரலாற்று வெளிப் பாடுகளாகவும் கூட உள்ளன.
‘சந்தால்' இனப் பெண்டிர்தான் சுவர் ஓவியங்கள் தீட்டுவார்கள். மழை காலம் முடிந்தவுடன் அவர்கள் தங்கள் இல்லங்களை சுத்தம் செய்து, மண் கொண்டு சுவர்களை பூசுவார்கள். சுவற்றில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வருடாந்திர அறுவடைக்கு முன்பு கொண்டாடப்படும் ‘ஷோரே' என்னும் விழாவிற்கு முன்னர் மிக நேர்த்தியான விதத்தில் பூசப்பட்ட இல்லத்தின் உட்புறச் சுவர்களில் ஓவியங்கள் படைக்கப்படும். இயற்கை சார்ந்த வண்ணங்களை தாங்களே செய்த தூரிகைகள் கொண்டு உருவங்களில் பூசுவார்கள். பல சமயங்களில் சிறு துணியும், கை விரல்களும் கூடத் தூரிகையின் தொழிலைச் செய்யும்.
ஓவியங்களில் வண்ணங்கள் சீராகவும் அடர்த்தி கொண்டதாகவும் பூசப் பட்டிருக்கும். நெளி கோடுகள் மற்றும் கோணம், நீள் சதூரம், நாற் கோணம் கொண்ட வடிவங்கள் போன்ற கணித வடிவியல்களையும் ஒவியங்களில் கலந்து அவற்றுக்கு எழிலூட்டினார்கள். அவ்வோவியங்களின் சிறப்பம்சம் அவர்கள் மலர்களையும் தாவரங்களையும் பல் வேறு நூதன வடிவங்களில் தீட்டியதுதான். புலி, யானை, பறவைகள், மீன், பாம்பு போன்றவற்றின் வடிவங்களை உருமாற்றம் செய்தும், அவர்களுடைய வாழ்வியல் முறைகளையும், தினசரி செயற்பாடு களையும், அனைவருக்குமான பொது விழாக்களையும் சித்தரித்தும் ஓவியங்கள் அமைந்தன. மத்தளம்கொட்டுவோரும், பாடல்களை இசைப்போரும், கைகோர்த்த மக்கள் வட்டமாக ஆடுவதும் அவற்றில் இடம்பெற்றன.
நாகரீக உலகுக்கு இவர்களின் ஓவியங்கள் அறிமுகமாகி அதன் கலைநயம் பற்றி பரவலாகத் தெரியத் தொடங்கிய பின் அந்த ஓவியங்களிலும் வெளி உலகின் தடம் பதிந்து விட்டது. என்றாலும், உள்ளார்ந்த கிராமங்களில் இன்னும் அவர்களது ஓவியங்கள் வெளி பாதிப்பு அற்றதாகவே உள்ளன.
“சௌரா”ஓவியங்கள்
தங்கள் இல்லத்து உட்சுவர்களை ஓவியங்களால் நிரப்பும் ‘சௌரா' இனத்தவர் இன்னொரு பிரிவினர். அவர்களின் ஓவியங்களில் கருப்பொருள் என்பது பெரும்பாலும் சடங்குகள் சார்ந்ததாகவும், அவர்கள் வணங்கும் கடவுளரின் உருவங்களைக் கொண்டதாகவும் இருக்கும். (‘itital') ‘இடிடால்' என்று குறிக்கப்பெறும் கடவுளர் உருவங்கள் மிகுந்த வணக்கத்துக்கும் கொண்டாட்டத்திற்குமானது. அவர்களது மதச்சடங்கிற்கு ஏற்ப அவற்றின் உருவமும் அமைப்பும் மாறுபடும். ராய்கடா, கஜபடி, கோரபுட் நிலப் பகுதிகளில் வாழும் அவர்கள் இல்லங்களில் இவ்வகை ஓவியங்கள் அதிக அளவில் தென்படு கின்றன. ‘லஞ்சியா சௌரா' பிரிவு பழங்குடியினர் இன்றளவும் தமது மரபு வழியிலேயே சுவர் ஓவியங்கள் தீட்டிவருகின்றனர். ‘சபரா', ‘சவுர்', ‘சரா', ‘சௌரா' என்று பல பெயர்களில் வாழும் இடத்துக்கு ஏற்றாற்போல அவர்கள் அழைக்கப் படுகின்றனர். மாபாரதத்து ஏகலைவனும், இராமாயணத்து சபரியும் தங்கள் இனம்தான் என்பது அவர்களது நம்பிக்கை.
அவர்களது கடவுளர் உருவங்கள் வணங்கப்படுவதற்கும், முன்னோர்களை திருப்தி செய்யவும் தீட்டப்படுபவை. சடங்குகள் நிகழும்போது பழையவை அழிக்கப்பட்டு புதிய ஓவியங்கள் தீட்டப்படும். சடங்கு சார்ந்த, நியதிகளுக்கு உட்பட்டு இருக்கும் அவற்றில் பழுதில்லாத எழிலும், கலைச்செரிவும் இருப்பதைக் காணலாம். உண்மையில் இவைதான் அவர்களது மொழியும், தத்துவமும் எனலாம். ஒவ்வொரு கடவுளரின் உருவமும் ஒரு குறிப்பிட்ட செய்தி சொல்வதற்கென்று அமையும். அவற்றின் நுணுக்கமான விவரங்கள் ஓவியத்தில் இடம் பெறும். அந்த இனமக்களின் தினசரி வாழ்க்கையையும் அவற்றில் நாம் காணமுடியும். விதை விதைக்கும் திருநாள், கடவுளரின் வழி, செழிப்பான அறுவடை, அம்மை ஒழிப்பு, இறந்தவர் கீழுலகம் சேரும் சடங்கு என்று பல வகைகளில் அவர்களது ஓவியங்களின் கருப்பொருள் அமையும்.
‘சௌரா' இனத்து மக்கள் மூங்கில் குச்சிகளை தூரிகையாகப் பயன்படுத்து கிறார்கள். விளக்கு புகையிலிருந்து கருப்பும், வெயிலில் காயவைத்துப் பொடி செய்த அரிசியை மாவாக்கி நீரில் கூழாகக் கரைத்துக்கொண்டு, அதில் வேர், மூலிகைகளிலிருந்து பெறப்படும் சாற்றை கலந்து, கிடைக்கும் வெள்ளையும் கொண்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்கள். இம்முறை பல காலமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் ஓவியங்களில் வண்ணம் என்பது இருப்ப தில்லை என்னும் செய்தி சிந்தனைக்குரியது. அதுபோலவே அவர்கள் வெள்ளை வண்ணம் உண்டாக்கும் முறையும் ஒன்றாக இருப்பதும் அவ்விதமான ஒன்றுதான். இந்நாட்களில் நகர்புற செல்வந்தர் தமது இல்லச் சுவர்களிலும், அலுவலகச் சுவர் களிலும் இந்த ஓவியங்களைத் தீட்டச்செய்து அலங்கரிப்பது அதிகமாகியுள்ளது.
Thursday, January 31, 2013
Friday, January 18, 2013
இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்-சுவர் ஓவியங்கள்-(MURAL PAINTINGS in INDIAN LAND)
வணக்கம்,
நான் எழுதிய "இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்" நூல் பிரதிகள் இல்லை என்பதனால் அவ்வப்போது அதிலிருக்கும் கட்டுரைகளை இங்கு ஒட்ட எண்ணம், இதோ ஒன்று தொடக்கமாக.
சுவர் ஓவியங்கள்
(MURAL PAINTINGS in INDIAN LAND)
உலகின் தொன்மைக் காலத்தின் உன்னதமான ஓவிய பாரம்பரியங்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆன்மீகம் அதன் அடி நாதமாக இருந்தது. அப்போதே மிக உயர்ந்த செய்நேர்த்தி ஓவியங்களில் கைவரப் பெற்றிருந்தது. இந்தியத் தொன்மைக்கால சுவர் ஓவியங்களைப்பற்றி உலகின் மிகச் சில வல்லுனர்கள்தான் அறிந்திருந்தனர். இந்திய ஓவிய வரலாறு அவர்களால் இடைக்காலச் சுவடி ஓவியங்கள், கையடக்க ஓவியங்கள் என்பதிலிருந்துதான் ஆராய்ச்சி செய்யப் பட்டது. அஜந்தா ஒவியங்கள் என்பது தொடர்பற்ற ஒரு ஒளிக்கீற்று என்பதாகவே கொள்ளப் பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வல்லுனர் திரு. சி.சிவராமமூர்த்தி தென்னிந்திய சுவர் ஓவியங்கள் பற்றி விரிவான நூலொன்றை வெளியிட்டார். அதில் சில கோட்டுச் சித்திரங்களும், புகைப் படங்களும் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் புகைப்படங்களின் நேர்த்தி இன்மையால் அது மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்று போனது.
இந்தியத் துணைக் கண்டத்தில் நமக்குக் காணக் கிடைத்த அஜந்தா ஓவியங் களே இயற்கை பாதிப்புகளுக்கு ஈடு கொடுத்து எஞ்சியவை. இந்திய-கிழக்கு நாடுகளின் ஓவிய வரலாறு இங்கிருந்துதான் துவங்குகிறது. அது புத்தமதம் சார்ந்த ஓவியங்களுக்கு ஊற்றுக்கண்ணாகவும், அகத்தூண்டுதலுக்கானதாகவும் விளங்கியது.
அஜந்தா குகை ஓவியங்கள் இரண்டு காலக் கட்டங்களில் தீட்டப்பட்டன. முதலாவது கால கட்டம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்றும், இரண்டாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்றும் வரலாறு சொல்கிறது. இரண்டாவது கால கட்டத்தில் அப்போது வட இந்தியாவில் ஆட்சி செய்த குப்தர்களும் தட்சிண நிலப்பகுதியில் ஆட்சி செய்த வாகடக மன்னர்களும் அதற்குப் பெரும் துணையாக இருந்தனர். அஜந்தா குகை ஓவியங்களில் ஹீனயானம், மஹாயானம் என்னும் புத்த மதத்தின் இரு பிரிவுகளின் ஓவியங்களும் உள்ளன. புத்தரின் வாழ்க்கையும் ஜாதகக் கதைகள் என்று குறிப்பிடப்படும் அவரது முந்தைய பிறவிகளின் வாழ்க்கையும்தான் அவற்றில் கருப்பொருளாக உள்ளன.
இந்திய நில ஓவியமரபு அஜந்தா ஓவியர்களால் செழுமைப் படுத்தப் பட்டது. ‘விஷ்ணு தர்மோத்ர புராண'த்தில் அது ‘சித்ர சூத்ரா' என்று பதியப் பட்டது. கி.பி 5-6 நூற்றாண்டுகளில்தான் அது எழுத்துருவம் பெற்றதென்றாலும் பல நூற்றாண்டுகளாக அது செவிவழியே பின்வந்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப் பட்டது. ஓவியர்கள் குழுக்களாகவும் குடும்பங்களாகவும் தொடர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள். ‘காண்போரின் சிந்தையை ஆக்ரமித்து மேம்படுத்து வதால் மனித குலத்திற்கு ஒரு பெருமை மிக்க கருவூலம்' என்று ஓவியத்தைப்பற்றி ‘சித்ர சூத்ரா' சொல்கிறது. ஓவியம் கற்போருக்கான வழிமுறைகளும், அவர்கள் பின்பற்ற வேண்டிய உத்திகளும் அவற்றில் உள்ளன. ஓவியத்திற்கான கருப் பொருளை எப்படி வெற்றிகரமாக காட்சிப்படுத்துவது, உரிய வண்ணங்களை எவ்வாறு தேர்வு செய்வது, மனித உணர்வுகளுக்குத் தகுந்த விதத்தில் உடல் வடிவமைப்பை எப்படி படைப்பது, என்பது போன்ற பல்வேறு இலக்கணங்களை உள்ளடக்கியதாக அது உள்ளது. ஓவியனுக்கு அது ஒரு பயில் நூலாக இருந்திருக்கிறது. என்றபோதிலும், பயிற்சியின் முதிர்ச்சியால் மட்டுமே ஓவியம் அமைந்துவிடாது. அவனது திறமையும் கற்பனைச் செறிவும்தான் ஓவியத்தின் பின்புலமாக அமையும் என்று அந்நூல் குறிப்பிடுகிறது. அந்த நூல் அறிவு சார்ந்தது என்பதாலும் மிகுந்த போற்றுதலுக்கு உரியது என்பதாலும் எப்போதும் புனிதமானதாகவே கையாளப் பட்டது.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வித ஓவிய எச்சங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமக்குக் கிட்டியுள்ளன. கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கான ஓவிய வரலாறு அதில் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் நமது ஓவியங்களில் காலத் தொடர்ச்சி இல்லை என்பது ஒரு பொதுவான கருத்தாக இருந்து வந்துள்ளது. அஜந்தா ஒவியங்கள் உருவான காலத்திலேயே படைக்கப்பட்ட சுவர் ஓவியங்களில் மிஞ்சியவை பிதல்கோரா, எல்லோரா போன்ற இடங்களில் உள்ள பல குகை மண்டபங்களில் இன்றும் உள்ளன.
கி.பி. நான்கு முதல் ஆறாம் நூற்றாண்டில் ‘பாக்'(Bagh) நதி ஓடும் விந்திய மலை அடிவாரத்தில் குடையப்பட்ட ஒன்பது குகைகள் அகழ்வாராய்ச்சித் துறையால் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆனால் இயற்கையின் பாதிப்பு களிலின்றும் தப்ப முடியாமல் அவற்றிலிருந்த ஓவியங்கள் அழிந்து விட்டன. ஆன போதிலும் எஞ்சியவற்றை பிரதி எடுத்துப் பார்த்ததில் அஜந்தா ஓவிய உத்தியின் பாதிப்பு அவற்றில் தெரிகிறது. அங்கு போலவே இங்கும் உருவங்கள் அசைவற்று உறைந்த தன்மையைக் கொண்டுள்ளன.
கி.பி ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய ஆட்சியில் அவர்களது தலை நகரமாக விளங்கிய பாதாமியில் உள்ள கற்கோயில்களில் ஓவியங்கள் அநேகமாக அழிந்தே போய்விட்டன. ‘பாக்' போலவே எஞ்சியிருக்கும் ஓவியங்கள் சுவர் களிலும் அறையின் உட்கூரையிலும் இருந்த ஓவியங்களின் வளம் பற்றி கற்பனை செய்ய வைக்கின்றன. அது ஒரு மலைக்கவைக்கும் அனுபவம்தான்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அப்போது காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு, தென்னிந்தியாவில் ஆட்சிபுரிந்த பல்லவ அரசர்களும் குகை மண்டபங் களையும், கற்கோயில்களையும் குடைந்தமைத்து, சைவ--வைணவ சமயம் சார்ந்த சிலைகளையும் ஓவியங்களையும் அவற்றில் படைத்து, ஒரு புதிய கலை வழியை உண்டாக்கினார்கள். காஞ்சியிலுள்ள கைலாசநாதர் ஆலயத்திலும், பன மலையிலும் அவர்களின் கலை உன்னதம் எஞ்சியுள்ள ஓவியங்களில் தென் படுகிறது. கைலாசநாதர் ஆலயத்தில் அஜந்தா ஒவியங்களில் நாம் கண்ட மென்மையும் எழிலும் தாக்கம் கொண்ட ஓவியங்கள் உள்ளன. கூடவே அவற்றில் அரசர்களின் புகழ் சொல்லும் காட்சிகளும் உள்ளன. சிவபெருமானின் குடும்பம் அங்கு ஒருவிதத்தில் அரசனின் குடும்பமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் வெளிச்சுற்றுச் சுவர்களிலுள்ள ஓவியங்களில் வேலைப்பாடுகள் கொண்ட கிரீடங்கள், அணி கலன்கள், உடைகள் போன்றவை அரசவாழ்வின் ஆடம்பரத்தைப் புலப்படுத்துவதாக உள்ளன.
ஒன்பதாம் நூற்றாண்டில் சித்தன்னவாசல் குகைக் கோயில் சமணர்களால் குடையப்பட்டது. அதன் உட்கூரையில் காணப்படும் ஓவியம் மிக உயர்ந்த கற்பனை வளமும் நளினமும் கொண்டதாக உள்ளது. ஒரு சமணத் துறவி குளத்திலிருந்து தீர்த்தங்கருக்குப் படைக்கவென்று தாமரை மலர்களைப் பறித்துச் சேகரிப்பது அங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. யானை, எருமை, வாத்துகள், மீன்கள் ஆகியவற்றை மனிதனுக்கு இணையாக குளத்தில் அமைந்துள்ள விதம் இறைவன் பார்வையில் அனைத்தும் சமம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. தாமரை மலர்கள் அதன் இயற்கை அளவினைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக உள்ளன. உற்சாகம் கொப்பளிக்க ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை வெகு அற்புதமான ஓவியமாக்கியுள்ளதைக் கண்டுதான் உணர முடியும்.
இதனிடையில் எட்டாம் நூற்றாண்டில் எல்லோராவில் ஒரு மலையே கற் கோவிலாக செதுக்கி உருவாக்கப்பட்டது. என்னளவில் இது ஒரு உலக அதிசயம். நேரில் காண்போருக்கு இதன் பிரம்மாண்டம் இனம் புரியாத பிரமிப்பைத் தோற்றுவிக்கும். அதன் அழகை உள்வாங்கிக் கொள்வதே ஒரு அனுபவமாகும். காண்போர் அதன்முன் உருவம் சுருங்கி, இல்லாமற் போகும் அதிசயம் நிகழும். இதன் சுவர்களில் முன்பு ஓவியங்கள் மிளிர்ந்தன. மேற்கூரைகள் முழுவதும் ஓவியங்களால் நிரப்பப்பட்டிருந்தன. இன்று அங்கு எஞ்சி இருக்கும் ஓவியங்கள் அவற்றின் நேர்த்தியையும் கலை முதிர்ச்சியையும் பற்றிக் கட்டியம் கூறிக் கொண்டு உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அங்கு சமண மத கற்குகைகள் குடையப்பட்டன. அவற்றிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியர்கள் அங்கு தங்கள் ஓவியங்களை பழைய வழியில் தீட்டினாலும் அவற்றில் சமணமதக் கோட்பாடுகள் சார்ந்த கருப்பொருளை காட்சிப் படுத்தி இருக் கிறார்கள். அஜந்தாவின் இயற்கையெழிலும், உருவங்களின் ஒயிலும் உள்ள இந்த ஓவியங்களில் உருவங்களின் படைப்பில் ஒரு புதிய வடிவமைப்பு காணப் படுகிறது. இதை ஒரு முக்கியமான அணுகுமுறை, வளர்ச்சி என்று வல்லுனர்கள் அடையாளம் காண்கின்றனர். இந்தியாவெங்கும் அது பின் வந்த நூற்றாண்டு களில் தொடர்ந்து கையாளப்பட்டுள்ளது.
பத்தாம் நூற்றாண்டில், சோழராட்சி தனது வல்லமையின் முழுமையையும், செழிப்பின் உச்சத்தையும் தொட்டது. மன்னன் ராஜராஜன் தனது கீர்த்தியைப் பறைசாற்றும் விதத்திலும், இறைவனைப் போற்றும்படியாகவும் தஞ்சையில் சிவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினான். ராஜராஜேஸ்வரம் என்றும், பிரகதீஸ் வரர் ஆலயம் என்றும், மக்களால் பெரியகோவில் என்றும் அது அழைக்கப் படுகிறது. மன்னன் ஆலயத்தின் மூலவரின் முன்று புறங்களிலும் இருக்கும் கற் சுவர்களில் சைவத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக ஓவியங்களைப் படைக்கச் செய்தான். சோழ அரசனின் போர் வெற்றிகளையும், பெருமை களையும் கூறும் விதமாக, சிவபிரான் திருபுரம் எரித்த காட்சி ஓவியமாக உள்ளது. அவரின் போர் முனைப்புடன் கூடிய எடுப்பான தோற்றமும், அது கண்டு அஞ்சி நடுங்கும் அரக்கர்களின் நிலையும் மிகுந்த திறமையுடனும் நுணுக்கமாகவும் ஓவியமாக்கப்பட்டுள்ளன. அவ்விதமே நடனமிடும் இரு மங்கையர் உடலில் ஓவியன் கொணர்ந்துள்ள நடன அசைவுகளை வெளிப் படுத்தும் நெளிவுகள் தமிழ் நிலத்தின் அன்றைய ஓவிய-நடன வளமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலுள்ள வண்ண அமைப்பு இதமாகவும், திடமாகவும் உள்ளது. அன்றைய மக்களின் வாழ்க்கையை, அன்று நிலவிய அரச வாழ்வின் மஹோன்னத நிலையை இந்த ஓவியங்களில் நம்மால் காணமுடிகிறது. இந்த ஓவியங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த கிரீடங்களும், அணிகலங்களும் உடை களின் நேர்த்தியும் நமக்கு இவற்றைத் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் வரண்ட மேட்டுப் பகுதியான லடாக் பிரதேசம், உண்மையில் பல கலாச்சாரங் கள் சந்தித்த நிலம். கடந்து போன காலங்களில் அது உயிர்த்துடிப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்கியது. 11ஆம் நூற்றாண்டில் லடாக், மேற்கு திபேத், கின்னௌர் (kinnaur), லாஹுல்--ஸ்பிடி (lahul-spiti) நிலப்பகுதிகளை அடக்கிய தனது நாட்டில் மன்னன் எஷெ ஓட் (yeshe od) புத்த துறவிகள் வசிப்பதற்கென்று நூற்று எட்டு விஹாரங்களை (விடுதி மண்டபங்கள்) நிர்மாணித்தான். அவற்றை நிர்மாணிக்கவும் அவற்றில் ஓவியங்கள் தீட்டவும் காஷ்மீரிலிருந்து ஓவியர்களும் கட்டிடக் கலைஞர்களும் தருவிக்கப் பட்டனர். அதுவே பின்னாட்களில் இமயம் தாண்டிச் சென்ற புத்த மதத்தின் முதுகெலும்பாக அமைந்தது.
அஜந்தா ஒவியங்களில் நாம் காணும் புத்தர் ஜாதகக்கதைகள் புத்த மதத்தின் மஹாயானா பிரிவைச் சார்ந்தவை. அதிலிருந்து கிளைத்து வளர்ந்தது தான் வஜ்ரயானா வழிபாட்டு முறை. வங்காளத்தில் பாலா ஆட்சியில் மக்களிடையே பிரபலம் அடைந்த அது நேபாளம், திபெத், லடாக் பகுதிகளில் நிலை கொண்டு விரிவடைந்தது. வஜ்ரயானா புத்தவழி, முக்தி அடைய ஒரு புதிய பாதையைக் காட்டுகிறது. தொழுபவன் கடவுள் உருவங்களை மனதில் நிறுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி தியானிப்பதன் மூலம் அந்த தெய்வங்களின் சக்தியை உள்வாங்கி, தானே அவையாக மாறுகிறான். இந்த வழிபாட்டு முறையில் ஓவியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
வறண்ட, விளைச்சலற்ற பெரும் நிலப்பகுதியான லடாக்கில் உள்ள அல்சி (alchi), புத்த துறவிகள் வாழும் விடுதி மண்டபம், பாலை நிலத்தில் உள்ள நீர்த் தடாகம் போன்றது. அதில் காணப்படும் சுவர் ஓவியங்கள் காண்போரின் மனம் மயக்க வல்லவை. அவலோகிதேஸ்வரா சிலையின் ஒற்றை துணி உடையில் காணப்படும் ஓவியங்கள் சிறப்பு மிக்கவை. இந்த சிலை மூன்றடுக்கு ஆலயத்தில் உள்ளது. காஷ்மீரின் அப்போதைய ஓவியக்கலை, கட்டிடக் கலை ஆகியவை அடைந்திருந்த உயர்வு, முதிர்ச்சி, போன்றவற்றை இவற்றின் மூலம் கண்டு கொள்ளலாம். பச்சை நிறத் தாராவின் ஓவியம் அங்குள்ளவற்றில் மிகச்சிறந்த கலையம்சங்கள் கொண்டது. பெணுருவத்தின் திரட்சியை காண்போர் மனம் கவரும் வண்ணம் ஓவியன் ஓவியமாகியுள்ளான். அதன் பக்கவாட்டில் உள்ள முகத்தில் உண்மையில் மறைந்திருக்கும் விழியையும் முகத்தை ஒட்டி ஒரு மிதக்கும் மீன்போல காட்சிப்படுத்துவது எல்லோரா ஓவியர்கள் கையாண்ட உத்தியின் தொடர்ச்சியே. அங்குதான் இந்திய ஓவியத்தில் இந்த உத்தி முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது.
காஷ்மீர ஓவியர்கள் தங்களுக்குக் கிடைத்த இந்திய ஓவிய வழிமுறையின் துணையுடன் ஒரு புதியபாதை வகுத்து ஓவியங்களைப் படைத்துள்ளனர். காந்தார கலைவழி, ஆசியக் கலைவழி இரண்டையும் இணைத்துத் தங்கள் ஓவியங்களில் உடை, அணிகலன்கள் போன்றவற்றை புதுமையானவிதத்தில் வடிவமைத்திருக் கிறார்கள்.
ஸ்பிடி பள்ளத்தாக்கில் உள்ள ‘தபு' விஹாரத்திலும் இப்படிப்பட்ட சுவர் ஓவியங்களைக் காணலாம். இந்த விஹாரம்தான் 108 விடுதிகளில் முதலாவதாகக் கட்டப்பட்டது என்று தோன்றுகிறது. வரலாறு இதன் காலத்தை கி.பி. 996கள் என்று குறிப்பிடுகிறது. இங்குள்ள ஓவியங்கள் ‘அல்சி' யின் ஓவியங்களுடன் பெரிதும் ஒத்துப் போகின்றன. இவ்வுருவங்களில் காணப்படும் நெளிவுகளும், உடல் கூறுகளின் தன்மையினின்றும் விலகி வடிவமைக்கப்பட்டுள்ள விதமும், இசைவாக இணையும் கோடுகளும் காஷ்மீர் ஓவியத்தின் சிறப்புக்கள்.
ஹிமாசலப் பிரதேசத்தில் ‘கின்னௌர்' தாலுக்காவில் அமைந்துள்ள ‘நாகோ' விஹாரம் மண்ணாலான சுற்றுச் சுவர்களைக் கொண்டது. அங்கு நான்கு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் காணப்படும் ஓவியங்களும் முந்தைய ஓவிய வழியை அடியொட்டியே உள்ளன.
வஜ்ரயானா வழியில் படைக்கப்பட்ட ஓவியங்களின் தொடர்ச்சி நீண்டது; பல நூற்றாண்டு வளர்ச்சியைத் தன்னுள் அடக்கியது; அறுபடாது தொடர்வது; இன்றும் நடைமுறையில் உள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் லலித்பூர் ஜில்லா சமவெளியிலுள்ள சிவன், விஷ்ணு ஆலயங்கள் 13ஆம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்டவை. அவை அங்கு ‘கச்சேரி' என்று அழைக்கப் படுகின்றன. ‘சோட்டி கச்சேரி' என்னும் ஆலயத்தின் விதானத்தில் உள்ள எஞ்சியுள்ள ஓவியங்கள் மிகவும் கவனத்துக்குரியவை. நலந்தா அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்த ஓவியங்களுக்குப்பின் வடக்கு சமவெளியில் நமக்குக் கிடைத்துள்ள ஓவியங்கள் இவைதான்.
11ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஓவியச்சுணக்கம் 14ஆம் நூற்றாண்டில், விஜயநகர ஆட்சியில்தான் நீங்கியது. ஓவியம் மீண்டும் பரவலாக காணப்படுவது அப்போதிலிருந்துதான். ஹம்பி போன்ற பன்நாட்டு நாகரீகம் கலந்து செழித்த நகரங்களில் ஓவியக்கலை மீண்டும் புதிய கதியில் இயங்கத் தொடங்கியது. ஹம்பியில் உள்ள விருபாக்ஷர் ஆலயத்தின் விதானம் ஓவியங்களால் நிரப்பப் பட்டுள்ளது. அவற்றில் வலிமையும் எளிமையுமான கோடுகள், காட்சிகளுக்கு ஏற்ப உருவங்களின் அசைவுகளைக் காட்டும் விதமாக உள்ளன. ஓவியன் அவற்றை எவ்விதத் தடையும் இன்றிப் படைத்திருக்கிறான். அவற்றில் விஜயநகர மன்னர்கள் பற்றியும் அவர்களது ஆட்சியின் சிறப்புகள் பற்றியுமான காட்சிகள் இந்துக் கடவுளர்களின் கதைகளுடன் பின்னப்பட்டு உள்ளன. அந்த மன்னர் களின் பெருமைக்குரிய அரச குருவான ‘வித்யாரண்யர்' இடம் பெற்றிருக்கும் ஊர்வலக் காட்சி ஒன்றும் அங்கு ஓவியமாக உள்ளது.
விருப்பன்னா, வீரன்னா என்னும் இரு நாயகர் சகோதரகள்களால் 16ஆம் நூற்றாண்டில் லேபாட்சியில் எழுப்பப்பட்ட ஆலயம் மிகவும் கவனத்துக்குரியது. அப்போது லேபாட்சி நகரம் மிக முக்கியமான வர்த்தக மையமாகவும் யாத்திரிகத் தலமாகவும் விளங்கியது. அக்கோயிலின் விதானத்தில் நாம் காணும் ஓவியங்கள் மத்தியகால இந்தியாவின் கலை வெளிப்பாடுகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவற்றில் பல்வகை நாகரீகங்களின் பதிவுகள் உள்ளன. வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நயம், முகத்திலிருந்து தனித்து மிதக்கும் விழி, உடலிலிருந்து விசிரிபோல விரியும் உடைகள் போன்ற உத்திகள் ஓவியங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கின்றன. விதவிதமான கொண்டைகளுடனும் உயர்வகை அணிகலன்களுடனும், அலங்காரம் மிக்க உடைவகைகளுடனும் ஓவியமாக்கப் பட்டுள்ள பெண்டிர் அன்றைய செல்வச் செழிப்பான வாழ்க்கையைப் பிரதி பலிப்பதாக உள்ளனர்.
16முதல் 19ஆம் நூற்றாண்டுவரை கேரளாவின் அரச மாளிகைகளிலும், ஆலயங்களிலும் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்றும் அவற்றின் மிடுக்குக் குன்றாமல் காணக்கிடைக்கின்றன. சிவ-பார்வதி, வேணுகோபாலன், மஹா விஷ்ணு, இராமன் போன்ற இந்துக்கடவுளர்களின் புகழ் கூறும் கதைகள் அவற்றில் இடம் பெற்றன. அந்த ஓவியங்களில் உள்ள உருவங்கள் இயல்பானதைக் காட்டிலும் அளவில் பன்மடங்கு பெரியனவாக உள்ளன. திண்மையும் உறுதியும் கொண்டவை அவை. அஜந்தா பாணியின் இழைதான் இங்கும் ஓடுகிறது. ஆனாலும் கேரள மண்ணின் தனித் தன்மை விரவி இந்திய ஓவியத்தின் புதிய உத்தி அங்கு கிளைக்கிறது. அந்த மண்ணுக்குச் சொந்தமான நாட்டிய நடனங்களின் அழுத்தமான உறவுகளை நம்மால் அந்த ஓவியங்களில் உணர முடியும்.
16ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தொய்ந்திருந்த ஓவியக்கலை, முகலாய மன்னர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் புத்துயிர் பெற்று உற்சாகமாக வலம் வரத் தொடங்கியது. உலகமே சிறப்பித்துக் கொண்டாடும் கையடக்க ஓவியங்கள் அப்போதுதான் ஏராளமாகப் படைக்கப்பட்டன. மன்னரின் தலை நகரமான பதேபூர் சிக்ரி அரச மாளிகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஆனால் ஓவியர்கள் சுவர் ஓவியத்துக்கான இலக்கணம் புரியாமலேயே ஓவியங் களைப் படைத்துள்ளனர். அந்த ஓவியங்கள் கையடக்க ஓவியங்களின் பெரிது படுத்தப்பட்ட வடிங்களாகவே உள்ளன. அவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பிய அங்காடிகள், யானை, குதிரைகளின் மீது பயணிப்போர், போன்ற காட்சிகளுடன் குழல் ஊதுபவன் ஓவியம் ஒன்றும் கவனம் பெறுபவை.
1531இல் மத்திய இந்தியாவில் நிலைகொண்டு இயங்கிய புந்தேல் வம்சம் ‘ஓர்ச்சா' நகரைக் கட்டியது. கோட்டையினுள் எழுப்பிய அரச மாளிகையின் சுவர்கள் ஓவியங்களால் நிரப்பப்பட்டன. 17ஆம் நூற்றாண்டில் ‘ராஜ் மஹல்' முழுவதும் சுவர் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டது. அவற்றில் மீதமாயிருக்கும் ஓவியங்களிலிருந்து அப்போது வட இந்திய நிலப்பகுதியில் பரவலாக இருந்து வந்த முகலாய-ராஜஸ்தான் ஓவிய பாணிகளின் கலப்பு ஒரு புதிய கிளையாக வளர்ந்தது என்பது நமக்கு ஒரு செய்தியாகக் கிடைக்கிறது. பொதுவாக அந்த ஓவியங்களில் ஒரு எளிமை காணப்பட்டாலும் முகலாய ஓவிய வழிப் பதிவுகள் அழுத்தமாக உள்ளன.
ஜெய்பூர் நகரத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அமர் மாளிகையில் ‘போஜன் சாலா'வில் உள்ள தேர்ந்த தொழில்முறை ஓவியர்கள் உருவாக்கிய சுவர் கோட்டுச் சித்திரங்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றில் வைணவ மதம் தொடர்பான கதைகள், நிகழ்ச்சிகள் ஓவியமாக்கப்பட்டுள்ளன. ஓவியன் அவற்றைப் படைக்கும்போது தன் வயமிழந்திருப்பானோ என்று எண்ணவைக்கும் படைப்புகள் அவை. அளவிற் பெரிய நுழைவாயில்களுக்கு இருபுறமும் அவ்வித ஓவியங்கள் உள்ளன. சுவர் ஓவியங்களைக் காட்டிலும் இவை அளவில் சிறுத்து இருப்பினும், அவற்றின் முழுமை காண்போரைச் சேர்கிறது என்பது உறுதி.
ஒரு சமயம் மிக முக்கியமான வர்த்தக மார்க்கமாக விளங்கிய பகுதி ராஜஸ்தான். ஷெகாவதி நிலப்பகுதியில் உள்ள செறிவூட்டப்பட்ட 19-20 நூற்றாண்டு கால மாளிகைகளில் பெருமளவில் சுவர் ஓவியங்கள் காணப்படு கின்றன. அவற்றில் அங்கு வர்த்தகம் செய்துவந்த மார்வாரிகளின் செல்வச் செழிப்பு விரவியுள்ளது. அந்தசமயத்தில் அங்கு நிலைகொள்ளத் தொடங்கிய ஆங்கில கலாச்சாரத்தின் பாதிப்பு இவ்வோவியங்களில் உள்ளது. மதத்துக்கு அப்பாற்பட்ட பல செய்திகள், மார்வாரி வர்த்தகர்களின் கடல்கடந்த பயண அனுபவங்கள், அவ்வோவியங்களில் இடம் பெற்றுள்ளன.
பசுமை நிறைந்த இமாலயப் பள்ளத்தாக்குகள், எவ்விதத்தடையும் இல்லாத சுவர் ஓவியங்களின் தொடர் நிகழ்ச்சிக்கான களமாக விளங்கின. 18-19ஆம் நூற்றாண்டுகளில் சம்பா பகுதியில் உள்ள ‘ரங்மஹால்'இல் எஞ்சியுள்ள சுவர் ஓவியங்களே ‘பஹாரி' சுவர் ஓவியங்களின் மேதமையைச் சொல்பவை. அவற்றில் கருப்பொருள் என்பது பெரும்பாலும் இந்துசமயம் சார்ந்ததாகவும் அப்போதைய அந்தப் பகுதியின் கையடக்க ஓவியங்களின் பாதிப்புடனும்தான் உள்ளன. உணர்ச்சி மிக்க அந்த ஓவியங்களில் வாழ்க்கையின் செல்வச் செழிப்பும் இழை யோடுவது நன்கு தெரிகிறது.
இந்திய நிலப்பகுதியின் கிழக்கு சமவெளியில் உள்ளது ஒரிசா. அங்கு தொன்மையான கலை, நாகரீகம் இரண்டும் தடையற்று செழித்தது. ‘பெகுடா' என்னும் ஊரில் இருக்கும் 18ஆம் நூற்றாண்டு ‘விரஞ்சி நாராயண்' ஆலயத்துச் சுவர் ஓவியங்கள் அந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த உதாரணமாகும். இவை கையடக்க ஓவியங்களைப் பெரிதுபடுத்தியது போல இல்லாமல், அஜந்தா பாணியைப் பின்பற்றி இந்திய சுவர் ஓவியங்களின் வழியிலேயே படைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் உள்ள கருப்பொருள் இராமாயணம்தான். இவற்றில் காணப் படும் பணிவும் மனித இனத்தின் நிலைப்பாடும் கவனத்துக்குரியவை.
பஞ்சாப் நிலத்தில் காணப்படும் சுவர் ஓவியங்களை இந்திய நிலத்தின் இறுதிக்காலப் படைப்புகளாகக் கருதலாம். இவற்றில் முகலாய ஓவிய வழியின் தடம் நன்கு தெரிந்தாலும் பஞ்சாப் பாணி கைவிடப்படவில்லை. உருவங்களின் முகங்கள் இதை உறுதி செய்கின்றன. மேலும் அவற்றின் கருப்பொருள் அந்த நிலத்தின் சமூக, வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது. மக்கள் கூட்டம் மிகுந்து இருக்கும் அமிர்தசரஸ் அங்காடி வீதிகளில் உள்ள கோயில்களிலும், கிஷன்காட் போன்ற கிராமங்களிலும், பாடியாலா கோட்டையில் கிலா முபாரக், கிலா அந்ரூன் போன்ற மாளிகைகளிலும் இந்த ஓவியங்கள் விரவிக் கிடக்கின்றன.
சிகிரியா மலை, (5ஆம் நூற்றாண்டு) பொலனருவா (12ஆம் நூற்றாண்டு) ஆகிய இலங்கைப் பகுதியில் காணப்படும் சுவர் ஓவிங்களும், 12/13ஆம் நூற்றாண்டுகளில் மாயன்மாரில் ‘பகன்' (Bagan) பகோடாகளில் படைக்கப்பட்ட சுவர் ஓவியங்களும், ஜப்பானில் உள்ள ‘ஹோரியூஜி' (Horyuji) ஆலயத்தில் உள்ள சுவர் ஓவியங்களும் இந்திய(அஜந்தா)ஓவிய மரபின் பிரதிபலிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இவ்விதமாக, அஜந்தாவில் தொடங்கிய இந்திய ஓவியவழி, இந்தியாவில் தோன்றிய புத்தமதத்துடன் இணைந்து பயணித்து, ஆசியாக் கண்டத்தில் தடம் பதித்து நிலைகொண்டு, ஒரு புதிய கலாச்சாரத்தை அங்கு நிர்மாணித்து விட்டது.

Wednesday, November 28, 2012
Oviya ithazkaL-2
Fri, 29 Oct 2004
சபைக்கு வந்தனம்,
நாம் இந்த ஓவிய சஞ்சிகைகளை காலரீதியாகப் பார்க்கலாம்.
01) The Studio - from London
இது ஒரு மாத இதழ். 1893இல் தொடங்கப்பட்டது. ஒரு பிரதியின் விலை 2ஷில்லிங் 6 பென்ஸ். தோராயமாக 30 பக்கங்கள் கொண்டது. ஓவியங்கள் வண்ணங்களிலும் கருப்பு வெள்ளை என்பதாகவும் இருந்தபோதிலும் வண்ண ஓவியங்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருந்தன. சென்னை
ஓவியக் கல்லூரியில் படித்த நாட்களில் எங்களில் சிலர் அடிக்கடி கல்லூரிக்கு அருகில் இயங்கிவந்த மூர் அங்காடிக்கு (அது இப்போது இல்லை என்பது பெரும் சோகம்) சென்று பழைய புத்தகக் கடைகளில் ஓவியம் தொடர்பான புத்தகங்களைத் தேடுவோம். அப்படித் தேடிச் சேர்த்ததில் என்னிடம் எஞ்சியது (இவற்றை பொதுவாக ஒரு குழுவாக அமைத்து எல்லோரும் படிப்போம்) October 1948, November-48 and March 1949, April -49, May-49, June-49, july-49 இதழ்கள் மட்டுமே.
02) Art News - from New York/ Founded in 1902
ஆண்டில் செப்டம்பர் முதல் மே வரை மாத இதழாகவும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மும்மாத (QUARTERLY) இதழாகவும் வெளிவந்தது. மாத இதழ் பிரதி ஒன்று $1.25/- என்றும் மும் மாத இதழ் ( ARTnews Annual, issued quarterly) பிரதி ஒன்று $5/- என்றும் அதன் முதல் பக்கத்தில் சொல்கிறது. இது அளவில் பெரியதாகவும் தோராயமாக 70 பக்கங்கள் கொண்டதாகவும் வெளிவந்தது. என்னிடம் எஞ்சியவை இரண்டு இதழ்கள் மட்டுமே. 1. volume-60/Number-8/December 1961; 2. volume 61/Number-2/April1962. sixty-first issue of continuous publication என்ற குறிப்புடன் தொடங்குகிறது முதல் பக்கம். இந்த மாதம்/ இனி வரஇருப்பவை/ ஆசிரியர் குழு பற்றின விவரம்/கட்டுரைகள்/முக்கிய ஓவியங்கள்/மற்ற பகுதி ( Departments) / மேலட்டை(cover) விவரம் என்பதாக நமக்கு ஒரு கோடிகாட்டிவிடுகிறது. பல ஓவியம் சார்ந்த விளம்பரங்கள் நிறைந்து இருக்கின்றன.
03) ARTRENDS
சென்னையிலிருந்து 1962/April மாதம் ARTRENDS A Contemporary art bulletin என்னும் குறிப்போடு ஆங்கிலத்தில் ஒரு இதழ் தொடங்கப்பட்டது. இதில் edited and published by p.v.janakiraman for PROGRESSIVE PAINTER'S ASSOCIATION, at 22, 1st cross, trustpuram, madras-24 (இது தனபால் அவர்களின் இல்ல விலாசம்) என்ற ஆசிரியர் பற்றிய குறிப்பு இருந்தபோதிலும் உண்மையில் இதன் பின்புலத்தில் இருந்தது அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்த k.c.s. பணிக்கர்தான். ஒரு பிரதியின் விலை ஒரு ரூபாய். வெறும் 8 பக்கங்கள்தான். (a news paper folded into four sheets) வழவழவென்ற தாளில் கருப்பு/வெள்ளை ஓவியங்கள், சிற்பங்களின் புகைப்படங்களை வெளியிட்டு கட்டுரைகளையும் கொண்டிருந்தது. பெட்டிச் செய்திகளாக இலக்கிய ஓவியர்களின் படைப்புக்கள் இருந்தன. வருடத்துக்கு நான்கு இதழ்கள் வந்தன. சில ஆண்டுகள் சென்றபின் அதன் ஆசிரியர் பொறுப்பு K.V.ஹரிதாஸன் என்று காணப்படுகிறது. ஹரிதாஸன் ஓவியர். தாந்திரிக அமைப்புக்களை தனது ஓவிய கருப்பொருளாக அமைத்துக்கொண்டு இயங்கி வருபவர். சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில் அங்கத்தினர். பிந்திய இதழ்களில் இது ஓவிய கிராமத்தைக் களமாகக் கொண்டு இயங்கியது. The Foremost Contemporary Indian Art Journal என்னும் குறிப்போடு சிறிது புஷ்டியாக சில விளம்பரங்களையும் கொண்டு வந்தது. அதன் விலை ரூ.5/- ஆக உயர்த்தப்பட்டது.இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து வந்தது.
04) “Lalit Kala" and "Lalit Kala Contemporary”
தலை நகரில் இயங்கி வரும் "Lalit Kala Akademi" தனது பதிப்பகத்தில் பல ஓவிய நூல்களை வெளியிட்டு வருகிறது. "Lalit Kala” "Lalit Kala Contemporary" என்று இரண்டு இதழ்களையும் தொடர்ந்து கொண்டுவருகிறது.
“Lalit Kala” (A Journel Of Oriental Art Chiefly Indian என்ற குறிப்பு கொண்டது) வின் கௌரவ முதன்மை ஆசிரியர் Karl Kandalavala உதவி ஆசிரியர் Usha Batyia. இது எப்போது வேண்டுமானாலும் வந்தது. விலையும் இதழுக்கு இதழ் மாறியது; சந்தா தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதுபற்றி ‘தொடர்ந்து வரும் விலையேற்றம் காரண மாக இதன் சந்தா தொகையை முடிவு செய்ய இயலவில்லை. எனவே ஒவ்வொரு இதழும் அப்போதைய நிலைக்கு ஏற்றபடியான விலையை கொண்டிருக்கும். முன்கூட்டியே அறிய விரும்புவோர் ஆசிரியருக்கு கடிதம் எழுதித் தெரிந்து கொள்ளலாம்' (owing to high and constantly varying costs it has not been possible to fix any subscription rate. Each issue will be priced individually. Readers desiring to be intimated about the publication and price of future issues should address their enquiries to: The Secretary, lalit kala akademi, Rabindra Bhavan, New Delhi,India) என்று ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது. என்னிடம் இருக்கும் 23ஆவது இதழின் விலை ரூ.95/- இன்னொரு இதழின் விலை ரூ.250/- முழுவதும் ஆங்கிலத்திலேயே வருகிறது. 18"நீளமும் 12" அகலமும் உள்ள இது 100 பக்கங்களுக்கு பக்கம் வண்ண, கருப்பு/வெள்ளை புகைப்படங்களுடன் கட்டுரைகள், விவாதங்கள், புதிய நூல் விமர்சனங்கள் என்று அடர்த்தியான வகையிலே இருக்கிறது.
Lalit kala Contemporary
சமகால ஓவிய/சிற்பங்கள் பற்றி பேசும் இந்த இதழ் ஆண்டுக்கு இருமுறை (மார்ச்-டிசம்பர்) என்று நிர்ணயித்துக் கொண்டு பிரதி ஒன்று ரூ.100/- என்று கடந்த 24 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஆங்கிலம்தான் இங்கும். 12"நீளம் 10" அகலம் கொண்டது இது. 64 பக்கங்கள் என்று நிர்ணயித்துக் கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. இதிலும் கட்டுரை, ஆய்வுகள், விவாதங்கள், இளைய கலைஞர் பற்றின குறிப்புகள் புத்தக விமர்சனங்கள் புகைப்படங்கள் என்று தரமான புத்தகமாக உள்ளது.
05)நுண்கலை
ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி-ஜூலை) என்று சென்னை ஓவிய நுண்கலைக் குழு கொணரும் கலை இதழ். ஆங்கிலம் தமிழ் இரண்டும் ஒரே இதழில் காணப்படுவது இதன் நூதனம். (நுண்kalai என்று இருமொழியும் கலந்த எழுத்துறு இதழின் முதல் அட்டையில் காணப்படுகிறது) 1982 இல் தொடங்கப்பட்ட இது நடுவில் சில ஆண்டுகள் குறித்த காலத்தில் வராமலும் முற்றுமாக நிறுத்தப் பட்டும்கூட இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மறுபடியும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
NUN-KALAI is a bi-annual magazine devoted to the art forms of India with special referenceto the arts and crafts of Tamilnadu. One issue every year is devoted to contemporary Art and the other to Traditional Art.Annual Subscription-Rs.10/- Single copy price-Rs.5/- editor( tamil) N.Muthuswamy என்று volume-2/No.2- July December1983 இதழில் பொருளடக்கத்தின் கீழே காணப்படுகிறது. ஆனால் அடுத்த இதழிலேயே ஆசிரியர் பற்றின குறிப்பு இல்லை. நீண்ட ஆண்டுகள் குழுவின் செயலாளர் பொறுப்பில் இருந்த திரு பாலசுப்ரமணியம் தான் இப்பணியைச் செய்துவந்தார். 1998ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் "இந்திரன்" ஆசிரியர் பொறுப்பில் நுண்கலை வந்து கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பிரதியின் விலை ரூ.25/-
06) The ART news magazine of India
மும்பயிலிருந்து 1996 முதல் வெளிவரும் இந்த மும்மாத இதழ் இது. ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகம்போல 100 பக்கங்கள் கொண்டதாகவும் ஏராளமான வண்ண ஓவியங்களின் புகைப்படங்களுடனும் பல நடப்பு விவரங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்று ஏக அமர்க்களமான இதழ். இதன் விலை பிரதி ஒன்றுக்கு ரூ.85/- ஜின்டால் என்னும் பெரும் நிறுவனத்தின் பொறுப்பில் கிரீஷ் ஷிண்டே என்பவரை ஆசிரியராகக் கொண்டு மிகவும் நவீன வடிவமைப்புடன் வருகிறது.
இதன் website is at :
Oviya ithazkaLArticle-1
This article appeared in 'maraththadi' net group on Sun, 24 Oct 2004
சபையோருக்கு வந்தனம்,
‘மரத்தடி'யின் அங்கத்தினனாக ஆனபிறகு நான் அதிகமாக எதிலும் ஓவியம் பற்றி பேசவில்லை. ஓவியம் / சிற்பம் பற்றிய சஞ்சிகைகள் நம்மிடம் இல்லை. இது தொடர்பாக என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். ஒரு விவாதமோ அல்லது மேல் விவரங்களோ வரக்கூடும் என்று எதிர்பார்த்து.
ஓவியம் / சிற்பம் தொடர்பான புத்தகங்கள் தமிழில் காணக் கிடைப்பதில்லை என்பது பொதுவாக உள்ள மனக்குறை. மற்ற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற பல மொழிகளில் இவை ஏராளமாக பதிப்பிக்கப் படுகின்றன. மிக நேர்த்தியான, தரம்மிகுந்த, விரிவான அலசல் அணுகு முறையுடன், சிறந்த ஓவியங்களின் மூலப் பிரதியின் வண்ணங்கள் மாறாமல் இவை கிடைக்கின்றன.
தமிழுக்கு இது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியுமென்றாலும் இங்கு திரும்பவும் சொல்வதில் தவறேதுமில்லை. இவ்வகைப் புத்தகங்கள் பதிப்பிட செலவு பிடிக்கும். அவற்றுக்கு விற்கும் வாய்ப்பு குறைவு. அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கவேண்டிவரும். எந்தப் பதிப்பாளரும் நஷ்டப்பட விரும்பமாட்டார். (ஓவிய நண்பர் ஆதிமூலம் தமது கைப்பணத்தை போட்டு -இரண்டு லக்ஷத்துக்குப் பக்கம் என்று கேள்வி- தமதி கோட்டோவியங்களை புத்தகவடிவில் கொணர்ந்தார். அவற்றில் பெரும்பாலான பிரதிகள் தம்மிடமே இருப்பதாக ஒரு முறை சொன்னார்) ஓவியங்களற்ற வெறும் எழுத்து வடிவத்தில் ஓவியம் பற்றி என்ன சொன்னாலும் முழுமையாகது அல்லவா? ஆனால் ஹிந்தி இந்திய அரசின் அரசு மொழியாக இருப்பதால் ஓவியம் பற்றின நூல்களை அரசாங்கமே சாஹித்ய அகாடமி, லலித கலா அகாடமி போன்ற அமைப்புகளின் மூலம் பதிப்பிக்கின்றது. இதனால் வட இந்தியாவில் சென்ற 10 நூற்றாண்டுகாலமாக புழக்கத்தில் இருந்த, அரசர்களால் போஷிக்கப்பட்ட கையடக்க ஓவியங்கள் (miniature paintings) புத்தகவடிவில் காணக் கிடைக்கின்றன. அவை ஹிந்தி, ஆங்கிலம் இரு மொழிகளிலும் அச்சடிக்கப்படுகின்றன.
தேனுகா தமிழில் சில மேலை நாட்டு ஓவியர்களைப் பற்றி புத்தகங்கள் கொண்டுவந்தார். அதற்கு வாசகரிடமிருந்து என்ன எதிர்வினை வந்தது என்பது தெரியவில்லை. தமிழில் ஓவியம் பற்றி எழுதும் மொழி எல்லோருக்கும் பரிச்சியமானதாக இருக்கமுடிவதில்லை. பெருவாரியான ஓவியம் தொடர்பான சொற்கள் மேலை நாட்டில் பயன்படுத்தியவிதமாகவே இங்கும் பின்பற்றப் படுகின்றன. குறிப்பாக நவீன சிந்தனை எல்லாக் கலை இலக்கியங்களிலும் மேலை நாட்டு தாக்கம் கொண்டதாகவே நம் நாட்டில் இருந்துவருகிறது. terminology என்று விளிக்கப்படும் வேற்றுமொழி கலைச் சொற்களுக்கு தமிழில் உரிய சொல்லைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
ஓவியம்/சிற்பம் தொடர்பான இதழ்களும் மேலை நாடுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சமகால நிகழ்வுகள் திரிபுகள் முன்னேற்றங்கள் கலைஞர்களின் தன் நிலை விளக்கங்கள் விவாதங்கள் நமக்கு இவற்றின் மூலம் தெரியக் கிடைக்கின்றன.
இந்தியாவில் எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் ‘மார்க்' ‘marg' என்னும் பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒரு இதழ் என்றவகையில் ஐம்பதுகளிலேயே கலை இதழ் கொண்டுவந்தார். மொழி ஆங்கிலம். சென்னையில் k.c.s. பணிக்கரின் மேற்பார்வையில் ‘ஆர்ட் ட்ரெண்ட்” ‘Artrend' என்னும் இதழ் ஆங்கில மொழியில் மூன்று மாதங்களுக்கு ஒன்று என்பதாக சில ஆண்டுகள் வந்து ஓரளவு இக்குறையை தீர்த்தது. தற்சமயம் “ ஆர்ட் இன்பெர்மெஷன்” ‘Art infermation" என்று ஒரு ஆங்கில இதழ் (இதுவும் மூன்று மாத இதழ்தான்) மும்பையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
மற்ற இந்திய மொழிகளில் எப்படியோ தெரியவில்லை, தமிழில் ‘தமிழ்நாடு ஓவியம் நுண்கலை' அமைப்பு (State lalit kala akademi) ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஆறு மாதத்திற்கு ஒரு இதழ் கொணர்ந்து கொண்டிருக்கிறது. இதுவும் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஓவியம்/சிற்பம் திரனாய்வாளர், கவிஞர் இந்திரன் இதன் ஆசிரியராக உள்ளார். இவை பற்றி சிறிது விரிவாக எனது எண்ணங்களையும் மதிப்பீடுகளையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். மீண்டும் வந்தனம் சொல்லி, அரவக்கோன்
rukmiNidevi-part-2
Thu, 9 Oct 2003
மஹா ஜனங்களுக்கு வந்தனம்,
எனது பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டில் அனைவரும் வேண்டாம் என்றபோதும்
பிடிவாதமாக ஓவியப் பள்ளியில் போய் சேர்ந்தேன். ஓவியர் ஸ்ரீநிவாசுலுவிடம்
அதற்காக உரிய பயிற்சி எடுத்துக்கொண்டேன். அவர்தான் என் தந்தையிடம்
சொல்லி இதற்கு உடன்படவைத்தார். பின் நாளில் நான் படித்த பெசன்ட் பள்ளியிலேயே என் ஆசிரியர் ஸ்ரீநிவாசுலுவின் இடத்தில் எனக்கு வேலை கிடைத்தது. என் ஆசிரியர்கள் பலருடன் நானும் வேலை செய்தது ஒரு நூதனமான அனுபவம். ருக்மிணி தேவி நவீன ஓவியத்தை ஒப்புக்கொண்டது இல்லை. என்னை வேலைக்கு எடுத்துக் கொண்ட சமயம் சொன்னார், "நாகராஜன் நீ ஸ்ரீநிவாசுலுவின் சீடன் என்றுதான் உனக்கு இந்த வேலை கொடுக்கிறேன். உன் நவீன ஓவியத்தை நான் வெறுக்க வில்லை. ஆனால், எனக்கு அது வேண்டாம். ஸ்ரீநிவாசுலுவின் இடத்தை நீ நிரப்ப வேண்டும்” அதற்குப் பழுதில்லாமல் நான்அங்கு ஏழு ஆண்டுகள் பணி செய்தேன். அவர் அவ்வப் போது பள்ளிக்கு வருகை தருவார். காலை இறை வணக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வார். ஓவியக் கூடத்துக்கும் வருவார். மாணாக்கர்களின் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடுவார். என் நவீன ஓவியங்களை பற்றி ஏதும் சொல்ல மாட்டார். அவைகளை படைக்க எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருந்தது.
ஒரு சமயம் நான் ராஜஸ்தான் பாணி ஓவியம் ஒன்றை பெரிதுபடுத்தி (8க்கு 5ந்து அடிகள்) எண்ணெய் வண்ணத்தில் தீட்டிக் கொண்டிருந்தேன். அது முடியும் தருவாயில் அவர் அதைக் காண நேர்ந்தது. "இந்த ஓவியம் யாருக்குப்போய்
அடையுமோ அவரைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன்" என்று சொன்னதை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் திறமையை அவர் ஒப்புக்கொண்டதாகவே பூரித்துப் போனேன்.
காளிதாசனின் "ஸாகுந்தலம்" அவரால் நாட்டிய நாடகமாக்கப்பட்டது. அது நடனமும் பாத்திரங்கள் வசனம் பேசுவதும் இணைத்து உருவாக்கப்பட்டது. வட மொழியில் அமைந்தது. அதில் வரும் மீனவன் (சகுந்தலையின் மோதிரத்தை விழுங்கிய மீனைப் பிடிப்பவன்) வேடத்தை நான் நடிக்க அவர் தேர்ந்தெடுத்தார். தினமும் பிற்பகல் ஒத்திகைக்குச் செல்வேன். அப்போது அவர் கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருக்கும் திறமையை முழுவதுமாகப் பயன் படுத்தும் திறமையை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. திரும்பத் திரும்பச் செய்து பழகி, மெருகு ஏற்றும் வழியை அவர்களுக்கு அவர் பயில் வித்தார். இரண்டாந்தரமான, ஏனோ தானோ என்பது போன்ற படைப்புக்களை அவர் எப்போதுமே ஏற்றுக்கொண்டது இல்லை. அவ்விதக் கலைஞர்களை உரிய தருணத்தில் இழுத்தும் பிடிப்பார். அவர் பேசாமல் இருந்தாலே பெரிய புகழ்ச்சியாக மற்றவர் நினைத்தனர். மேடை அமைப்பு, ஒளி அமைப்பு, உடை யலங்காரம், பக்கவாத்தியம், ஒப்பனை என்று சகல துறைகளிலும் முழுமையான முடிவுகள் கொண்டவராக இருந்தார்.
அரங்கத்தில் பின்புறம் அமையும் திரை தொங்கல் வெகு நேர்த்தியாகவும் ஓவியரின் திறமையை முழுவதும் உள்ளடக்கியதாகவும், இருந்ததில் அவருடைய பங்கு வெகு முக்கியம். ஸ்ரீநிவாசுலுவிடம் முதலில் காட்சியை விளக்கி சிறிய அளவில் ஓவியம் தீட்டச் செய்து ஒரு சரியான வடிவம் கிடைத்தபின் அதைப் பெரிய அளவில் துணியில் தீட்டும் வேலை தொடங்கும். அதில் என் பங்கும் கணிசமாக இருந்தது. தான் நினைத்தவிதத்தில் அவை உருக்கொள்ளும் விதத்தில் பலமுறை வந்து பார்ப்பார். மேம்படுத்தல், செழுமைப் படுத்துதல் போன்ற விஷயங்கள் அவ்வப்போது அவரால் பின்பற்றப்படும். கொல்கத்தா, சாந்தினி கேதன் ஆகிய இடங்களில் தமது நடன நிகழ்ச்சிகளை அளிக்க கலாக்ஷேத்திரக் கலைஞர்களுடன் எனக்கும் செல்ல வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் என்னிடம் முறையாக நடனம் பயிலும்படி யோசனை கூறினார். வேலையில் இருந்தபடி பகுதி நேரத்தில் பயில்விக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் நான் இசையவில்லை. என்வழி ஓவியம் சார்ந்ததுதான் என்பதில் நான் முடிவாக இருந்தேன்.
அவருக்குப் பின் கலாக்ஷேத்திரம் அவருடைய பயில்விக்கும் முறை, நாட்டிய நாடகங்கள், ஆகியவற்றை ஒரு அருங்காட்சியகம் போல் பேணிக் காத்து வருகிறது. அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் இன்று பலரும் நாட்டியத் துறையில் மிகப் பிரபலமாக உள்ளனர். ஆனால் அவருடன் அதை உருவாக்கியவர்களில் பலர் இன்று மறைந்துவிட்டனர் அல்லது தம்மை அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டனர். எனவே கலாக்ஷேத்திரத்தின் எதிர்காலம் ஒருகேள்விக் குறிதான்.
rukmini devi-part.1
this article was appeared in rayar kappi klub a net group on
Wed, 8 Oct 2003
மஹாஜனங்களுக்கு வந்தனம்,
இது திருமதி ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் நூற்றாண்டு வருடம். அவர் உருவாக்கிய ஸ்தாபனம் "கலாக்ஷேத்திரா”வில் இந்த ஆண்டு முழுவதும் அதைக் கொண்டாடுகின்றனர்; நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் மூலம். எனக்கு அங்கு கற்கவும் வளரவும் கிடைத்த வாய்ப்பை வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாக எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
வேதகாலத்தில் விவரிக்கப்படும் கல்விக்கூடங்களுக்கு ஒரு இன்றைய சாட்சி "கலா க்ஷேத்திரம்". வடக்கே வங்காளத்தில் "சாந்திநிகேதன்” போல தெற்கே சென்னையில் இது. தாகூரும் ருக்மிணிதேவியும் தனி மனிதராகத் தொடங்கி ஒரு இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் கலாச்சார அடையாளங்களாய் இருப்பவர்கள்.
எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என் தந்தை 'ரிஷிவேலி' (rishi vally school) என்னும் பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்து பெசன்ட் உயர் நிலைப் பள்ளியில் வரலாறு/புவியியல் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். ருக்மிணிதேவி தமது கலாக்ஷேத்திரத்துடன் இந்தப் பள்ளியையும் அமைத்து நடத்தி வந்தார்.
சென்னையின் தென் கோடியில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் நிலப் பகுதியில் அமைந்துள்ள பிரம்ம ஞான சங்கத்தின் [theosophical society] ஒரு பகுதியில் இவை அமைக்கப் பட்டன. பெரிய வனம்போலக் காணப்பட்ட இந்த இடம் ஒரு பர்ணசாலையை ஒத்திருந்தது. தேவதாசிகள் என்று குறிப்பிடப் பட்டவர்களால் காப்பாற்றி போஷிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிஷிதமாகப் பார்க்கப்பட்ட சதிர் என்று அழைக்கப்பட்ட நாட்டியக் கலையை இன்று பொது உடமையாக்கிய ருக்மிணி தேவி, தாம் அதை தமது 29வது வயதில்தான் கற்றார். மிகுந்த எதிர்ப்புக்கிடையே முதன் முதலில் பிரம்ம ஞான சங்கத்தின் வருடாந்திர சந்திப்பில் மேடை ஏறினார்.
எனக்கும் இசை, நாட்டியம், ஓவியம் போன்றவை அறிமுகமானது இங்குதான். 'கலாக்ஷேத்திரம்' தென்னாட்டுக் கலைகளை (கர்நாடக இசை, பரத நாட்டியம்{"சதிர்” என்னும் அமைப்பிலிருந்து புனரமைக்கப் பட்டது.}கத களி ) பேணிப் பரப்பும் ஸ்தாபனமாக விளங்கியது. ஓவியத்துக்கும் இடம் இருந்தது. என்றாலும் பரத நாட்டியம்தான் முதன்மையான கலையாக பயில்விக்கப் பட்டது. பள்ளியில் ஓவிய வகுப்புக்கள் மாணவர்களுக்கு தங்கள் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடம் அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கு திரு ஸ்ரீநிவாசுலுதான் ஓவியர். என் குருவும் கூட.
ருக்மிணி தேவி பற்றி இங்கு நான் சொல்ல விழைவது ஒரு சிறுவனாக, இளைஞனாக என் பார்வையில் அவர் காணக் கிடைத்தது பற்றித்தான். கலாக்ஷேத்திரா அமைந்த பகுதியை வசந்த சாலையிலிருந்து தாமோதர புரம், வண்ணான் துறை வழியாக திருவான்மியூர் செல்லும் சாலை பிரித்தது. ( இது தெற்கு வடக்காக அமைந்தது.) மேற்குப்பகுதி பள்ளிக்கும், கிழக்குப்பகுதி கலைப் பள்ளிக்குமாக இருந்தது. அனேகமாக எல்லா கற்பிக்கும் கூடங்களும் தென்னம்கூரை குடில்கள்தான். மூன்றடிச் சுவர் எழுப்பி, மூங்கில் பிளாச்சுகளால் தடுக்கப்பட்டவை. சிமென்ட் தரை. அங்கு கண்ணாடிக் கொட்டகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு பெரிய (சுமாராக பத்தடி அகலம் ஆறடி உயரம் இருக்கும்) கண்ணாடி இருக்கும். தமது நடனப் பயிற்சியை அங்குதான் அவர் செய்வார். தமது உருவத்தை கண்ணாடியில் பார்த்தபடி பயிற்சி செய்து அதில் மெருகு கூட்டுவார். நாங்கள் ஜன்னல் வழியாக எட்டி வேடிக்கை பார்ப்போம்.
(இப்படித்தான் என் தங்கை கிருஷ்ணவேணி பார்த்து அதைப்போல ஆடக் கண்டு
அவளுக்கு நாட்டியம் பயில்விக்க என் தந்தையிடம் சம்மதம் பெற்று அவளை
சிறந்த நாட்டியக் கலைஞராக்கியது வேறு கதை.)
எப்போதும் அவரை பிறர் ஒரு பயம் கலந்த மரியாதையுடனேயே அணுகுவர். செயலில் சுத்தம், உன்னதம், முழு கவனம் இவற்றை எல்லோரிடமும் எதிர்பார்ப்பார், அவை இல்லாதபோது சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டார். இசை, நாட்டியத் துறையில் அப்போது மிகப் பிரபலமானவர்கள் (பாபநாசம் சிவன், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார், மைலாப்பூர் கௌரிஅம்மாள், சந்துப் பணிக்கர் அவர்களில் சிலர்) பல ஆண்டுகள் வந்து தங்கி பல நாட்டிய நாடகங்களுக்கு மெட்டு அமைத்தும், நடனம் பயில்விப்பதில் உதவியும் செய்தனர்.
( வளரும்)
Monday, July 23, 2012
Subscribe to:
Posts (Atom)